< 2 இராஜாக்கள் 9 >
1 இறைவாக்கினனான எலிசா இறைவாக்கினர் கூட்டத்தில் ஒருவனைக் கூப்பிட்டு, “உனது மேலங்கியை இடைப்பட்டிக்குள் சொருகிக்கொண்டு, இந்த எண்ணெய் குப்பியையும் எடுத்துக்கொண்டு ராமோத் கீலேயாத்துக்குப் போ.
௧அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஒருவனை அழைத்து: நீ பயணத்திற்கான உடையணிந்துகொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.
2 நீ அங்கே போய்ச்சேர்ந்ததும், நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூவை தேடு. அவனைக் கண்டதும் அவனுடைய தோழர்களிடமிருந்து அவனை எழுந்து வரும்படி கூறி, வீட்டின் உள்ளறைக்குள் கூட்டிக்கொண்டுபோ.
௨நீ அங்கே சென்றபின்பு, நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே சென்று, அவனைத் தன் சகோதரர்களின் நடுவிலிருந்து எழுந்திருக்கச்செய்து, அவனை ஒரு உள் அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,
3 அதன்பின் எண்ணெய் இருக்கும் குடுவையை எடுத்து அதை அவன் தலையின்மேல் ஊற்றி, ‘யெகோவா சொல்வது இதுவே: நான் உன்னை இஸ்ரயேலின்மேல் அரசனாக அபிஷேகம் பண்ணுகிறேன்’ என்று அறிவித்து, பின்பு கதவைத் திறந்து தப்பியோடு, தாமதியாதே” என்று கூறினான்.
௩தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதிக்காமல் ஓடிப்போ என்றான்.
4 அப்படியே அந்த வாலிபனான இறைவாக்கினன் ராமோத் கீலேயாத்துக்குப் போனான்.
௪அப்படியே தீர்க்கதரிசியின் ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனான்.
5 அவன் போய்ச் சேர்ந்தபோது இராணுவ உயர் அதிகாரிகள் ஒருமித்து இருந்ததைக் கண்டு, “தளபதியே உமக்கு ஒரு செய்தி உண்டு” என்றான். அப்போது யெகூ, “எங்களில் யாருக்கு?” என்று கேட்டான். அதற்கு அவன், “தளபதியே உமக்குத்தான்” என்றான்.
௫அவன் அங்கே சென்றபோது, சேனாதிபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாதிபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களில் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாதிபதியாகிய உமக்குத்தான் என்றான்.
6 யெகூ எழுந்து வீட்டுக்குள் போனதும் இறைவாக்கினன், யெகூவுடைய தலையில் எண்ணெயை ஊற்றிச் சொன்னதாவது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் உன்னை யெகோவாவின் மக்களாகிய இஸ்ரயேலருக்கு அரசனாக அபிஷேகம் பண்ணுகிறேன்.
௬அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் ஊற்றி: , அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் யெகோவாவுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன்.
7 நீ உன் தலைவனான ஆகாப் அரசனின் முழுக் குடும்பத்தையும் அழித்துவிடவேண்டும். யேசபேலினால் சிந்தப்பட்ட யெகோவாவின் எல்லா ஊழியக்காரரின் இரத்தத்துக்காகவும், என்னுடைய அடியவரான எல்லா இறைவாக்கினரின் இரத்தத்துக்காகவும் பழிவாங்குவேன்.
௭நான் என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், யெகோவாவுடைய சகல ஊழியக்காரர்களின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படி நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடவேண்டும்.
8 அடிமையாயிருந்தாலென்ன, சுதந்திரவாளியாயிருந்தாலென்ன இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தில் ஒருவரும் மீந்திராதபடி எல்லா ஆண்களையும் அழித்துப்போடுவேன்.
௮ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படி, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர்விடும் ஒரு நாய்முதலாக இருக்காதபடி, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடிமைபட்டவனையும் மற்றவனையும் கருவறுத்து,
9 ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போலவும், அகியாவின் மகனான பாஷாவின் குடும்பத்தைப்போலவும் ஆக்குவேன்.
௯ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சரியாக்குவேன்.
10 யேசபேலுக்கோ என்றால், யெஸ்ரயேலின் வெளிநிலத்தில் நாய்கள் அவளைத் தின்னும். ஒருவரும் அவளை அடக்கம்பண்ணமாட்டார்கள்.’” இதைச் சொன்னபின்பு அவன் கதவைத் திறந்துகொண்டு ஓடித் தப்பினான்.
௧0யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்செய்கிறவன் இல்லையென்று சொல்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப்போனான்.
