< 2 சாமுவேல் 12 >

1 யெகோவா நாத்தானை தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் தாவீதிடம் வந்து அவனிடம், “ஒரு பட்டணத்தில் இரண்டு மனிதர் இருந்தார்கள், ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை.
யெகோவா நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள், ஒருவன் செல்வந்தன், மற்றவன் தரித்திரன்.
2 செல்வந்தனுக்கு ஏராளமான ஆடுகளும், மாடுகளும் இருந்தன.
செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிக அதிகமாக இருந்தது.
3 ஏழைக்கோ தான் வாங்கி வளர்த்த ஒரு செம்மறியாட்டுக் குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லை. அது அவனோடும், அவன் பிள்ளைகளோடும் வளர்ந்தது; அது அவன் உணவை சாப்பிட்டு, அவன் பாத்திரத்தில் குடித்து, அவன் மடியில் நித்திரை செய்தது. அது அவனுடைய மகளைப்போல் இருந்தது.
தரித்திரனுக்கோ தான் விலைக்கு வாங்கி வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாமல் இருந்தது; அது அவனோடும் அவனுடைய பிள்ளைகளோடும் இருந்து வளர்ந்து, அவனுடைய அப்பத்தை சாப்பிட்டு, அவனுடைய பாத்திரத்திலே குடித்து, அவனுடைய மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.
4 “இப்படியிருக்கையில் ஒரு நாள் அச்செல்வந்தனிடம் ஒரு வழிப்போக்கன் வந்தான்; அந்த வழிப்போக்கனுக்கு உணவு தயாரிப்பதற்குத் தன் மந்தையில் ஒரு செம்மறியாட்டையோ, மாட்டையோ அந்தச் செல்வந்தன் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக அந்த ஏழைக்குச் சொந்தமான செம்மறியாட்டுக் குட்டியைப் பிடித்துத் தன்னிடம் வந்தவனுக்கு உணவு தயாரித்தான்” என்றான்.
அந்த செல்வந்தனிடம் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல்செய்ய, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனமில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனிதனுக்குச் சமையல்செய்யச் சொன்னான் என்றான்.
5 இதைக் கேட்ட தாவீதிற்கு அந்த செல்வந்தன்மேல் கோபம் மூண்டது; எனவே தாவீது நாத்தானிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் அந்த மனிதன் சாகவே தகுதியுள்ளவன் என்பதும் நிச்சயம்.
அப்பொழுது தாவீது: அந்த மனிதன்மேல் மிகவும் கோபமடைந்து, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனிதன் மரணத்திற்கு ஏதுவானவன் என்று யெகோவாவுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
6 அவன் இரக்கமில்லாமல் இப்படியான செயலைச் செய்தபடியால், அவன் அந்த செம்மறியாட்டுக் குட்டிக்காக நான்கு மடங்கு விலை கொடுக்கவேண்டும்” என்றான்.
அவன் இரக்கமற்றவனாக இருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.
7 அப்பொழுது நாத்தான் தாவீதிடம், “நீரே அந்த மனிதன். இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் சவுலிடமிருந்து உன்னை விடுவித்து இஸ்ரயேலரின் அரசனாக உன்னை அபிஷேகம் பண்ணினேன்.
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனிதன்; இஸ்ரவேலின் தேவனான யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,
8 உன் தலைவனுடைய வீட்டையும், அவனுடைய மனைவிகளையும் உனக்குக் கொடுத்தேன். அத்துடன் இஸ்ரயேல் குடும்பத்தையும், யூதா குடும்பத்தையும் கொடுத்தேன். இவையெல்லாம் உனக்குப் போதாதிருந்தால், என்னிடம் கேட்டிருந்தால் இதைவிட அதிகமாகவும் நான் உனக்குக் கொடுத்திருப்பேன் அல்லவா?
உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய பெண்களையும் உன்னுடைய மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கொடுத்தேன்; இது போதாமலிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
9 இப்படியிருக்க நீ யெகோவாவுக்கு அருவருப்பான செயலை செய்து அவருடைய வார்த்தைகளை ஏன் புறக்கணித்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக்கொன்று, அவன் மனைவியை உன் மனைவியாக்கினாய்; அம்மோனியரின் வாளால் நீதானே உரியாவை கொலைசெய்தாய்.
யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை செய்தது என்ன? ஏத்தியனான உரியாவை நீ பட்டயத்தால் இறக்கச்செய்து, அவனுடைய மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் இராணுவத்தினர்களின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
10 இப்படியாக நீ என்னை அவமதித்து, ஏத்தியனான உரியாவின் மனைவியை உனக்குச் சொந்தமாக எடுத்தபடியால் ஒருபோதும் உன் குடும்பத்தைவிட்டு வாள் நீங்காது.’
௧0இப்போதும் நீ என்னை அசட்டைசெய்து, ஏத்தியனான உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியால், பட்டயம் எப்பொழுதும் உன்னுடைய வீட்டைவிட்டு நீங்காமலிருக்கும்.
11 “மேலும், யெகோவா சொல்லுகிறதாவது: ‘உன் சொந்தக் குடும்பத்திலிருந்தே உனக்குப் பேரழிவை வரப்பண்ணுவேன், உன் கண்முன்னே உன் மனைவிகளை உனக்கு நெருங்கிய ஒருவனுக்குக் கொடுப்பேன். அவன் அவர்களுடன் பகிரங்கமாக உறவுகொள்வான்.
௧௧யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான்.
12 நீயோ இதை மறைவில் செய்தாய்; நானோ இஸ்ரயேலர் அனைவருக்கும் முன்பாகவும் பகிரங்கமாய் செய்விப்பேன்’ என்று சொல்கிறார்” என நாத்தான் சொன்னான்.
௧௨நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார் என்று சொன்னான்.
13 உடனே தாவீது நாத்தானிடம், “நான் யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்திருக்கிறேன்” என்றான். அதற்கு நாத்தான், “யெகோவா உன் பாவத்தை அகற்றிவிட்டார், அதனால் நீ சாகமாட்டாய்.
௧௩அப்பொழுது தாவீது நாத்தானிடம்: நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடி, யெகோவா உன்னுடைய பாவத்தை நீங்கச்செய்தார்.
14 ஆனால் நீ இப்படிச் செய்ததினால் யெகோவாவினுடைய பகைவர் முன்பாக யெகோவாவை முற்றிலும் அவமதித்தாய். ஆகையால் உனக்குப் பிறக்கும் பிள்ளை நிச்சயமாக சாவான்” என்று சொன்னார்.
௧௪ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான்.
15 இவ்வாறு சொன்னபின் நாத்தான் தன் வீட்டிற்குப் போனான். அதன்படி உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற பிள்ளையை யெகோவா தண்டித்ததினால் அவன் நோயுற்றான்.
௧௫அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது.
16 அதைக்கண்ட தாவீது அப்பிள்ளைக்காக இறைவனிடம் வேண்டினான். அவன் உபவாசம் இருந்து வீட்டிற்குள்ளேபோய் தரையில் கிடந்து மன்றாடி இரவுகளைக் கழித்தான்.
௧௬அப்பொழுது யெகோவா அந்தப் பிள்ளைக்காக தேவனிடம் ஜெபம்செய்து, உபவாசித்து, உள்ளே போய், இரவு முழுவதும் தரையிலே கிடந்தான்.
17 அவனுடைய குடும்பத்தின் முதியவர்கள் அவனுக்கு அருகே நின்று, அவனை எழுந்திருக்கும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால் அவனோ மறுத்துவிட்டான்; அவன் அவர்களோடு எந்த உணவைச் சாப்பிடவும் மறுத்தான்.
௧௭அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கச்செய்ய, அவனுடைய வீட்டிலுள்ள மூப்பர்கள் எழுந்து, அவன் அருகில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடு அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.
