< 2 இராஜாக்கள் 25 >
1 சிதேக்கியா அரசனின் ஆட்சியின் ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் தேதியில், பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் தனது முழு படைகளுடனும் எருசலேமுக்கு எதிராக வந்தான். அவன் பட்டணத்துக்கு வெளியில் முகாமிட்டு அதைச் சுற்றிவளைத்து முற்றுகைக் கொத்தளங்களைக் கட்டினான்.
௧அவன் அரசாட்சிசெய்யும் ஒன்பதாம் வருடம் பத்தாம்மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவனுடைய எல்லா படைகளோடு எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதற்கு எதிரே முகாமிட்டு, சுற்றிலும் அதற்கு எதிராக முற்றுகைச் சுவர்களைக் கட்டினான்.
2 சிதேக்கியா அரசனின் ஆட்சியில் பதினோராம் வருடம்வரை, பட்டணம் முற்றுகை போடப்பட்டிருந்தது.
௨அப்படியே ராஜாவாகிய சிதேக்கியாவின் பதினோராம் வருட ஆட்சி வரை நகரம் முற்றுகையிடப்பட்டிருந்தது.
3 அதே வருடத்தில் நான்காம் மாதம், ஒன்பதாம் நாளில் பட்டணத்தில் பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்ததினால் அங்கிருந்த மக்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு இல்லாதிருந்தது.
௩அதே வருடத்தில் நான்காம் மாதம் ஒன்பதாம்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் மக்களுக்கு உணவு இல்லாமல்போனது; நகரத்தின் மதிலில் உடைப்பு ஏற்பட்டது.
4 கல்தேயர் பட்டணத்தைச் சூழ்ந்திருந்தபோதிலுங்கூட, பட்டணத்தின் மதில் உடைக்கப்பட்டது. இரவு நேரத்தில் முழு இராணுவமும் அரசனுடைய தோட்டத்துக்குப் பக்கத்திலுள்ள இரு மதில்களுக்கிடையில் இருந்த வாசல் வழியாகத் தப்பி ஓடியது. அவர்கள் அரபாவை நோக்கி ஓடினார்கள்.
௪அப்பொழுது கல்தேயர்கள் நகரத்தைச் சூழ்ந்திருக்கும்போது, போர்வீரர்கள் எல்லோரும் இரவுநேரத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாக இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவும் சமபூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.
5 ஆனால் கல்தேயரின் படை அரசனைப் பின்தொடர்ந்து சென்று எரிகோவின் சமவெளியில் அவர்களை மேற்கொண்டனர். அவனுடைய இராணுவத்தினர் அவனைவிட்டுப் பிரிந்து சிதறடிக்கப்பட்டு ஓடினார்கள்.
௫கல்தேயரின் போர்வீரர்கள் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமபூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய படைகளெல்லாம் அவனைவிட்டுச் சிதறிப்போனது.
6 அரசன் பிடிக்கப்பட்டான். பின்பு ரிப்லாவிலிருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோகப்பட்டான். அங்கு அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
௬அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,
7 அவர்கள் சிதேக்கியாவின் கண்களுக்கு முன்பாகவே அவனுடைய மகன்களைக் கொலைசெய்தார்கள். அதன்பின் அவர்கள் அவனுடைய கண்களைப் பிடுங்கி, வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
௭சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டு, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
8 பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த பத்தொன்பதாம் வருடம், ஐந்தாம் மாதம், ஏழாம்நாளில், பாபிலோன் அரசனின் அதிகாரியும், பேரரசின் மெய்க்காவல் தளபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்.
௮ஐந்தாம் மாதம் ஏழாம் தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருட ஆட்சியிலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் மெய்க்காப்பாளர்களின் தலைவன் எருசலேமுக்கு வந்து,
9 அவன் யெகோவாவின் ஆலயத்தையும், அரண்மனையையும், எருசலேமிலிருந்த வீடுகள் அனைத்தையும் சுட்டெரித்தான். முக்கியமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் அவன் எரித்துப்போட்டான்.
௯யெகோவாவுடைய ஆலயத்தையும், ராஜாவின் அரண்மனையையும், எருசலேமின் சகல கட்டிடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான்.
10 பேரரசின் மெய்க்காவல் தளபதியின் தலைமையில் முழு பாபிலோனியப் படையும், எருசலேமைச் சுற்றியிருந்த மதிலை உடைத்து வீழ்த்தியது.