11 யெகூ வெளியே வந்து தன் அதிகாரிகளிடம் போனபோது, அவர்களில் ஒருவன் அவனைப் பார்த்து, “என்ன நல்ல செய்தியா? இந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் ஏன் வந்தான்?” என்று கேட்டான். அதற்கு யெகூ, “அந்த மனுஷன் யார் என்றும், எப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுபவன் என்றும் உங்களுக்குத் தெரியும்தானே!” என்றான்.
௧௧யெகூ தன் எஜமானுடைய ஊழியக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்திற்கு எதற்காக வந்தான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனிதனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.
12 அதற்கு அவர்கள், “அப்படியல்ல. அதை எங்களுக்குச் சொல்” என்றார்கள். அதற்கு யெகூ, “அவன் எனக்குச் சொன்னது இதுவே, ‘யெகோவா சொல்வது இதுவே: நான் எல்லா இஸ்ரயேலருக்கும் உன்னை அரசனாக அபிஷேகம் பண்ணினேன்’ என்பதாகும்” என்றான்.
௧௨அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று யெகோவா உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.
13 அவர்கள் விரைவாக தங்கள் மேலாடைகளைக் கழற்றி அவனுக்குக் கீழே அந்தப் படிகளில் விரித்தார்கள். அதன்பின் எக்காளம் ஊதி, “யெகூவே அரசன்” என்று ஆரவாரித்தார்கள்.
௧௩அப்பொழுது அவர்கள் துரிதமாக அவரவர் தங்கள் ஆடைகளைப் படிகளின் உயரத்தில் அவனுக்கு கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.
14 நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூ யோராமுக்கு எதிராகச் சதித்திட்டம் போட்டான். அந்நாட்களில் யோராம் எல்லா இஸ்ரயேலரோடும் சேர்ந்து ராமோத் கீலேயாத்தை சீரிய அரசனான ஆசகேலின்வசம் போய்விடாதபடி பாதுகாத்துக் கொண்டிருந்தான்.
௧௪அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் மகன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டினான்; யோராமோ இஸ்ரவேலர்கள் எல்லோரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்துவைத்தான்.
15 ஆனால் யோராம் சீரிய அரசனான ஆசகேலுடன் செய்த யுத்தத்தில் சீரியரால் காயப்படுத்தப்பட்டு, அக்காயங்களை ஆற்றுவதற்கு யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான். அப்பொழுது யெகூ, “நீங்கள் எனக்கு ஆதரவாயிருந்தால் நகரத்தைவிட்டு யாரும் வெளியேறி யெஸ்ரயேலுக்குப்போய் இச்செய்தியை கூறிவிடாதபடி பாருங்கள்” என்று கூறினான்.
௧௫ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே செய்த போரிலே, சீரியர்கள் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்வதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப்போயிருந்தான். யெகூ என்பவன்; இது உங்களுக்குச் சம்மதமாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிச்செல்ல விடாதிருங்கள் என்றான்.
16 அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான். யோராம் அங்கே வியாதியாகக் கிடந்தான்; யோராமைப் பார்க்க, யூதாவின் அரசனான அகசியாவும் அங்கே வந்திருந்தான்.
௧௬அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாகக் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.
17 யெஸ்ரயேலின் கோபுரத்திலிருந்து நகரத்தைக் காவல் செய்தவன் யெகூவின் படைகள் முன்னேறி வருவதைக் கண்டு, “சில படைகள் வருவதாகத் தெரிகிறது” என்று பலமாகச் சத்தமிட்டான். அப்பொழுது யோராம், “ஒரு குதிரைவீரனை அழைத்து, வருபவர்களைப் போய்ச் சந்தித்து, ‘சமாதானமாக வருகிறீர்களா’ என்று கேட்டுவரும்படி அனுப்புங்கள்” என்றான்.
௧௭யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பி சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.
18 எனவே குதிரைவீரன் போய் யெகூவிடம், “சமாதானமாகவா வருகிறீர்கள் என்று அரசன் கேட்கிறான்” என்று கூறினான். அதற்கு யெகூ பதிலாக, “சமாதானத்தைப் பற்றி உனக்கென்ன? எனக்குப் பின்னால் தொடர்ந்து வா” என்றான். அப்பொழுது காவல் காப்பவன் அரசனிடம், “தூதுவன் அவர்களிடம்போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் அவன் திரும்பி வரவில்லை” என்று கூறினான்.
