< 2 நாளாகமம் 9 >

1 சாலொமோனின் புகழை சேபாவின் அரசி கேள்விப்பட்டபோது, அவள் அவனை கடினமான கேள்விகளால் சோதிப்பதற்காக எருசலேமுக்கு வந்தாள். அவள் தனது ஒட்டகங்களில் வாசனைப் பொருட்களையும், பெருந்தொகையான தங்கத்தையும், மாணிக்கக் கற்களையும் ஏற்றிக்கொண்டு, தனது பரிவாரங்களுடன் வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து, தனது மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் அவனுடன் பேசினாள்.
சேபாவின் அரசி, சாலொமோனின் புகழைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனை சோதிக்கிறதற்காக, திரளான கூட்டத்தினரோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்திற்கு வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் உரையாடினாள்.
2 சாலொமோன் அவளுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். அவன் அவளுக்கு விளக்கிச் சொல்ல முடியாத பதில் ஒன்றும் இருக்கவில்லை.
அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளுக்கெல்லாம் பதில் கூறினான்; அவளுக்கு பதில் கூறமுடியாதபடி ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.
3 சேபாவின் அரசி சாலொமோனுடைய ஞானத்தையும், அத்துடன் அவன் கட்டியிருந்த அரண்மனையையும்,
சேபாவின் அரசி சாலொமோனுடைய பானபாத்திரக்காரர்களையும், அரண்மனையையும்,
4 அவனுடைய மேஜையிலிருந்த உணவையும், அவன் அலுவலர்களையும், தங்கள் உடைகளில் காணப்பட்ட பணியாளர்களையும், திராட்சை இரசம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவின் ஆலயத்தில் செலுத்திய தகன காணிக்கைகளையும் கண்டபோது, அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள்.
பந்தியின் உணவு வகைகளையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் உடைகளையும், அவனுடைய பானபாத்திரக்காரர்களையும், அவர்கள் உடைகளையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமித்து,
5 அப்பொழுது சேபாவின் அரசி அரசனிடம், “உமது சாதனைகளையும், உமது ஞானத்தையும் பற்றி நான் எனது நாட்டில் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது.
ராஜாவை நோக்கி: உம்முடைய செயல்களையும், உம்முடைய ஞானத்தையும்குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி உண்மைதான்.
6 ஆனால் நான் வந்து என் சொந்தக் கண்களால் பார்க்கும்வரை அவர்கள் சொன்னவற்றை நம்பவேயில்லை. உண்மையிலேயே உமது ஞானத்தின் மேன்மையில் பாதியாகிலும் எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைப் பார்க்கிலும், நீர் அதிக மேன்மை உடையவராயிருக்கிறீர்.
நான் வந்து அதை என் கண்களால் பார்க்கும்வரை அவர்களுடைய வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட அதிகம் உண்டாயிருக்கிறது.
7 உமது மக்கள் எவ்வளவு சந்தோஷமுடையவர்களாய் இருக்கவேண்டும். எப்பொழுதும் உமது முன்நின்று உமது ஞானத்தைக் கேட்கும் உமது அதிகாரிகள் எவ்வளவு மகிழ்ச்சியுடையவர்களாய் இருக்கவேண்டும்.
உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரர்களும் பாக்கியவான்கள்.
8 உம்மில் பிரியங்கொண்டு, உம்மைத் தமது அரியணையில் அமர்த்தி, தமக்காக உம்மை அரசனாக்கிய உம்முடைய இறைவனாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. இஸ்ரயேல் மக்களை நிலைநிறுத்த உமது இறைவன் அவர்கள்மேல் கொண்டுள்ள அன்பினால், நீர் அவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் காத்து நடத்தும்படி அவர்களின்மேல் உம்மை அரசனாக்கியிருக்கிறார்” என்று சொன்னாள்.
உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கச் செய்ய, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய யெகோவா ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்கு சிநேகிக்கிறதாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்.
9 பின்பு அவள் அரசனுக்கு நூற்றிருபது தாலந்து தங்கத்தையும், பெருந்தொகையான வாசனைப் பொருட்களையும் விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும் கொடுத்தாள். சேபாவின் அரசி சாலொமோன் அரசனுக்குக் கொடுத்த வாசனைப் பொருட்களைப்போல, அங்கே ஒருபோதும் அவை இருந்ததில்லை.
அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் அரசி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருபோதும் வரவில்லை.
10 ஈராமின் மனிதரும், சாலொமோனின் மனிதரும் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டுவந்தார்கள். அத்துடன் அவர்கள் அல்மக் வாசனை மரங்களையும், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும் கொண்டுவந்தார்கள்.
௧0ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.
11 அரசன் அந்த அல்மக் மரங்களை யெகோவாவின் ஆலயத்துக்கும், அரச அரண்மனைக்கும் படிகளை அமைக்கவும், இசைக் கலைஞர்களுக்கான யாழ்களையும், வீணைகளையும் செய்வதற்கும் பயன்படுத்தினான். அப்படிப்பட்டவைகள் யூதாவில் ஒருபோதும் காணப்படவில்லை.
௧௧அந்த வாசனை மரங்களால் ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் படிக்கட்டுகளையும், இசைக்கலைஞர்களுக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை.
12 சாலொமோன் அரசன் சேபாவின் அரசி ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். அவள் தனக்குக் கொண்டுவந்தவற்றைவிட அதிகமாகவே அவன் அவளுக்குக் கொடுத்தான். அதன்பின் அவள் புறப்பட்டு தன் பரிவாரங்களோடு தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போனாள்.
௧௨சேபாவின் அரசி ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைவிட அவள் ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்கு அதிகமாகக் கொடுத்தான்; பின்பு அவள் தன் கூட்டத்தினரோடு தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
13 ஒவ்வொரு வருடமும் சாலொமோன் பெற்ற தங்கத்தின் எடை அறுநூற்று அறுபத்தாறு தாலந்துகள் இருந்தன.
௧௩சிறிய மற்றும் பெரிய வியாபாரிகள் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருடத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து எடையுள்ளதாக இருந்தது.
14 இத்துடன் வியாபாரிகளும் வர்த்தகர்களும் கொண்டுவந்ததைத் தவிர, அரேபியா நாட்டு அரசர்களும், உள்நாட்டின் ஆளுநர்களும் சாலொமோனுக்குத் தங்கமும் வெள்ளியும் கொண்டுவந்தார்கள்.
௧௪அரபுதேசங்களின் அனைத்து ராஜாக்களும், ஆளுநர்களும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.
15 சாலொமோன் அரசன் அடித்த தங்கத்தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் அறுநூறு சேக்கல் எடையுள்ள அடிக்கப்பட்ட தங்கம் செலவு செய்யப்பட்டது.
௧௫ராஜாவாகிய சாலொமோன் இருநூறு கேடகங்களை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு அறுநூறு சேக்கல் எடை பொன் தகட்டைச் செலவழித்தான்.
16 அத்துடன் அவன் அடித்த தங்கத்தால் முந்நூறு சிறிய கேடயங்களையும் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் முந்நூறு சேக்கல் எடையுள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டது. அரசன் அவைகளை லெபனோன் வனம் என்ற அரண்மனையில் வைத்தான்.
௧௬அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல் எடை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
17 அதன்பின் அரசன் ஒரு பெரிய அரியணையைச் செய்து யானைத் தந்தத்தினால் அலங்கரித்தான். பின்பு அதை சுத்தமான தங்கத்தகட்டால் மூடினான்.
௧௭ராஜா தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.
18 அரியணைக்கு ஆறு படிகளும் அதனுடன் இணைக்கப்பட்ட தங்கத்தினால் செய்த ஒரு பாதபடியும் இருந்தது. அரியணையின் இரு பக்கங்களிலும் கைத்தாங்கிகள் இருந்தன. அவற்றின் இருபுறங்களிலும் ஒவ்வொரு சிங்கத்தின் உருவம் இருந்தது.
௧௮அந்தச் சிங்காசனத்திற்குப் பொன்னினால் செய்யப்பட்ட ஆறு படிகளும், ஒரு பாதப்படியும், உட்காரும் இடத்திற்கு இருபுறத்திலும் கை சாய்மானங்களும் இருந்தன; இரண்டு சிங்கங்கள் கை சாய்மானங்கள் அருகே நின்றன.
