< 2 சாமுவேல் 19 >

1 “தாவீது அரசன் அப்சலோமுக்காக அழுது துக்கம்கொண்டாடுகிறான்” என யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
இதோ, ராஜா அப்சலோமிற்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2 அரசன் தன் மகனுக்காகத் துக்கங்கொண்டிருக்கிறான் என படைவீரர் கேள்விப்பட்டதால், அன்றையதினம் அந்த முழு படைக்கும் கிடைத்த வெற்றி துக்கமாய் மாறியது.
ராஜா தம்முடைய மகனுக்காக மனவேதனை அடைந்திருக்கிறார் என்று அன்றையதினம் இராணுவத்தினர் கேள்விப்பட்டார்கள்; அதற்காக அன்றையதினம் அந்த வெற்றி இராணுவங்களுக்கெல்லாம் துக்கமாக மாறினது.
3 போரிலிருந்து தப்பி ஓடுகிற படைவீரர் வெட்கத்துடன் இரகசியமாய் வருவதைப்போல், இந்த வீரர்கள் அன்றையதினம் பட்டணத்துக்குத் திரும்பினார்கள்.
யுத்தத்தில் பயந்து ஓடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருடனைப்போல, மக்கள் அன்றையதினம் திருட்டுத்தனமாக பட்டணத்திற்குள் வந்தார்கள்.
4 அவ்வேளையில் அரசன் தன் முகத்தை மூடிக்கொண்டு, “என் மகன் அப்சலோமே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று சத்தமிட்டு அழுதான்.
ராஜா தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, மிகவும் சத்தமாக: என் மகனான அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
5 அப்பொழுது யோவாப் அரசனிடம் சென்று, “இன்று உம்முடைய உயிரையும், உமது மகன்களின், மகள்களின் உயிர்களையும், உமது மனைவிகளின், மறுமனையாட்டிகளின் உயிர்களையும் காப்பாற்றிய உம்முடைய வீரர்களையெல்லாம் சிறுமைப்படுத்தியிருக்கிறீரே!
அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவிடம் போய்: இன்று உம்முடைய உயிரையும், உம்முடைய மகன்கள், மகள்கள் மற்றும் மனைவிகளின் உயிரையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் உயிரையும் பாதுகாத்த உம்முடைய போர்வீரர்கள் எல்லோருடைய முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களை நேசித்து, உம்மை நேசிக்கிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.
6 உம்மை வெறுக்கிறவர்களை நேசிக்கிறீர்; உம்மை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். படைத்தளபதிகளும், அவர்களுடைய வீரர்களும் உமக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று நீர் வெளிப்படையாகக் காட்டிவிட்டீர். இன்று நாங்களெல்லோரும் இறந்து, அப்சலோம் உயிரோடிருந்திருந்தால் அது உமக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும் என எனக்குத் தெரிகிறது.
தளபதிகளும், வீரர்களும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கச்செய்கிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று இறந்துபோனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாக இருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.
7 இப்பொழுதும் நீர் வெளியே போய் உம்முடைய வீரர்களை உற்சாகப்படுத்தும். அப்படி நீர் செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவனும் இருக்கமாட்டானென்று யெகோவாமேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இது உம்முடைய இளமைப்பருவம் தொடங்கி இன்றுவரை உமக்கு நேரிட்ட எல்லா தீமைகளைப் பார்க்கிலும் அதிக மோசமாயிருக்கும்” என்றான்.
இப்போதும் எழுந்து வெளியே வந்து, உம்முடைய வீரர்களோடு அன்பாகப் பேசும்; நீர் வெளியே வராமலிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடு தங்கியிருப்பதில்லை என்று யெகோவாமேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயது முதல் இதுவரைக்கும் உமக்கு நடந்த எல்லாத் தீமையைவிட, அது உமக்கு அதிகத் தீமையாக இருக்கும் என்றான்.
8 எனவே அரசன் எழுந்துபோய் பட்டண வாசலிலுள்ள தன் இருக்கையில் அமர்ந்தான். “அரசன் வாசலில் உட்கார்ந்திருக்கிறார்” என்று படைவீரருக்கு அறிவிக்கப்பட்டபோது அவர்கள் அனைவரும் அவனுக்கு முன்பாக வந்தார்கள். இதற்கிடையில் இஸ்ரயேலர் தங்கள் வீடுகளுக்கு தப்பி ஓடிப்போனார்கள்.