௧௮அந்தக் குதிரைவீரன்: அவனுக்கு எதிர்கொண்டுபோய், சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பின்னே திரும்பிவா என்றான். அப்பொழுது ஜாமக்காரன்: அனுப்பப்பட்டவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றான்.
19 அப்பொழுது அரசன் இரண்டாம் குதிரைவீரனையும் அனுப்பினான். அவன் அவர்களிடம் போய், “சமாதானமாகவா வருகிறீர்கள் என்று அரசன் கேட்கிறான்” என்று சொன்னான். யெகூ அவனையும் பார்த்து, “சமாதானத்தைப் பற்றி உனக்கென்ன? எனக்குப் பின்னால் தொடர்ந்து வா” என்றான்.
௧௯ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பின்னே திரும்பிவா என்றான்.
20 காவலாளி அரசனிடம், “அவனும் அவர்களிடம்போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் திரும்பிவருவதாக இல்லை. தேரைச் செலுத்தும் விதத்தைப் பார்த்தால் நிம்சியின் மகன் யெகூவைப்போல் தெரிகிறது. அவன் ஒரு பைத்தியக்காரனைப் போலவே தேரை ஓட்டுகிறான்” என்றான்.
௨0அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் மகனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாக ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.
21 உடனே யோராம், “என்னுடைய தேரை ஆயத்தப்படுத்துங்கள்” என்றான். அவர்கள் அவனுடைய தேரை ஆயத்தப்படுத்தியதும் இஸ்ரயேலின் அரசனான யோராமும் யூதாவின் அரசனான அகசியாவும் தங்கள் சொந்தத் தேர்களில் ஏறிக்கொண்டு யெகூவைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்குச் சொந்தமான நிலத்தில் அவர்கள் யெகூவைச் சந்தித்தார்கள்.
௨௧அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன்தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலயனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.
22 யோராம் யெகூவை கண்டவுடன், “யெகூவே, சமாதானமாகவா வந்திருக்கிறாய்?” என்று கேட்டான். அதற்கு அவன், “உன் தாயாகிய யேசபேலின் விக்கிரக வணக்கங்களும், பில்லிசூனியங்களும் அளவுக்கு மிஞ்சியிருக்கும்வரை சமாதானம் எப்படியிருக்கும்” என்றான்.
௨௨யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கும்போது சமாதானம் ஏது என்றான்.
23 அதைக் கேட்டதும் யோராம், “அகசியாவே, இது துரோகம்” என்று சத்தமிட்டபடி தன் தேரைத் திருப்பிக்கொண்டு தப்பியோட பார்த்தான்.
௨௩அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.
24 ஆனால் யெகூ தன் வில்லை வளைத்து யோராமின் தோள்களுக்கிடையில் எய்தான். அம்பு அவனுடைய இருதயத்தை ஊடுருவிச் சென்றதும் அவன் தன் தேரிலேயே விழுந்தான்.
௨௪யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் ஊடுருவிப் போகத்தக்கதாக, அவனை அவனுடைய புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.
25 அப்பொழுது யெகூ தனது அதிகாரியாகிய பித்காரிடம், “அவனை எடுத்து யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் எறிந்துவிடு. முன்பு ஒரு நாள் நானும் நீயும் இவனுடைய தகப்பனான ஆகாபுக்குப் பின்னால் தேரில் போகும்பொழுது, யெகோவா இவனைக் குறித்துச் சொன்ன இறைவாக்கை ஞாபகப்படுத்திக்கொள்.
௨௫அப்பொழுது யெகூ, தன் சேனாதிபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலயனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒன்றுசேர்ந்து அவனுடைய தகப்பனாகிய ஆகாபின் பின்னே குதிரையில் ஏறிவருகிறபோது, யெகோவா இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.
26 அன்று யெகோவா, ‘நேற்று நான் நாபோத்தின் இரத்தத்தையும், அவன் மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் என்று அறிவிக்கிறார். இதே நிலத்தில் உன்னையும் நான் பழிவாங்குவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்’ என்று ஆகாபுக்குக் கூறியிருந்தார். ஆகவே இப்போது இவனைத் தூக்கி யெகோவாவின் வாக்குப்படி அந்தத் தோட்டத்தில் எறிந்துவிடு” என்று சொன்னான்.
௨௬நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவனுடைய மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது யெகோவா சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, யெகோவாவுடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.
