< 2 இராஜாக்கள் 4 >
1 ஒரு நாள் இறைவாக்கினர் கூட்டத்திலுள்ள ஒருவனின் மனைவி எலிசாவை நோக்கி, “உமது அடியானான எனது கணவன் இறந்துவிட்டார். அவர் யெகோவாவிடத்தில் பயபக்தியாய் இருந்தார் என்பது உமக்குத் தெரியும். இப்போது அவருடைய கடன்காரன் என்னுடைய இரு மகன்களையும் தனக்கு அடிமைகளாக்குவதற்கு கூட்டிக்கொண்டுபோக வந்திருக்கிறான்” என்றாள்.
௧தீர்க்கதரிசிகளுடைய கூட்டத்தாரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு பெண் எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் கணவன் இறந்துபோனான்; உமது அடியான் யெகோவாவுக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு மகன்களையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
2 அப்பொழுது எலிசா அவளைப் பார்த்து, “நான் உனக்கு எப்படி உதவிசெய்யலாம்? வீட்டில் உன்னிடம் என்ன உண்டு? எனக்குச் சொல்” என்று கேட்டான். அதற்கு அவள், “ஒரு ஜாடி எண்ணெயைத் தவிர உமது அடியவளின் வீட்டில் வேறு ஒன்றுமே இல்லை” என்று கூறினாள்.
௨எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெயைத் தவிர உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.
3 அப்பொழுது எலிசா, “நீ போய் உன் அயல் வீட்டுக்காரர் எல்லாரிடமிருந்தும் வெறும் ஜாடிகளைக் கேட்டு வாங்கு. அதிகளவு ஜாடிகளைக் கேட்டு வாங்கு.
௩அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அண்டைவீட்டுக்காரர்கள் எல்லோரிடத்திலும் அநேகம் காலியான பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,
4 அதன்பின் நீயும் உன் மகன்களும் வீட்டின் உள்ளே போய், கதவைப் பூட்டிக்கொள்ளுங்கள். பின்பு எண்ணெயை எல்லா ஜாடிகளிலும் ஊற்றுங்கள். ஒவ்வொன்றும் நிரம்பியவுடன், ஒரு பக்கத்தில் அவற்றை எடுத்துவையுங்கள்” என்றான்.
௪நீயும் உன் பிள்ளைகளும் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் ஊற்றி, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.
5 அவள் அவனிடமிருந்து போய், மகன்களுடன் வீட்டினுள்ளே போய் கதவைப் பூட்டினாள். அவளுடைய மகன்கள் ஜாடிகளைக் கொடுக்கக் கொடுக்க அவள் எண்ணெயை ஊற்றிக்கொண்டேயிருந்தாள்.
௫அவள் அவனிடத்திலிருந்துபோய், கதவைப் பூட்டிக்கொண்டு, மகன்கள் அவளிடத்தில் பாத்திரங்களை கொடுக்க, அவள் அவைகளில் ஊற்றினாள்.
6 எல்லா ஜாடிகளும் நிரம்பியபோது, அவள் தன் மகனைப் பார்த்து, “மற்றொரு ஜாடி கொண்டுவா” என்றாள். “இனிமேல் வேறு ஜாடி இல்லை” என்று அவன் கூறியபோது எண்ணெய் நின்றுவிட்டது.
௬அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின்பு, அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறு பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோனது.
7 அவள் போய் இறைவனுடைய மனிதனிடம் அதைக்கூறியபோது அவன் அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்திடு. நீயும் உன் மகன்களும் மீதியாயிருப்பதைக் கொண்டு வாழலாம்” என்றான்.
௭அவள் போய் தேவனுடைய மனிதனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீதம் இருக்கிறதைக்கொண்டு நீயும் உன் மகன்களும் வாழக்கையை நடத்துங்கள் என்றான்.
8 ஒரு நாள் எலிசா சூனேம் என்ற ஊருக்குப் போனான். அங்கு ஒரு செல்வம் மிகுந்த பெண் இருந்தாள். அவள் அவனை சாப்பிடவரும்படி வருந்தி அழைத்தாள். அதன்பின்பு அவ்வழியில் அவன் போகும்போதெல்லாம் அங்கே சாப்பிடுவதற்காகத் தங்குவான்.
௮பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு பெண் அவனை சாப்பிட வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பிரயாணமாக வருகிறபோதெல்லாம் சாப்பிடுவதற்காக அங்கே வந்து தங்குவான்.