அப்பொழுது ராஜா எழுந்துபோய், நகரவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா நகரவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, மக்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலர்களோ தங்களுடைய வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.
9 இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலுமுள்ள மக்கள் தங்களுக்கு வாக்குவாதம்பண்ணி, “அரசர் எங்களை எங்கள் பகைவரிடமிருந்து விடுவித்தார். எங்களைப் பெலிஸ்தியரிடமிருந்து தப்புவித்தவரும் அவரே. இப்போது அப்சலோமுக்குப் பயந்து, தான் தப்புவதற்காக நாட்டைவிட்டு ஓடினாரே.
இஸ்ரவேலுடைய எல்லா கோத்திரங்களிலுமுள்ள எல்லா மக்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி, அவர்கள்: ராஜா நம்முடைய எதிரிகளின் கைக்கு நம்மை விலக்கிவிட்டார், அவர்தான் பெலிஸ்தர்களின் கைக்கு நம்மை பாதுகாத்தார்; இப்போதோ அப்சலோமிடம் தப்பிக்க, தேசத்தைவிட்டு ஓடிப்போனார்.
10 நம்மை அரசாளும்படி நாங்கள் அபிஷேகம் செய்த அப்சலோமும் போரில் இறந்துவிட்டான்; எனவே மறுபடியும் அரசன் தாவீதை அழைத்து வருவதைப் பற்றி ஏன் ஒன்றும் பேசாமலிருக்கிறீர்கள்?” எனத் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
௧0நமக்கு ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்ட அப்சலோம் யுத்தத்திலே இறந்தான்; இப்போதும் ராஜாவைத் திரும்ப அழைத்துவராமல் நீங்கள் சும்மாயிருக்கிறது என்ன என்று சொல்லிக்கொண்டார்கள்.
11 எனவே தாவீது அரசன், சாதோக், அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருவரிடமும் செய்தியை அனுப்பி, “நீங்கள் யூதாவின் முதியவர்களிடம்போய், ‘இஸ்ரயேல் முழுவதும் பேசிக்கொண்டவைகள் அரசனின் இருப்பிடத்திற்கு எட்டியது. அரசரை அரண்மனைக்கு அழைத்துவர ஏன் நீங்கள் தாமதிக்கிறீர்கள்?
௧௧இப்படி இஸ்ரவேலர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறதை, ராஜா இருக்கிற வீட்டில் அவன் கேள்விப்பட்டபடியால், தாவீது ராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்திற்கு ஆள் அனுப்பி, நீங்கள் யூதாவின் மூப்பர்களோடு பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டிற்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பின்னே போகிறது என்ன?
12 நீங்கள் என் சகோதரர்; என் இரத்தமும், மாம்சமுமானவர்கள். எனவே நீங்கள் அரசனை மறுபடியும் அழைத்து வருவதற்குத் தயங்குவது ஏன்?’ எனக் கேளுங்கள்.
௧௨நீங்கள் என்னுடைய சகோதரர்கள், நீங்கள் என்னுடைய எலும்பும் என்னுடைய சதையுமானவர்கள் அல்லவோ?; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் கடைசியாக இருக்கிறது என்ன என்று சொல்லுங்கள்.
13 மேலும் நீங்கள் அமாசாவிடம், ‘நீ என் தசையும், இரத்தமுமானவனல்லவா? நான் உன்னை இன்றுமுதல் யோவாபுக்குப் பதிலாக என் படைகளுக்குத் தலைவனாக்காவிட்டால் இறைவன் எவ்வளவு அதிகமாகவும் தண்டிக்கட்டும்’ எனச் சொல்லுங்கள்” என்று தனக்காக சொல்லும்படி சொல்லி அனுப்பினான்.
௧௩நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என்னுடைய எலும்பும் என்னுடைய சதையும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்த நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாக இல்லாவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யட்டும் என்று சொல்லச்சொன்னான்.
14 இவ்விதமாக தாவீது அரசன் யூதா மனிதர் அனைவரின் மனதையும் கவர்ந்து அவர்களை ஒரே மனமாக இணங்கச்செய்தான். அதனால் அவர்கள் அரசனிடம் ஆளனுப்பி, “அரசரே! நீரும் உம்மோடிருக்கும் மக்களும் திரும்பிவாருங்கள்” என்றார்கள்.