19 ஒவ்வொரு படியின் முனையிலும் இரு சிங்கங்களாக ஆறுபடிகளிலும் பன்னிரண்டு சிங்க உருவங்கள் நின்றன. வேறு எந்த அரசாட்சியிலும் இப்படியான ஒரு அரியணை எக்காலத்திலும் செய்யப்பட்டிருக்கவில்லை.
௧௯அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றன; எந்த ராஜ்ஜியத்திலும் இப்படிச் செய்யப்படவில்லை.
20 சாலொமோன் அரசனின் பானபாத்திரங்கள் யாவும் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன. லெபனோன் வனமாளிகை மண்டபத்திலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தன. வெள்ளியினால் ஒன்றும் செய்யப்படவில்லை. ஏனெனில் சாலொமோனின் நாட்களில் வெள்ளி குறைந்த மதிப்புடையதாகவே கருதப்பட்டது.
௨0ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை.
21 அரசனின் வியாபாரக் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கப்பல்கள் போய்த் திரும்பி வரும்போது தங்கம், வெள்ளி, யானைத்தந்தம், குரங்குகள், மயில்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன.
௨௧ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
22 பூமியிலுள்ள மற்ற அரசர்களைவிட அரசன் சாலொமோன் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவனாய் இருந்தான்.
௨௨பூமியின் அனைத்து ராஜாக்களையும்விட சாலொமோன் ராஜா ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
23 பூமியிலுள்ள அரசர்கள் எல்லோரும் சாலொமோனின் இருதயத்தில் இறைவன் கொடுத்த ஞானத்தைக் கேட்பதற்கு அவனை நாடி வந்தார்கள்.
௨௩சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லோரும் அவனுடைய முகதரிசனத்தைத் தேடினார்கள்.
24 வருடந்தோறும் அவனிடம் வந்த ஒவ்வொருவரும் அன்பளிப்பைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெள்ளிப் பாத்திரங்கள், தங்கப் பாத்திரங்கள், அங்கிகள், ஆயுதங்கள், வாசனைப் பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.
௨௪வருடந்தோறும் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
25 சாலொமோனிடம் குதிரைகளுக்கும், தேர்களுக்கும் 4,000 தொழுவங்கள் இருந்தன. 12,000 குதிரைகளை தேர்ப் பட்டணங்களிலும் அரசன் தன்னுடன் எருசலேமிலும் வைத்திருந்தான்.
௨௫சாலொமோனுக்கு நான்காயிரம் குதிரைலாயங்களும் இரதங்களும் இருந்தன, பனிரெண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.
26 அவன் ஐபிராத்து நதிதொடங்கி எகிப்தின் எல்லை மட்டுமுள்ள பெலிஸ்திய நாடுவரையுள்ள எல்லா அரசர்களுக்கும் மேலாக ஆளுகை செய்தான்.
௨௬நதி துவங்கிப் பெலிஸ்தரின் தேசம்வரை எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற அனைத்து ராஜாக்களையும் அவன் ஆண்டான்.
27 அரசன் எருசலேமில் வெள்ளியைக் கற்களைப்போல் சாதாரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரத்திலுள்ள காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான்.
௨௭எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
28 சாலொமோனுக்கு குதிரைகள் எகிப்திலிருந்தும் மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன.
௨௮எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது.
29 சாலொமோனின் அரசாட்சியின் மற்ற நிகழ்வுகள், தொடக்கமுதல் முடிவுவரை, இறைவாக்கினன் நாத்தானின் பதிவேடுகளிலும், சீலோனியனான அகியாவின் இறைவாக்கிலும், நேபாத்தின் மகன் யெரொபெயாமைப் பற்றிய தரிசனக்காரனான இத்தோவின் தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கின்றன.
௨௯சாலொமோனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள மற்ற செயல்கள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புத்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமைக்குறித்து தரிசனம் காண்கிறவனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது.
30 சாலொமோன் இஸ்ரயேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் எருசலேமிலிருந்து அரசாண்டான்.
௩0சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்.
31 இதன்பின் சாலொமோன் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பனான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ரெகொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான்.
௩௧பின்பு சாலொமோன் இறந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.

< 2 நாளாகமம் 9 >