9 அவள் தன் கணவனிடம், “இந்த வழியாக வந்து இங்கு தங்கிப்போகும் மனிதன், இறைவனுடைய பரிசுத்த மனிதன் என்பது எனக்குத் தெரிகிறது.
௯அவள் தன் கணவனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனிதனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
10 நாங்கள் எங்கள் வீட்டுக்குமேல் ஒரு அறையைக் கட்டி, ஒரு கட்டில், மேஜை, நாற்காலி, விளக்கு ஆகியவற்றை அவருக்கு வைப்போம். அதனால் எங்களிடம் வரும்போதெல்லாம் அங்கேயே அவர் தங்கியிருக்கலாம்” என்றாள்.
௧0நாம் மேல்மாடியில் ஒரு சிறிய அறையைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.
11 ஒரு நாள் எலிசா அங்கு வந்தபோது மேலே தன் அறைக்குப் போய் அங்கே படுத்திருந்தான்.
௧௧ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறையிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.
12 தன் வேலைக்காரனான கேயாசிடம், “அந்த சூனேமியாளை அழைத்து வா” என்றான். அவன் போய் அவளை அழைத்துவர, அவள் வந்து எலிசாவுக்கு முன் நின்றாள்.
௧௨அவன் தன்னுடைய வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.
13 அப்பொழுது எலிசா கேயாசியைப் பார்த்து, “நீ அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘எங்களுக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாய். உனக்கு நாங்கள் என்ன செய்யலாம்? உனது சார்பாக அரசனிடமோ அல்லது இராணுவத் தளபதியிடமோ நாங்கள் ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் அதைச் சொல்’ என்று அவளிடம் கேள்” என்றான். அவள் அதற்குப் பதிலாக, “நான் என் சொந்த மக்கள் மத்தியில் குடியிருக்க எனக்கு வீடு இருக்கிறது” என்றாள்.
௧௩அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல கரிசனையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்றும் ராஜாவிடமாவது சேனாதிபதியிடமாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்றும் அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் மக்களின் நடுவே நான் சுகமாகக் குடியிருக்கிறேன் என்றாள்.
14 அப்பொழுது எலிசா கேயாசிடம், “அவளுக்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டான். அதற்கு கேயாசி, “அவளுக்கு ஒரு மகன் இல்லை. அவளுடைய கணவனும் வயதுசென்றவனாக இருக்கிறான்” என்றான்.
௧௪அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குக் குழந்தை இல்லை, அவளுடைய கணவனும் அதிக வயதுள்ளவன் என்றான்.
15 எலிசா அவனிடம், “அவளைக் கூப்பிடு” என்றான். கேயாசி அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து கதவுக்குப் பக்கத்தில் நின்றாள்.
௧௫அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.
16 எலிசா அவளைப் பார்த்து, “அடுத்த வருடம் இந்த நேரத்தில் உன் கைகளில் ஒரு மகனை ஏந்திக்கொண்டிருப்பாய்” என்றான். அப்பொழுது அவள், “என் தலைவனே! இறைவனுடைய மனிதனே, உமது அடியவளைத் தவறாக வழிநடத்த வேண்டாம்” என்றாள்.
௧௬அப்பொழுது அவன்: ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: இல்லை, தேவனுடைய மனிதனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு பொய் சொல்லவேண்டாம் என்றாள்.
17 ஆனால் அவளோ எலிசா முன்கூறியபடியே கர்ப்பமாகி அடுத்த வருடம் அதே காலத்தில் ஒரு மகனைப் பெற்றாள்.
௧௭அந்த பெண் கர்ப்பவதியாகி, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனைப் பெற்றாள்.
18 அந்தப் பிள்ளை வளர்ந்து வந்தான். ஒரு நாள் அவன் கதிர் அறுக்கிறவர்களுடன் நின்றுகொண்டிருந்த தன் தகப்பனிடம் போனான்.
௧௮அந்த மகன் வளர்ந்தான், ஒரு நாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனிடம் போயிருக்கும்போது,
19 அந்நேரம் அவன் தன் தகப்பனிடம், “என் தலை! என் தலை வலிக்கிறது” என்று அழுதான். அவனுடைய தகப்பன் ஒரு வேலையாளிடம், “இவனை இவனுடைய தாயிடம் தூக்கிக்கொண்டு போ” என்றான்.