௧௪இப்படியே யூதாவின் எல்லா மனிதர்களுடைய இருதயத்தையும் ஒரு மனிதனுடைய இருதயத்தைப்போல் இணங்கச்செய்ததால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா மனிதர்களோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
15 எனவே அரசன் யோர்தான்வரை வந்தான். யூதா மக்கள் அரசனைச் சந்தித்து, அவனை யோர்தானைக் கடந்து அழைத்துவரும்படி கில்காலுக்கு வந்தார்கள்.
௧௫ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்வரை வந்தபோது, யூதா மனிதர்கள் ராஜாவுக்கு எதிராகப்போய், ராஜாவை யோர்தானைக் கடக்கச்செய்த கில்கால்வரை வந்தார்கள்.
16 அப்பொழுது பகூரிம் ஊரானான பென்யமீன் கோத்திரத்தின் கேரா என்பவனின் மகன் சீமேயியும் யூதா மக்களுடன் தாவீது அரசனைச் சந்திப்பதற்கு விரைந்து வந்தான்.
௧௬பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனியனான கேராவின் மகன் சீமேயியும் விரைந்து, யூதா மனிதர்களோடு தாவீது ராஜாவுக்கு எதிராகப்போனான்.
17 அவனோடு பென்யமீன் கோத்திரத்தார் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டுப் பராமரிப்பாளனான சீபாவும், அவனுடைய பதினைந்து மகன்களும், இருபது பணியாட்களும் வந்தார்கள். அவர்கள் அரசன் இருந்த யோர்தானுக்கு விரைந்து சென்றார்கள்.
௧௭அவனோடு பென்யமீன் மனிதர்கள் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டின் வேலைக்காரனான சீபாவும், அவனோடு அவனுடைய பதினைந்து மகன்களும், அவனுடைய இருபது வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அவர்கள் ராஜாவுக்கு முன்பாக யோர்தானை வேகமாகக் கடந்து போனார்கள்.
18 அவர்கள் அரச குடும்பத்தார் துறைமுகத்தைக் கடந்துபோவதற்கு விரும்பியவற்றையெல்லாம் செய்வதற்காகவே துறைமுகத்தைக் கடந்துபோனார்கள். அப்பொழுது கேராவின் மகன் சீமேயி யோர்தானைக் கடந்தபோது அரசனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து வணங்கினான்.
௧௮அவர்கள் ராஜாவின் குடும்பத்தினரை இக்கரைக்கு கொண்டுவந்து சேர்க்கவும், அவன் விரும்பும் காரியத்திற்கு உதவவும், ஒரு படகு இக்கரைக்கு வந்தது; அப்பொழுது கேராவின் மகனான சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து,
19 அவன் அரசனிடம், “என் தலைவர் என்னைக் குற்றவாளி என்று எண்ணாதிருப்பீராக. என் தலைவனான அரசன் எருசலேமைவிட்டுப் புறப்பட்ட நாளில், உம்முடைய அடியான் எப்படி பிழை செய்தேன் என்பதை நினைவிற்கொள்ள வேண்டாம். அரசர் அதைத் தனது மனதிலிருந்து எடுத்துப்போடுவாராக.
௧௯ராஜாவைப் பார்த்து: என்னுடைய ஆண்டவன் என்னுடைய அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவான என்னுடைய ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டுவருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தம்முடைய மனதில் வைக்காமலும் இருக்கட்டும்.
20 உம்முடைய அடியானாகிய நான் பாவம் செய்தேன் என அறிந்திருக்கிறேன். ஆனாலும் என் தலைவனாகிய அரசனை வந்து சந்திப்பதற்கு யோசேப்பின் குடும்பத்தார் அனைவருக்குள்ளும் நானே முதலாவதாக வந்திருக்கிறேன்” என்றான்.
௨0உமது அடியானான நான் பாவம்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்; இப்போதும், இதோ, ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு எதிராக வருவதற்கு, யோசேப்பின் குடும்பத்தார்கள் அனைவரையும் நான் இன்று முந்தி வந்தேன் என்றான்.
21 அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய், “யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவரை சீமேயி சபித்தானே, அதற்காக அவனைக் கொலைசெய்ய வேண்டாமோ?” என்றான்.
௨௧அப்பொழுது செருயாவின் மகனான அபிசாய் பதிலாக: யெகோவா அபிஷேகம்செய்தவரைச் சீமேயி சபித்ததால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.