௧0மெய்க்காப்பாளர்களின் தலைவனோடிருந்த கல்தேயரின் போர்வீரர்கள் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.
11 காவல் தளபதி நேபுசராதான் பட்டணத்தில் மீந்திருந்தவர்களையும், பாபிலோன் அரசனிடம் சரணடைந்தவர்களையும், மற்ற மக்கள் கூட்டத்தினரையும் சிறைபிடித்துக் கொண்டுபோனான்.
௧௧நகரத்தில் மீதியான மற்ற மக்களையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற மக்கள்கூட்டத்தையும், மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.
12 ஆனால் அந்த மெய்க்காவல் தளபதி மிகவும் ஏழைகளான சிலரை திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலைசெய்வதற்காக விட்டுச்சென்றான்.
௧௨தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சைத்தோட்டக்காரர்களாகவும் பயிரிடுகிறவர்களாகவும் விட்டிருந்தான்.
13 கல்தேயர் யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கல தண்ணீர் தொட்டியையும் உடைத்து அவைகளிலிருந்த வெண்கலத்தை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
௧௩யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர்கள் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
14 அதோடு ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானைகளையும், சாம்பல் கரண்டிகளையும், கத்திகளையும், தட்டங்களையும் மற்றும் எல்லா வெண்கலப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.
௧௪செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
15 மெய்க்காவல் தளபதி சுத்தத் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட தூபகிண்ணங்களையும், தெளிக்கும் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போனான்.
௧௫சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் மெய்க்காப்பாளர்களின் தலைவன் எடுத்துக்கொண்டான்.
16 யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் செய்த இரண்டு தூண்களிலும், தண்ணீர் தொட்டியிலும், உருளக்கூடிய தாங்கிகளிலும் இருந்த வெண்கலத்தின் எடை, நிறுக்கமுடியாத அளவு அதிகமாயிருந்தன.
௧௬சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்துக்காக உண்டாக்கிய இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்தின் எடைக்கு கணக்கில்லை.
17 ஒவ்வொரு தூணும் இருபத்தேழு அடி உயரமுள்ளதாயிருந்தது. ஒரு தூணிலிருந்த வெண்கலத்தால் செய்யப்பட்ட கும்பம் நாலரை அடி உயரமுள்ளதும், வெண்கலத்தினாலான பின்னல் வேலைப்பாட்டினாலும், மாதுளம் பழங்களினாலும், சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டதாயும் இருந்தது. மற்ற தூணும் அதன் வேலைப்பாடுகளும் இதையே ஒத்திருந்தது.
௧௭ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதுளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போலவே இருந்தது.
18 மெய்க்காவல் தளபதி, தலைமை ஆசாரியன் செராயாவையும், இரண்டாவது ஆசாரியனான செப்பனியாவையும் மூன்று வாசல் காவலரையும் கைதிகளாகக் கொண்டுபோனான்.
௧௮மெய்க்காப்பாளர்களின் தலைவன், பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரர்களையும் பிடித்தான்.
19 மேலும் அவன், பட்டணத்தில் இருந்தவர்களில், இராணுவவீரருக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரியையும், ஐந்து அரச ஆலோசகர்களையும் கொண்டுபோனான். அவன் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்குப் பொறுப்பாயிருந்த பிரதான அதிகாரியாயிருந்த செயலாளரையும், பட்டணத்தில் அவனோடிருந்த அறுபதுபேரையும் கொண்டுபோனான்.
௧௯நகரத்திலே அவன் போர்வீரர்களின் விசாரிப்புக்காரனாகிய அதிகாரி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் பிடிபட்ட ஐந்துபேரையும், தேசத்தின் மக்களைப் படையில் சேர்க்கிற படைத்தலைவனின் தலைமைச் செயலாளனையும், நகரத்தில் பிடிப்பட்ட பொதுமக்களில் அறுபதுபேரையும் பிடித்தான்.
20 தளபதியான நேபுசராதான், இவர்களை ரிப்லாவிலிருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோனான்.
௨0அவர்களை மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான்.
21 அங்கே ஆமாத் நாட்டிலிருந்த ரிப்லாவிலே பாபிலோனிய அரசன் அவர்களைக் கொலைசெய்தான். இவ்விதமாக யூதா தன் சொந்த நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுப் போனாள்.