27 யூதாவின் அரசனான அகசியா நடந்தவற்றைக் கண்டபோது, பெத்ஹாகானுக்குப் போகும் பாதையில் தப்பி ஓடினான். யெகூ அவனையும் கொல்லுங்கள் என்று பலமாகக் கத்திக்கொண்டு அவனைத் துரத்திப் போனான். இப்லேயாமுக்கு அருகே உள்ள கூருக்கு ஏறிப்போகும் சரிவான பாதையில் அகசியாவை அவனுடைய தேரிலேயே வைத்து யெகூவின் படையினர் காயப்படுத்தினார்கள். ஆயினும் அவன் மெகிதோவுக்குத் தப்பி ஓடிப்போய் அங்கே இறந்தான்.
௨௭இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாக ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் அருகில் இருக்கிற கூர் என்னும் மலையின்மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே இறந்துபோனான்.
28 அவனுடைய வேலையாட்கள் அவனின் உடலை தேரில் வைத்து எருசலேமுக்குக் கொண்டுபோய் தாவீதின் நகரத்திலிருந்த அவனுடைய முற்பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்.
௨௮அவனுடைய வேலைக்காரர்கள் அவனை இரதத்தில் ஏற்றி எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்செய்தார்கள்.
29 ஆகாபின் மகன் யோராமின் ஆட்சியின் பதினோராம் வருடத்தில் அகசியா யூதாவின் அரசனாகியிருந்தான்.
௨௯இந்த அகசியா, ஆகாபுடைய மகனாகிய யோராமின் பதினோராம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
30 யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். யேசபேல் அதைக் கேள்விப்பட்டபோது, அவள் தன் கண்களுக்கு மை பூசி தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னலருகே பார்த்துக்கொண்டு நின்றாள்.
௩0யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து,
31 யெகூ வாசலுக்கு வந்தபோது யேசபேல் அவனைப் பார்த்து, “கொலைகாரனே! தன் எஜமானைக் கொலைசெய்த சிம்ரியைப் போன்றவனே! சமாதானத்துடன் வருகிறாயா” என்று கேட்டாள்.
௩௧யெகூ பட்டணத்து நுழைவாயிலுக்கு வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி பாதுகாக்கப்பட்டானா என்றாள்.
32 யெகூ மேலே நிமிர்ந்து ஜன்னலைப் பார்த்து, “எனக்குச் சார்பாக இருப்பவர்கள் யார்?” என்றான். இரண்டு மூன்று அதிகாரிகள் வெளியே அவனை எட்டிப் பார்த்தார்கள்.
௩௨அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என்னுடன் இருக்கிறது யார் யார் என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று அதிகாரிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
33 அப்பொழுது யெகூ அவர்களிடம், “அவளைத் தூக்கி கீழே எறிந்துவிடுங்கள்” என்றான். அவர்கள் அவளைக் கீழே எறிந்தார்கள். அவளுடைய இரத்தம் சுவரிலும், குதிரைகளிலும் தெறித்தது. யெகூ அவளுக்கு மேலாக தேரைச் செலுத்தினான்.
௩௩அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு,
34 அவன் உள்ளே போய் சாப்பிட்டுக் குடித்து, “இந்தச் சபிக்கப்பட்ட பெண்ணை எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணுங்கள். அவள் ஒரு அரசனின் மகள்” என்று கூறினான்.
௩௪உள்ளேபோய், சாப்பிட்டுக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த பெண்ணைப் பார்த்து, அவளை அடக்கம் செய்யுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.
35 ஆனால் அவளை அடக்கம்பண்ணுவதற்குப் போனபோது அவளுடைய மண்டையோட்டையும், கால்களையும், கைகளையும் தவிர வேறெதையும் காணவில்லை.
௩௫அவர்கள் அவளை அடக்கம்செய்யப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையும் தவிர வேறொன்றையும் காணவில்லை.
36 அவர்கள் திரும்பிப்போய் அதை யெகூவுக்கு அறிவித்தபோது அவன் பதிலாக, “திஸ்பிய ஊரைச்சேர்ந்த யெகோவாவின் பணியாளன் எலியாவின் மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே: யெஸ்ரயேலின் வெளிநிலத்தில் யேசபேலின் சதையை நாய்கள் தின்னும்.
௩௬ஆகையால் அவர்கள் திரும்பிவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது யெகோவா திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,
37 யேசபேலின் உடல் யெஸ்ரயேல் நிலத்தின் வயல்வெளியின் எருவைப்போல கிடக்கும். அதைப் பார்க்கும் யாரும், ‘அது யேசபேல்’ என்று கூற முடியாமலிருக்கும் என்று சொல்லியிருந்தாரே” என்றான்.
௩௭இதுதான் யேசபேலென்று சொல்லமுடியாத அளவிற்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.