18 ஏழாம்நாள் குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறந்த செய்தியைத் தாவீதிற்கு அறிவிப்பதற்கு பணியாட்கள் பயந்தார்கள்; ஏனெனில், “பிள்ளை உயிரோடிருக்கையில் நாங்கள் சொன்னவற்றை அவர் கேட்கவில்லை; இப்பொழுது பிள்ளை இறந்துவிட்டது என எப்படிச் சொல்வோம்? சொன்னால் வீபரீதமான எதையாவது செய்துகொள்வாரே” என தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
௧௮ஏழாம் நாளில், பிள்ளை இறந்துபோனது. பிள்ளை இறந்துபோனது என்று தாவீதின் வேலைக்காரர்கள் அவனுக்கு அறிவிக்க பயந்தார்கள்: பிள்ளை உயிரோடிருக்கும்போது, நாம் அவரோடு பேசுகிறபோது, அவர் நம்முடைய சொல்லைக் கேட்கவில்லை; பிள்ளை இறந்துபோனது என்று அவரிடம் எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக மனவேதனை அடைவாரே என்று பேசிக்கொண்டார்கள்.
19 ஆனால் பணியாட்கள் தங்களுக்குள்ளே இரகசியமாய் பேசிக்கொள்கிறதை தாவீது கவனித்தபோது பிள்ளை இறந்துவிட்டான் என்பதை உணர்ந்து கொண்டான். அப்பொழுது அவன், “பிள்ளை இறந்து விட்டானா?” என்று தன் பணியாட்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள், “ஆம் இறந்துவிட்டான்” என்றார்கள்.
௧௯தாவீது தன்னுடைய வேலைக்காரர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்கிறதைக் கண்டு, பிள்ளை இறந்துபோனது என்று அறிந்து, தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: பிள்ளை இறந்துபோனதோ என்று கேட்டான்; இறந்துபோனது என்றார்கள்.
20 உடனே தாவீது தரையில் இருந்து எழுந்து, குளித்துவிட்டு, எண்ணெய் பூசி தன் உடைகளையும் மாற்றிக் கொண்டான். பின்பு யெகோவாவின் ஆலயத்துக்குச் சென்று யெகோவாவை வழிபட்டான். அதன்பின் தன் சொந்த வீட்டிற்கு போய் உணவு கேட்டு அவர்களிடம் அதை வாங்கிச் சாப்பிட்டான்.
௨0அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, குளித்து, எண்ணெய் பூசிக்கொண்டு, தன்னுடைய ஆடைகளை மாற்றி, யெகோவாவுடைய ஆலயத்தில் நுழைந்து, தொழுதுகொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, உணவு கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது சாப்பிட்டான்.
21 அப்பொழுது அவன் செய்வதைக் கண்ட பணியாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதுகொண்டிருந்தீர்; இப்பொழுது பிள்ளை இறந்தபோது எழுந்து சாப்பிடுகிறீரே?” என்றார்கள்.
௨௧அப்பொழுது அவன் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதீர்; பிள்ளை இறந்தபின்பு, எழுந்து சாப்பிடுகிறீரே என்றார்கள்.
22 அதற்கு அவன், “பிள்ளை உயிரோடிருந்தபோது, ஒருவேளை யெகோவா எனக்கு இரக்கங்காட்டிப் பிள்ளையை பிழைக்கப்பண்ணுவார் என நினைத்தே நான் உபவாசித்து அழுதுகொண்டிருந்தேன்.
௨௨அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கும்போது, பிள்ளை பிழைக்கும்படிக் யெகோவா எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன்.
23 இப்பொழுதோ பிள்ளை இறந்துவிட்டான்; எனவே இனி நான் ஏன் உபவாசிக்கவேண்டும்? என்னால் மறுபடியும் அவனைக் கொண்டுவர முடியுமா? நான் அவனிடம் போவேன்; அவனோ என்னிடம் திரும்பி வரமாட்டான்” என்றான்.
௨௩அது இறந்திருக்க, இப்போது நான் ஏன் உபவாசிக்க வேண்டும்? இனி நான் அதைத் திரும்பிவரச்செய்ய முடியுமோ? நான் அதினிடம் போவேனே தவிர, அது என்னிடம் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
24 அதன்பின் தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி அவளுடன் உறவுகொண்டான். அவள் ஒரு மகனைப் பெற்றாள். அவர்கள் அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டார்கள். யெகோவா அவனில் அன்புகூர்ந்தார்.