22 அதற்கு அரசன் தாவீது, “செருயாவின் மகன்களே! உங்களுக்கும், எனக்கும் இதில் பொதுவாக என்ன இருக்கிறது? இன்று எனக்கு நீங்கள் எதிரிகளாய் மாறியிருக்கிறீர்கள். இன்று இஸ்ரயேலில் யாராவது கொல்லப்படலாமோ? இன்று நான் இஸ்ரயேலுக்கு அரசனாயிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாதோ?” என்றான்.
௨௨அதற்கு தாவீது: செருயாவின் மகன்களே, இன்று நீங்கள் எனக்கு எதிரிகளாவதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,
23 எனவே அரசன், சீமேயிக்கு, “நீ சாகமாட்டாய்” என்று ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
௨௩ராஜா சீமேயியைப் பார்த்து: நீ இறப்பதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.
24 சவுலின் பேரன் மேவிபோசேத்தும் அரசனைச் சந்திக்கும்படி வந்தான். அரசன் வெளியேறிய நாள் முதல், அவர் பாதுகாப்பாகத் திரும்பி வரும்வரை அவன் தன் கால்களைக் கவனிக்காமலும், மீசையை வெட்டாமலும், உடைகளைக் கழுவிக் கொள்ளாமலும் இருந்தான்.
௨௪சவுலின் மகனான மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போன நாள்முதல் அவன் சமாதானத்தோடு திரும்பிவருகிற நாள்வரை அவன் தன்னுடைய கால்களைச் சுத்தம் செய்யவும் இல்லை, தன்னுடைய தாடியைச் சவரம் செய்யவும் இல்லை; தன்னுடைய ஆடைகளை வெளுக்கவுமில்லை இல்லை.
25 அவன் எருசலேமிலிருந்து அரசனைச் சந்திக்க வந்தபோது அரசன் அவனிடம், “மேவிபோசேத்தே! நான் போகும்போது நீ ஏன் என்னுடன் வரவில்லை” என்று கேட்டான்.
௨௫அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிராக வருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடு வராமற்போனது என்ன என்று கேட்டான்.
26 அதற்கு அவன், “என் தலைவனாகிய அரசே! உம்முடைய அடியவன் முடவனாகையால் நான் என் பணியாளன் சீபாவிடம், ‘என் கழுதைமேல் சேணம் வைத்து அதில் ஏற்றி அரசனுடன் போகும்படி உதவிசெய் எனக் கேட்டேன்.’ ஆனால் என் பணியாளன் சீபா எனக்குத் துரோகம் செய்தான். உதவிசெய்யாமல் ஏமாற்றினான்.
௨௬அதற்கு அவன்: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, என்னுடைய வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான்; உமது அடியானான நான் முடவனானபடியால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடு போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.
27 அதுவுமன்றி என் தலைவனாகிய அரசனுக்கு என்னைப்பற்றி வீண் அவதூறு சொன்னான். என் தலைவனாகிய அரசன் எனக்கு இறைவனின் தூதனைப்போல் இருக்கிறீர். எனவே உமக்கு விருப்பமானதைச் செய்யும்.
௨௭அவன் ராஜாவான என்னுடைய ஆண்டவனிடம் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவான என்னுடைய ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாகத் தோன்றுகிறபடி செய்யும்.
28 நானும் என் பாட்டனாரின் சந்ததியினரும் என் தலைவனாகிய அரசனிடம் மரணத்தைத் தவிர வேறு எதையும் பெற தகுதியற்றவர்களாய் இருந்தோம். ஆனாலும் உமது அடியவனுக்கு உம்முடைய பந்தியில் அமர்ந்திருப்பவர்களுடன் ஒரு இடத்தைக் கொடுத்தீர்; ஆதலால் இப்பொழுதும் உம்மிடம் வேண்டுகோள் விடுப்பதற்கு எனக்கு என்ன தகுதியிருக்கிறது?” எனப் பதிலளித்தான்.
௨௮ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு முன்பாக என்னுடைய தகப்பன் வீட்டார்கள் எல்லோரும் மரணத்திற்கு ஏதுவாயிருந்தார்களே தவிர, மற்றப்படி அல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடு உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவினிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்.