௧௯தன் தகப்பனைப் பார்த்து: என் தலை வலிக்கிறது, என் தலை வலிக்கிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான்.
20 அந்த வேலைக்காரன் அப்பிள்ளையைத் தூக்கி அவனுடைய தாயிடம் கொண்டுபோனான். மத்தியானம்வரை தாய் அவனைத் தன் மடியில் வைத்திருந்தாள். மதிய நேரத்தில் அவன் இறந்துபோனான்.
௨0அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானம்வரை அவள் மடியில் இருந்து இறந்துபோனான்.
21 அவள் மேலே போய் இறைவனுடைய மனிதனின் கட்டிலில் மகனைக் கிடத்திவிட்டு, கதவைப் பூட்டி வெளியே போனாள்.
௨௧அப்பொழுது அவள் மாடிக்கு ஏறிப்போய், அவனை தேவனுடைய மனிதனின் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிவிட்டு போய்,
22 அவள் தன் கணவனைக் கூப்பிட்டு, “தயவுசெய்து உம்முடைய வேலையாட்களில் ஒருவனையும், ஒரு கழுதையையும் அனுப்பும். நான் இறைவனுடைய மனிதனிடம் அவசரமாகப் போய்த் திரும்பி வரவேண்டும்” என்றாள்.
௨௨தன் கணவனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாக தேவனுடைய மனிதன் இருக்கும் இடம்வரை போய்வருவதற்கு; வேலைக்காரர்களில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.
23 அப்பொழுது அவன், “ஏன் இன்று அவரிடம் போகிறாய்? இன்று ஓய்வுநாளல்ல; அமாவாசை நாளும் அல்ல” என்று கேட்டான். அதற்கு அவள், “அது பரவாயில்லை. நான் போகவேண்டியிருக்கிறது” என்று கூறினாள்.
௨௩அப்பொழுது அவன்: இது அமாவாசையும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்திற்கு ஏன் போகவேண்டும் என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,
24 கழுதையில் சேணம் கட்டி, வேலைக்காரனைப் பார்த்து, “விரைவாகப் போ, நான் சொன்னாலொழிய வேகத்தைக் குறைக்காதே” என்று சொன்னாள்.
௨௪கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,
25 அந்தப்படியே அவள் புறப்பட்டு கர்மேல் மலையில் இருந்த இறைவனுடைய மனிதனிடம் போனாள். இறைவனின் மனிதன் தூரத்திலே அவளைக் கண்டு தன் வேலைக்காரனான கேயாசியைப் பார்த்து, “பார்! அதோ சூனேமியாள்.
௨௫கர்மேல் மலையிலிருக்கிற தேவனுடைய மனிதனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனிதன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள்.
26 நீ அவளைச் சந்திக்கும்படியாக ஓடிப்போய் அவளிடம், ‘நீ சுகமாயிருக்கிறாயா? உன் கணவன் சுகமாயிருக்கிறானா? உன் பிள்ளை சுகமாயிருக்கிறானா?’” என்று கேள் என்றான். அவள், “நாங்கள் எல்லோரும் சுகமாயிருக்கிறோம்” என்று கூறினாள்.
௨௬நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா, உன் கணவன் சுகமாயிருக்கிறானா, அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகம்தான் என்று சொல்லி,
27 அவள் மலையின்மேல் இருந்த இறைவனுடைய மனிதனிடம் வந்தபோது, அவனுடைய கால்களைப் பிடித்துக்கொண்டாள். கேயாசி அவளை அப்பால் தள்ளிவிடுவதற்காக முன்பாக வந்தபோது இறைவனுடைய மனிதன் அவனைப் பார்த்து, “அவளை விடு, அவளுடைய ஆத்துமா வேதனையால் கசப்படைந்திருக்கிறது. ஆனால் யெகோவா அதை எனக்கு மறைத்ததோடு ஏன் என்றும் எனக்குச் சொல்லவில்லை” என்றான்.
௨௭மலையில் இருக்கிற தேவனுடைய மனிதனிடத்தில் வந்து, அவனுடைய காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனிதன்: அவளைத் தடுக்காதே; அவளுடைய ஆத்துமா துக்கமாயிருக்கிறது; யெகோவா அதை எனக்கு அறிவிக்காமல் மறைத்துவைத்தார் என்றான்.
