< 2 இராஜாக்கள் 18 >
1 ஏலாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் ஓசெயாவின் ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் ஆகாஸின் மகன் எசேக்கியா யூதாவை ஆட்சி செய்யத் தொடங்கினான்.
௧இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் மூன்றாம் வருட ஆட்சியில் ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய எசேக்கியா ராஜாவானான்.
2 அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சகரியாவின் மகளான அபியாள் என்பவள்.
௨அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் ஆபி.
3 எசேக்கியா தன் முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான்.
௩அவன் தன் முற்பிதாவாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
4 வழிபாட்டு மேடைகளை அகற்றி, புனித தூண்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வீழ்த்தினான். அத்துடன் மோசே செய்த வெண்கலப் பாம்பைத் துண்டுதுண்டாக உடைத்தான். அன்றுவரை இஸ்ரயேலர்கள் அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது நெகுஸ்தான் என்று அழைக்கப்பட்டது.
௪அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான்.
5 எசேக்கியா இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிகவும் உறுதியாக நம்பியிருந்தான். யூதா அரசர்களில் அவனைப்போல் ஒருவரும் அவனுக்கு முன்போ, பின்போ இருந்ததில்லை.
௫அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.
6 அவன் யெகோவாவை உறுதியாகப் பிடித்தவனாக அவரைப் பின்பற்றுவதைவிட்டு ஒருபோதும் விலகியதில்லை. மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளைக் கைக்கொண்டு நடந்தான்.
௬அவன் யெகோவாவைவிட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, யெகோவா மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.
7 யெகோவா அவனோடுகூட இருந்தார். அவன் எதைச் செய்தாலும் அவனுக்கு வெற்றியாகவே இருந்தது. அவன் அசீரியா அரசனுக்கு எதிராகக் கலகம்பண்ணி, அவனுக்குப் பணிசெய்ய மறுத்தான்.
௭ஆகையால் யெகோவா அவனோடிருந்தார்; அவன் போகிற இடமெங்கும் அவனுக்கு அனுகூலமானது; அவன் அசீரியா ராஜாவிற்குக் கட்டுப்படாமல், அவனுடைய அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.
8 அவன் பெலிஸ்தியருடன் போரிட்டு, காவற்கோபுரம் தொடங்கி அரணான பட்டணம்வரை காசாவின் எல்லைவரை அவர்களைத் துரத்தினான்.
௮அவன் பெலிஸ்தியர்களைக் காசாவரை அதின் எல்லைகள் வரைக்கும், காவலாளர்கள் காக்கிற கோபுரங்கள் துவங்கி பாதுகாப்பான நகரங்கள் வரைக்கும் தாக்கினான்.
9 எசேக்கியா அரசனாக வந்த நான்காம் வருடம், ஏலாவின் மகனான இஸ்ரயேல் அரசன் ஓசெயாவின் ஏழாம் வருடமாயிருந்தது. அந்த வருடத்தில் அசீரிய அரசன் சல்மனாசார் சமாரியாவுக்கு எதிராக அணிவகுத்து அதை முற்றுகையிட்டான்.
௯இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் ஏழாம் வருட ஆட்சியில் சரியான எசேக்கியா ராஜாவின் நான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாக வந்து அதை முற்றுகையிட்டான்.
10 மூன்று வருடங்களுக்குப் பின்பு அசீரியர் சமாரியாவைக் கைப்பற்றினார்கள். அந்த வருடம் எசேக்கியாவின் ஆறாம் வருட ஆட்சியும், இஸ்ரயேலின் அரசனாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியுமாயிருந்தது.
௧0மூன்றுவருடங்கள் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருட ஆட்சியிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியிலும் சமாரியா பிடிபட்டது.
11 அப்போது அசீரிய அரசன், இஸ்ரயேலரை அங்கிருந்து அசீரியாவுக்கு நாடுகடத்தி, அவர்களைக் ஆலாகிலும், ஆபோர் ஆற்றுக்கு அருகே இருக்கும் கோசானிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
௧௧அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
12 இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் அவருடைய உடன்படிக்கையை மீறியதால்தான் இவை நடந்தன. யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்த கட்டளைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவுமில்லை, அவற்றின்படி நடக்கவுமில்லை.