29 அப்பொழுது அரசன் அவனிடம், “இதைப்பற்றி நீ இன்னும் அதிகமாய் பேசுவானேன்; உங்கள் உரிமை நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளும்படி சீபாவுக்கும், உனக்கும் கட்டளையிடுகிறேன்” என்றான்.
௨௯அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன்னுடைய காரியத்தைக் குறித்து அதிகமாக ஏன் பேசவேண்டும்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.
30 அதற்கு மேவிபோசேத் அரசனிடம், “இப்பொழுது என் தலைவனான அரசன் பாதுகாப்பாகத் திரும்பி வந்திருக்கும்போது எனக்கு வேறொன்றும் தேவையில்லை. அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும்” என்றான்.
௩0அதற்கு மேவிபோசேத் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவன் சமாதானத்தோடு தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
31 கிலேத்தியனான பர்சிலாயும், அரசனுடன் யோர்தானைக் கடக்கவும், அங்கிருந்து வழியனுப்புவதற்கும் ரோகிலிமிலிருந்து தாவீதிடம் வந்திருந்தான்.
௩௧கீலேயாத்தியனான பர்சிலாயியும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்வரை ராஜாவை வழியனுப்ப, அவனோடு யோர்தானின் துறைமுகம்வரை கடந்துவந்தான்.
32 அப்பொழுது பர்சிலாய் எண்பது வயதுடைய கிழவனாயிருந்தான். அவன் பெரிய செல்வந்தனாய் இருந்தபடியால், அரசன் மக்னாயீமில் தங்கியிருந்த காலத்தில் அவனே அவனுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து உதவியிருந்தான்.
௩௨பர்சிலா எண்பது வயது முதியவனாக இருந்தான்; ராஜா மகனாயீமிலே தங்கியிருக்கும்வரை அவனைப் பராமரித்துவந்தான்; அவன் மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தான்.
33 அரசன் பர்சிலாயிடம், “நீ என்னுடன் யோர்தான் ஆற்றைக் கடந்துவந்து என்னுடன் எருசலேமில் தங்கியிரு; நான் உனக்குத் தேவையானவற்றைக் கொடுப்பேன்” என்றான்.
௩௩ராஜா பர்சிலாயியைப் பார்த்து: நீ என்னோடு வா, எருசலேமிலே உன்னை என்னிடத்திலே வைத்து பராமரிப்பேன் என்றான்.
34 ஆனால் பர்சிலாய் அரசனிடம், “நான் அரசனோடுகூட எருசலேமுக்கு வருவதற்கு இன்னும் எவ்வளவு காலம் உயிரோடிருக்கப்போகிறேன்?
௩௪பர்சிலாயி ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடு எருசலேமிற்கு வருவதற்கு, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எவ்வளவு?
35 இப்பொழுது எனக்கு எண்பது வயது; எனக்கு நன்மையானதையும், நன்மையல்லாததையும் பகுத்தறிய முடியுமா? உமது அடியானாகிய நான் சாப்பிடுவதையும், குடிப்பதையும் ருசிக்க முடியுமா? ஆண், பெண் பாடகர்களின் குரல்களை இன்னும் கேட்கமுடியுமா? உமது அடியவன் என் தலைவனாகிய அரசனுக்கு மற்றொரு பாரமாக ஏன் இருக்கவேண்டும்.
௩௫இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும், தீமையானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசியாக இருக்குமோ? பாடகர்கள் பாடகிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனான நான் இனி ராஜாவான என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?
36 அரசருடன் யோர்தானைக் கடந்து சிறிது தூரம் வருவேன்; அரசன் ஏன் எனக்கு இவ்விதம் வெகுமதி கொடுக்கவேண்டும்.
௩௬அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்வரை ராஜாவோடு வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
37 நான் என் சொந்தப் பட்டணத்துக்குப் போய் மரித்து என் தாய் தந்தையரின் கல்லறையில் அடக்கம்பண்ணும்படி என்னைப் போகவிடும்; ஆனால் உம்முடைய அடியவனாகிய கிம்காம் இங்கிருக்கிறான். அவன் என் தலைவனாகிய அரசருடன் ஆற்றைக் கடந்து வரட்டும். உமக்கு விருப்பமானவற்றை அவனுக்குச் செய்யும்” என்றான்.