28 அப்பொழுது அவள், “என் தலைவனே, எனக்கு ஒரு மகன் வேண்டுமென்று நான் உம்மிடம் கேட்டேனா? எனக்கு அதிக எதிர்பார்ப்பைக் கொடுக்கவேண்டாமென்று நான் உமக்குச் சொல்லவில்லையா?” என்றாள்.
௨௮அப்பொழுது அவள், என் ஆண்டவனே எனக்கு ஒரு மகன் வேண்டும் என்று நான் உம்மிடத்தில் கேட்டேனா? என்னை ஏமாற்றவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்.
29 எலிசா கேயாசியிடம்: “உன் மேலுடையைப் பட்டிக்குள் சொருகிக்கொண்டு என் தடியையும் எடுத்துக்கொண்டு ஓடு. யாரையாகிலும் நீ சந்தித்தால் அவனை வாழ்த்தாதே. யாராவது உன்னை வாழ்த்தினால் நீ மறுமொழி கொடுக்காதே. நீ ஓடிப்போய் பையனின் முகத்தின்மேல் என் தடியை வை” என்றான்.
௨௯அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் பயணத்திற்கான உடையை அணிந்துகொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் யாரைச் சந்தித்தாலும் அவனைக் கேள்வி கேட்காமலும், உன்னை ஒருவன் கேள்வி கேட்டாலும் அவனுக்கு பதில் சொல்லாமலும் போய், என் தடியை அந்தச் சிறுவனின் முகத்தின்மேல் வை என்றான்.
30 ஆனால் அந்தப் பிள்ளையின் தாயோ எலிசாவைப் பார்த்து, “யெகோவா வாழ்கிறதும், நீர் வாழ்கிறதும் நிச்சயம்போலவே நான் உம்மை விட்டுப் போகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றாள். எனவே அவன் எழுந்து அவளைப் பின்தொடர்ந்தான்.
௩0சிறுவனின் தாயோ: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.
31 கேயாசி அவர்களுக்குமுன் போய், எலிசாவின் தடியைப் பையனின் முகத்தின்மேல் வைத்தான். ஆனால் எந்த விதமான சத்தமோ, பதிலோ வரவில்லை. அதனால் கேயாசி திரும்பிப்போய் எலிசாவைச் சந்தித்து, “பையன் கண்விழிக்கவில்லை” எனக் கூறினான்.
௩௧கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைச் சிறுவனின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டு வந்து: சிறுவன் கண் விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.
32 எலிசா வீட்டுக்கு வந்தபோது அவனுடைய கட்டிலின்மேல் அந்தப் பையன் இறந்து கிடந்தான்.
௩௨எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, இந்தச் சிறுவன் அவனுடைய கட்டிலின்மேல் இறந்துகிடந்தான்.
33 அவன் உள்ளே போய் இருவரையும் வெளியே விட்டுக் கதவைப் பூட்டி யெகோவாவை நோக்கி மன்றாடினான்.
௩௩உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப்பூட்டி, யெகோவாவை நோக்கி வேண்டுதல்செய்து,
34 அதன்பின் அவன் கட்டிலின்மேல் ஏறி அந்தப் பையனின் வாயோடு வாயும், கண்களோடு கண்களும், கைகளோடு கைகளுமாக வைத்து பையனின்மேல் படுத்தான். உடனே அந்தப் பையனின் உடல் சூடாகியது.
௩௪அருகில்போய், தன் வாய் சிறுவனின் வாயின்மேலும், தன் கண்கள் அவனுடைய கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவனுடைய உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது சிறுவனின் உடலில் சூடு ஏற்பட்டது.
35 எலிசா எழுந்து தன் அறைக்குள் அங்குமிங்குமாக நடந்தான். அதன்பின் கட்டிலில் ஏறி பையனின்மேல் இன்னொருமுறை முன்போல படுத்தான். அப்பொழுது அந்தப் பையன் ஏழுமுறை தும்மி தன் கண்களைத் திறந்தான்.
௩௫அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பவும் அருகில்போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தச் சிறுவன் ஏழுமுறை தும்மி தன் கண்களைத் திறந்தான்.
36 அப்பொழுது எலிசா கேயாசியை வரும்படி அழைத்து, “சூனேமியாளைக் கூப்பிடு” என்றான். அவன் அப்படியே செய்தான். அவள் வந்தபோது எலிசா, “உன் மகனைக் கூட்டிக்கொண்டுபோ” என்றான்.
௩௬அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் மகனை எடுத்துக்கொண்டுபோ என்றான்.