௧௨அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், அவருடைய உடன்படிக்கையையும் யெகோவாவின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதைக் கேட்காமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள்.
13 எசேக்கியா அரசனின் ஆட்சியின் பதினான்காம் வருடத்திலே, அசீரியா அரசன் சனகெரிப், யூதாவின் அரண்செய்யப்பட்ட பட்டணங்களையெல்லாம் தாக்கிக் கைப்பற்றினான்.
௧௩யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்தான்.
14 யூதாவின் அரசனாகிய எசேக்கியா, லாகீசிலுள்ள அசீரிய அரசனுக்கு அனுப்பிய செய்தியாவது: “நான் பிழை செய்தேன். என்னைவிட்டுப் போய்விடும். நீர் கேட்பது எதையும் நான் கொடுக்கிறேன்” என்பதாகும். அப்பொழுது அசீரிய அரசன் எசேக்கியாவிடம் முந்நூறு தாலந்து வெள்ளியையும், முப்பது தாலந்து தங்கத்தையும் தனக்காகப் பெற்றுக்கொண்டான்.
௧௪அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவிற்கு ஆள் அனுப்பி: நான் குற்றம்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.
15 அப்படியே எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனைத் திரவிய அறைகளிலும் இருந்த எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
௧௫ஆதலால் எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
16 அத்துடன் அவ்வேளையில் யூதாவின் அரசனான எசேக்கியா யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளையும், கதவு நிலைகளையும், தகடாக மூடிச்செய்திருந்த தங்கத்தையும் கழற்றி எடுத்து அசீரிய அரசனிடம் கொடுத்தான்.
௧௬அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா யெகோவாவுடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவிற்குக் கொடுத்தான்.
17 ஆனாலும் அசீரிய அரசன் தனது பிரதான தளபதியையும், தலைமை அதிகாரியையும், படைத்தளபதியையும் ஒரு பெரிய இராணுவப் படையுடன் லாகீசிலிருந்து எருசலேமிலிருந்த எசேக்கியா அரசனிடம் அனுப்பினான். அவர்கள் எருசலேமுக்கு வந்து வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலண்டையில் போய் நின்றார்கள்.
௧௭ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும், ரப்சாரீசையும், ரப்சாக்கேயையும் பெரிய படையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்தின் வாய்க்காலின் அருகில் நின்று,
18 அவர்கள் அரசனை அங்கே வரும்படி அழைத்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் மகனான அரண்மனை நிர்வாகி எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாபின் மகன் யோவாக்கும் அவர்களிடத்திற்கு வெளியே போனார்கள்.
௧௮ராஜாவை வரவழைத்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகனாகிய யோவாக் என்னும் கணக்காளனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
19 படைத்தளபதி அவர்களிடம், “நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதாவது: “‘பேரரசனாகிய அசீரியா அரசன் சொல்வது இதுவே: நீ உனது நம்பிக்கையை எந்த அடிப்படையில் இவ்வளவு உறுதியாக வைத்திருக்கிறாய்?
௧௯ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
20 உன்னிடம் போர் தந்திரமும், இராணுவ பெலனும் இருக்கிறதென்று சொல்லிக்கொள்கிறாய். ஆனால் அதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான். நீ என்னை எதிர்த்துக் கலகம் செய்ய யாரைச் சார்ந்திருக்கிறாய்?
௨0போருக்கு மந்திர ஆலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய் பேச்சேயல்லாமல் வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
21 இதோ, முறிக்கப்பட்ட நாணல் தண்டாகிய எகிப்தையா நீ நம்பியிருக்கிறாய்? அந்த நாணலில் சாய்ந்துகொள்கிற எவனுடைய கையையும் அது உருவக்குத்தி அவனைக் காயப்படுத்தும். எகிப்திய அரசனான பார்வோன் தன்னை நம்பியிருக்கிற யாவருக்கும் அப்படியே இருக்கிறான்.