௨௧அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதாமக்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
22 யூதாவில் மீதியாக வைத்த மக்களின் மேலாக சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் நியமித்தான்.
௨௨பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த மக்களின்மேல், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.
23 யூதாவின் இராணுவ அதிகாரிகளும், அவர்களைச் சேர்ந்த எல்லா மனிதரும், பாபிலோன் அரசன், கெதலியாவை நாட்டுக்கு ஆளுநனாக நியமித்தான் என்று கேள்விப்பட்டபோது, மிஸ்பாவில் இருக்கும் கெதலியாவிடம் சென்றார்கள். இவ்வாறு சென்றவர்கள் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும், கரேயாவின் மகன் யோகனானும், நெத்தோபாத்தியனான தன்கூமேத்தின் மகன் செராயாவும், மாகாத்தியரின் மகன் யசனியாவும், அவர்களுடைய மனிதரும் ஆவர்.
௨௩பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல படைத்தலைவர்களும் அவர்களுடைய வீரர்களும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவிடம் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தானியாவின் மகன் இஸ்மவேலும், கரேயாவின் மகன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் மகன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய மகன் யசனியாவும் அவர்களுடைய மனிதர்களுமே.
24 அப்பொழுது கெதலியா அவர்களுக்கும், அவர்களுடைய மனிதர்களுக்கும் நம்பிக்கையூட்டும்படி ஒரு ஆணையைச் செய்தான். அவன், “கல்தேயரின் அதிகாரிகளுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். நீங்கள் நாட்டில் வாழ்ந்து, பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு எல்லாம் நன்மையாக இருக்கும்” என்றான்.
௨௪அப்பொழுது கெதலியா அவர்களுக்கும் அவர்கள் மனிதர்களுக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயர்களின் ஆளுகைக்கு உட்பட பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவிற்குக் கீழ்ப்பட்டிருங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
25 ஏழாம் மாதத்தில் எலிசாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனும், அரச குலத்தைச் சேர்ந்தவனுமான இஸ்மயேல், பத்து மனிதரோடு வந்து கெதலியாவையும், யூதாவின் மனிதரையும், மிஸ்பாவில் அவனோடிருந்த கல்தேயரையும் கொன்றான்.
௨௫ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிஷாமாவின் மகனாகிய நெத்தானியாவின் மகன் இஸ்மவேல் பத்து மனிதர்களோடு வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதர்களையும், கல்தேயர்களையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.
26 இதனால் சிறியோரிலிருந்து பெரியோர்வரை எல்லா மக்களும் இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து கல்தேயருக்குப் பயந்து எகிப்திற்கு ஓடிப்போனார்கள்.
௨௬அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய மக்கள் அனைவரும் படைத்தலைவர்களும் கல்தேயருக்குப் பயந்ததினாலே எழுந்து புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.
27 ஏவில் மெரொதாக் என்பவன் பாபிலோனுக்கு அரசனானபோது யூதாவின் அரசனான யோயாக்கீனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். இது யூதாவின் அரசனான யோயாக்கீன் சிறைப்பட்டுப்போன முப்பத்தேழாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாம் நாளில் நடந்தது.
௨௭யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருடத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து விடுதலைசெய்து, அவனுடைய தலையை உயர்த்தி,
28 அவன் யோயாக்கீனுடன் தயவாய்ப் பேசி தன்னோடு பாபிலோனில் இருந்த மற்ற அரசர்களைக் காட்டிலும் உயர்ந்த பதவியை அவனுக்குக் கொடுத்தான்.
௨௮அவனோடே அன்பாகப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்த ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,
29 அப்பொழுது யோயாக்கீன் தன் சிறைச்சாலை உடைகளை மாற்றி, மீதியான தன் வாழ்நாளெல்லாம் அரசனுடைய பந்தியிலே தினமும் சாப்பிட்டான்.
௨௯அவனுடைய சிறைச்சாலை உடைகளை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாட்களும் எப்பொழுதும் தனக்கு முன்பாக உணவருந்தச் செய்தான்.
30 யோயாக்கீன் உயிர்வாழ்ந்த நாளெல்லாம், அரசனால் அவனுக்கு நாள்தோறும் உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது.
௩0அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அனுதினத் திட்டத்தின்படி, ஒவ்வொருநாளும் கொடுக்கப்பட்டுவந்தது.