37 அவள் உள்ளே வந்து எலிசாவின் கால்களில் விழுந்து தரைமட்டும் பணிந்தாள். பின்பு தன் மகனைக் கூட்டிக்கொண்டு வெளியே போனாள்.
௩௭அப்பொழுது அவள் உள்ளே போய், அவனுடைய பாதத்திலே விழுந்து, தரைவரை பணிந்து, தன் மகனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.
38 எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போனான், அப்போது அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. ஒரு நாள் இறைவாக்கினர் கூட்டம் வந்து அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் தன் வேலையாளைப் பார்த்து, “அந்தப் பெரிய பானையை அடுப்பில் வைத்து இந்த மனிதருக்குக் கொஞ்சம் கூழ் காய்ச்சு” என்றான்.
௩௮எலிசா கில்காலுக்குத் திரும்பி வந்தான். தேசத்திலே பஞ்சம் உண்டானது; தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாருக்குக் கூழ் காய்ச்சு என்றான்.
39 அவர்களில் ஒருவன் வயல்வெளிக்கு மூலிகைச் செடிகளைப் பறிப்பதற்காக போகையில், ஒரு காட்டுக் கொம்மட்டிக் கொடியைக் கண்டான். அதன் காய்களைப் பிடுங்கி தன் மடியை நிரப்பினான். அவன் திரும்பிவந்தபோது, அவை என்ன காய்கள் என்று ஒருவரும் அறியாதிருந்தும் அவைகளை வெட்டி கூழிருந்த பானைக்குள் போட்டான்.
௩௯ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலேபோய், ஒரு கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதின் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாமலிருந்தது.
40 அதன்பின் அவர்கள் கூழ் குடிப்பதற்காக எல்லோருக்கும் அதை ஊற்றிக் கொடுத்தார்கள். அவர்கள் அதைக் குடிக்கத் தொடங்கியவுடனேயே, “இறைவனுடைய மனுஷனே! பானைக்குள் சாவு இருக்கிறது” என்று பலமாகக் கத்தினார்கள். அதை அவர்களால் குடிக்க முடியவில்லை.
௪0சாப்பிட அதைக் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்; அவர்கள் அந்தக் கூழை எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடமுடியாமல்: தேவனுடைய மனிதனே, பானையில் விஷம் இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.
41 அப்பொழுது எலிசா அவர்களிடம், “சிறிது மாவைக் கொண்டுவாருங்கள்” என்றான். அதை அவன் அந்தப் பானைக்குள் போட்டு, “இப்பொழுது இதை இந்த மனிதருக்குப் பரிமாறுங்கள், அவர்கள் குடிக்கட்டும்” என்றான். அதன்பின் எந்த விதமான தீங்கும் பானைக்குள் இருக்கவில்லை.
௪௧அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, கூட்டத்தார் சாப்பிடும்படி அவர்களுக்கு கொடு என்றான்; அப்புறம் பானையிலே விஷம் இல்லாமல்போனது.
42 ஒரு மனிதன் பாகால் சாலீஷாவிலிருந்த இறைவனுடைய மனிதனுக்கு தன் விளைச்சலின் முதற்பலனிலிருந்து தயாரிக்கப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், கொஞ்சம் புதிய தானியக் கதிர்களையும் சாக்குப்பையில் கொண்டுவந்தான். அப்பொழுது எலிசா, “இதை இந்த மக்களுக்குச் சாப்பிடக் கொடு” என்றான்.
௪௨பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனிதன் தேவனுடைய மனிதனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் கதிர்த்தட்டுகளையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு என்றான்.
43 அப்பொழுது அவனுடைய வேலையாள், “இதை நான் எப்படி நூறு பேருக்குப் பங்கிடுவேன்” என்று கேட்டான். ஆனால் எலிசா அதற்கு, “அதை இந்த மக்களுக்குச் சாப்பிடும்படி கொடு. ஏனென்றால் யெகோவா சொல்வது இதுவே: ‘அவர்கள் சாப்பிட்டு கொஞ்சம் மீதமும் இருக்கும்’ என்கிறார்” என்றான்.
௪௩அதற்கு அவனுடைய வேலைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதைக் கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்டப் பிறகு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
44 அப்படியே அவன் அதை அவர்களுக்குப் பரிமாறினான். யெகோவாவின் வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டு சில மீதியாயும் விடப்பட்டிருந்தன.
௪௪அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; யெகோவாவுடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமல்லாமல் மீதியும் இருந்தது.