௨௧இதோ, நெரிந்த நாணற்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவனுடைய உள்ளங்கையில் பட்டு ஊடுருவிப்போகும்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.
22 “நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவையே நம்பியிருக்கிறோம்” என்று என்பாயாகில், “எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தில் மட்டும்தான் வழிபடவேண்டும்” என்று, யூதாவுக்கும் எருசலேமில் உள்ளவர்களுக்கும் சொல்லி, எசேக்கியாவே அவருடைய வழிபாட்டு மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றினான் அல்லவா?
௨௨நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய யெகோவாவை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களானால், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
23 “‘எனவே வாரும், அசீரிய அரசனாகிய எனது தலைவனுடன் பேரம் ஒன்று பேசுவோம்: சவாரி பண்ணத்தக்க வீரர்களை உன்னால் தேடிக்கொள்ள முடியுமானால், நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன்.
௨௩நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத் தகுதியுள்ளவர்களைச் சம்பாதிக்க முடியுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதம்செய்.
24 தேர்களுக்காவும், குதிரைவீரர்களுக்காகவும் எகிப்தை நம்பியிருந்தாலுங்கூட, எனது தலைவனுடைய சிறிய அதிகாரிகளில் ஒருவனையேனும் எதிர்த்துத் துரத்த உங்களால் எப்படி முடியும்?
௨௪செய்யாமல்போனால், நீ என் ஆண்டவனுடைய வேலைக்காரர்களில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரர்களும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?
25 யெகோவாவின் சம்மதமில்லாமலா நான் இந்த இடத்தை அழிக்க வந்தேன்? யெகோவா தாமே இந்த நாட்டுக்கு எதிராக அணிவகுத்துச்சென்று இதை அழிக்கும்படி என்னிடம் கூறினார்’” என்றான்.
௨௫இப்போதும் யெகோவாவுடைய கட்டளையில்லாமல் இந்த இடத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று யெகோவா என்னோடே சொன்னாரே என்றான்.
26 அப்பொழுது இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செப்னாவும், யோவாக்கும், அசீரிய படைத்தளபதியிடம், “உமது அடியாரிடம் அராமிய மொழியில் பேசும்; அது எங்களுக்குப் புரியும். மதிலின்மேல் உள்ளவர்களுக்குக் கேட்கும்படி எபிரெய மொழியில் பேசவேண்டாம்” என்றார்கள்.
௨௬அப்பொழுது இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செப்னாவும், யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியார்களோடு சீரியமொழியிலே பேசும், அந்த மொழி எங்களுக்குத் தெரியும்; மதிலிலிருக்கிற மக்களின் காதுகள் கேட்க எங்களோடே எபிரேய மொழியிலே பேசவேண்டாம் என்றார்கள்.
27 ஆனால் அந்தப் படைத்தளபதியோ, “மதில்மேல் அமர்ந்திருப்பவர்களுக்கு அல்லாமல், உங்கள் தலைவருக்கும், உங்களுக்கும் மட்டுமா இவற்றைச் சொல்லும்படி எங்கள் தலைவர் என்னை அனுப்பியிருக்கிறார்? அவர்களும் உங்களுடன் தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடிக்கப் போகிறவர்களல்லவா” என்று பதிலளித்தான்.
௨௭அதற்கு ரப்சாக்கே: உங்களோடுகூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் மதிலிலே தங்கியிருக்கிற மனிதர்களிடத்திற்கே அல்லாமல், உன் எஜமானிடத்திற்கும் உன்னிடத்திற்குமா என் எஜமான் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
28 அதன்பின் அந்தத் தளபதி எழுந்து நின்று எபிரெய மொழியில் உரத்த சத்தமாய், “பேரரசனான அசீரிய அரசனின் வார்த்தையைக் கேளுங்கள்.
௨௮ரப்சாக்கே நின்றுகொண்டு யூதமொழியிலே உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
29 அரசன் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். என்னுடைய கையிலிருந்து உங்களை விடுவிக்க அவனால் முடியாது.