௨௪பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார்.
25 யெகோவா அப்பிள்ளையில் அன்பாயிருந்தபடியால், அவர் அப்பிள்ளைக்கு யெதிதியா எனப் பெயரிடும்படி இறைவாக்கு உரைப்பவனான நாத்தான் மூலம் தாவீதுக்குச் சொல்லி அனுப்பினார்.
௨௫அவர் தீர்க்கதரிசியான நாத்தானை அனுப்ப, அவன் யெகோவாவுக்காக அவனுக்கு யெதிதியா என்று பெயரிட்டான்.
26 இந்நாட்களில் யோவாப் அம்மோனியரின் ரப்பா பட்டணத்திற்கு எதிராக சண்டையிட்டு அதைக் கைப்பற்றினான்.
௨௬அதற்குள்ளே யோவாப் அம்மோன் மக்களுடைய ரப்பா பட்டணத்தின்மேல் யுத்தம்செய்து, தலைநகரத்தைப் பிடித்து,
27 அதன்பின் யோவாப் தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி, “நான் ரப்பா பட்டணத்துக்கு எதிராகப் போரிட்டு அவர்களின் தண்ணீர் விநியோகிக்கும் பகுதியையும் கைப்பற்றினேன்.
௨௭தாவீதிடம் ஆள் அனுப்பி, நான் ரப்பாவின்மேல் யுத்தம்செய்து, தண்ணீர் ஓரமான பட்டணத்தைப் பிடித்துக்கொண்டேன்.
28 நீர் வீரர்களுடன் வந்து பட்டணத்தை முற்றுகையிட்டு அதைக் கைப்பற்றும். இல்லையெனில் நான் அதைக் கைப்பற்றும்போது, அது என்னுடைய பெயரால் அழைக்கப்படும்” என்று சொல்லச் சொன்னான்.
௨௮நான் பட்டணத்தைப் பிடிக்கிறதினால், என் பெயர் சொல்லாதபடி, நீர் மற்ற மக்களைக் கூட்டிக்கொண்டுவந்து, பட்டணத்தை முற்றுகைபோட்டு, பிடிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
29 எனவே தாவீது படை முழுவதையும் திரட்டி ரப்பாவுக்குச் சென்று போரிட்டு அதைக் கைப்பற்றினான்.
௨௯அப்படியே தாவீது மக்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ரப்பாவுக்குப் போய், அதின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்தான்.
30 பின் அம்மோனிய அரசனின் தலையில் இருந்த மகுடத்தை எடுத்துக்கொண்டான். அது ஒரு தாலந்து எடையுள்ள தங்கமும், விலையுயர்ந்த மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டதாய் இருந்தது. அந்த மகுடத்தை தாவீதின் தலையில் வைத்தார்கள். அப்பட்டணத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட பெருந்திரளான பொருட்களை எடுத்துக்கொண்டார்கள்.
௩0அவர்களுடைய ராஜாவின் தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாகவும் இருந்தது; அது தாவீதுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளைப்பொருட்களைக் கொண்டுபோனான்.
31 அவன் அங்கிருந்த மக்களை வெளியே கொண்டுவந்து, அவர்களை வாள்கள், இரும்பு ஆயுதங்கள், கோடரிகள் முதலியவற்றால் வேலை செய்வதற்கும், செங்கல் செய்யும் வேலையிலும் ஈடுபடுத்தினான். இவ்வாறே தாவீது அம்மோனியரின் எல்லா பட்டணங்களுக்கும் செய்தான். பின்பு தாவீதும் அவனுடைய எல்லாப் படைவீரர்களும் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
௩௧பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், இரும்பு ஆயதங்களும், இரும்புக் கோடரிகளும் செய்யும் வேளையில் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளைகளிலும் வேலைசெய்யவைத்தான்; இப்படி அம்மோன் மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா மக்களோடும் எருசலேமிற்குத் திரும்பினான்.

< 2 சாமுவேல் 12 >