௩௭நான் என்னுடைய ஊரிலே இறந்து, என்னுடைய தாய் தகப்பன்மார்களுடைய கல்லறையில் அடக்கம்செய்யும்படி, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானான கிம்காம், ராஜாவான என்னுடைய ஆண்டவனோடு வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.
38 அதற்கு அரசன், “கிம்காம் என்னுடன் வரட்டும். உனக்கு மகிழ்ச்சி கொடுப்பதையெல்லாம் நான் அவனுக்குச் செய்வேன். நீ விரும்புவது எதையும் உனக்காக நான் அவனுக்குச் செய்வேன்” என்றான்.
௩௮அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடு வரட்டும்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு செய்து, நீ என்னிடத்தில் கேட்டுக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
39 மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தபின் அரசனும் கடந்தான். அரசன் பர்சிலாயை முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பர்சிலாய் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.
௩௯மக்கள் எல்லோரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாயியை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
40 அரசன் ஆற்றைக் கடந்து கில்காலுக்குச் சென்றான். கிம்காமும் அவனோடு கடந்துபோனான். யூதாவின் படைவீரரும் இஸ்ரயேல் படையில் அரைப்பகுதியினரும் அரசனை அழைத்துச் சென்றார்கள்.
௪0ராஜா கடந்து, கில்கால்வரை போனான்; கிம்காம் அவனோடு வந்தான்; யூதாவின் இராணுவம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதி இராணுவங்களும், ராஜாவை இக்கரைக்கு அழைத்துவந்தபின்பு,
41 இஸ்ரயேல் மக்களனைவரும் தாவீது அரசனிடம் வந்து, “எங்கள் சகோதரராகிய யூதா மக்கள் அனைவரும் அரசரையும் அவர் குடும்பத்தாரையும் வீரர்களோடு ஏன் கள்ளத்தனமாக யோர்தானைக் கடக்கப்பண்ணி இங்கே கொண்டுவந்தார்கள்?” எனக் கேட்டார்கள்.
௪௧இதோ, இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் ராஜாவினிடம் வந்து, ராஜாவைப் பார்த்து: எங்களுடைய சகோதரர்களான யூதா மனிதர்கள் திருட்டுத்தனமாக உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடு இருக்கிற தாவீதின் மனிதர்கள் அனைவரையும், யோர்தான் நதியைக் கடக்கச்செய்தது என்ன என்றார்கள்.
42 அதற்கு யூதா மக்களனைவரும் இஸ்ரயேலரிடம், “அரசர் எங்களுக்கு நெருங்கிய உறவினர் என்பதால் இப்படிச் செய்தோம். அதற்காக நீங்கள் ஏன் கோபமடைய வேண்டும்? அரசரின் உணவை நாங்கள் சாப்பிட்டோமா? அவருடைய பொருட்களில் எதையாவது எங்களுக்காக எடுத்துக்கொண்டோமா?” என்றார்கள்.
௪௨அப்பொழுது யூதா மனிதர்கள் எல்லோரும் இஸ்ரவேல் மனிதர்களுக்கு பதிலாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபப்படுவது என்ன? நாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கி சாப்பிட்டோமா? எங்களுக்குப் பரிசு கொடுக்கப்பட்டதா? என்றார்கள்.
43 எனவே இஸ்ரயேல் மக்கள் யூதா மக்களிடம், “அரசர் எங்களுக்கு உங்களைவிட பத்து மடங்கு நெருங்கிய உறவினர்; உங்களைவிட எங்களுக்கு தாவீதிடம் அதிக உரிமை உண்டு. எனவே எங்களை ஏன் வெறுப்புடன் நடத்துகிறீர்கள்? அரசனை திரும்ப அழைத்துவர வேண்டுமென முதலில் சொன்னவர்கள் நாங்களல்லவா?” என்றார்கள். ஆனால் யூதா மக்களோ இஸ்ரயேல் மக்களைவிட அதிக கடுமையாக அவர்களுக்குப் பதிலளித்தார்கள்.
௪௩இஸ்ரவேல் மனிதர்களோ யூதா மனிதர்களுக்கு பதிலாக: ராஜாவிடம் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைவிட எங்களுக்கு தாவீதிடம் அதிக உரிமை உண்டு; பின்னே ஏன் எங்களை அற்பமாக நினைத்தீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனிதர்களின் பேச்சைவிட யூதா மனிதர்களின் பேச்சு பெலத்தது.

< 2 சாமுவேல் 19 >