௨௯எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
30 எசேக்கியா உங்களிடம், ‘யெகோவா நிச்சயமாக நம்மை விடுவிப்பார், இந்தப் பட்டணமும் அசீரிய அரசனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்பட மாட்டாது’ என்று சொல்லி, அவன் உங்களை யெகோவாவிடம் நம்பிக்கை வைக்கும்படி இணங்கவைக்க முயற்சிப்பான். அதற்கு நீங்கள் இடங்கொடுக்க வேண்டாம்.
௩0யெகோவா நம்மை நிச்சயமாகத் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் யெகோவாவை நம்பச்செய்வான்; அதற்கு இடம்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.
31 “எசேக்கியாவின் சொல்லைக் கேளாதீர்கள். அசீரிய அரசன் கூறுவது இதுவே: என்னுடன் சமாதானமாகி, என்னிடம் வாருங்கள். அப்போது உங்களில் ஒவ்வொருவரும் தன்தன் திராட்சைக் கொடியிலிருந்தும், தன்தன் அத்திமரத்திலிருந்தும் கனியை சாப்பிட்டு, தன் சொந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரையும் குடிப்பான்.
௩௧எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே சமாதானமாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்திற்கு ஒப்பான தானியமும் திராட்சைத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சைரசமும் உள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனும் உள்ள தேசமுமாகிய வேறொரு நாட்டிற்கு அழைத்துக்கொண்டுபோகும் வரைக்கும்,
32 நான் திரும்ப வந்து தானியம் நிறைந்ததும், புதிய திராட்சை இரசம் உள்ளதும், அப்பமும் திராட்சைத் தோட்டங்களும், ஒலிவமரங்களும், தேனும் நிறைந்ததுமான உங்கள் நாட்டைப் போன்ற ஒரு நாட்டுக்கு உங்களைக் கொண்டுபோகும் வரைக்கும் நீங்கள் அப்படியே சாப்பிட்டுக் குடிப்பீர்கள். மரணத்தையல்ல வாழ்வையே தெரிந்துகொள்ளுங்கள். “எசேக்கியாவுக்குச் செவிகொடுக்க வேண்டாம். ‘யெகோவா எங்களை விடுவிப்பார்’ என்று கூறி உங்களைத் தவறாக வழிநடத்துகிறான்.
௩௨அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் பழத்தையும் தன்தன் அத்திமரத்தின் பழத்தையும் சாப்பிட்டு, அவனவன் தன்தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாக நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; யெகோவா நம்மைத் தப்புவிப்பார் என்று எசேக்கியா உங்களுக்குப் போதிக்கும்போது அதைக் கேட்காதிருங்கள்.
33 எந்த நாட்டின் தெய்வங்களாவது அசீரிய அரசனின் கையிலிருந்து தன் நாட்டை எப்போதாவது மீட்டதுண்டோ?
௩௩மக்களுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
34 ஆமாத், அர்பாத்தின் தெய்வங்கள் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, இவ்வா என்னும் பட்டணங்களின் தெய்வங்கள் எங்கே? அவை எனது கரத்திலிருந்து சமாரியாவை விடுவித்தனவோ?
௩௪ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவா பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
35 இந்த நாடுகளின் தெய்வங்களில் என் கையிலிருந்து தங்கள் நாட்டை விடுவிக்கக்கூடியதாக இருந்த தெய்வம் எது? அப்படியிருக்க எனது கையிலிருந்து எருசலேமை யெகோவா எப்படி விடுவிப்பார்? என்கிறார்” என்றான்.
௩௫யெகோவா எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான்.
36 இவற்றுக்கெல்லாம் பதில் கொடுக்கக் கூடாதென்று அரசனால் கட்டளை கொடுக்கப்பட்டபடியினால், மக்கள் மவுனமாயிருந்து எவ்வித பதிலையும் அவனுக்குக் கொடுக்கவில்லை.
௩௬ஆனாலும் மக்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்திரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
37 பின்பு அரண்மனை அதிகாரியான இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாப்பின் மகன் யோவாக்கும் உடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவிடம் போய் அசீரிய படைத்தளபதி கூறியவற்றைச் சொன்னார்கள்.
௩௭அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகன் யோவாக் என்னும் கணக்காளனும் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.