< 2 நாளாகமம் 6 >
1 அப்பொழுது சாலொமோன்: “நான் கார்மேகத்தில் தங்கியிருப்பேன் என யெகோவா சொன்னார்,
2 நானோ உமக்காக நீர் என்றென்றும் குடியிருக்க ஒரு மேன்மையான ஆலயத்தைக் கட்டியிருக்கிறேன் என்றும்” சொன்னான்.
3 இஸ்ரயேல் மக்கள் நின்றுகொண்டிருக்கையில், அரசன் அவர்கள் பக்கம் திரும்பிப்பார்த்து அவர்களை ஆசீர்வதித்தான்.
4 பின்பு அவன், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. அவர் எனது தகப்பன் தாவீதுக்கு வாயினால் வாக்குப்பண்ணியதை, தமது கரங்களினால் நிறைவேற்றியிருக்கிறார். அவர் சொன்னதாவது,
5 அவர், ‘எகிப்திலிருந்து என் மக்களாகிய இஸ்ரயேலரை நான் கொண்டுவந்த நாளிலிருந்து, என் பெயர் விளங்கும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, இஸ்ரயேலின் எந்தக் கோத்திரத்திலாகிலும் ஒரு பட்டணத்தை நான் தெரிந்துகொள்ளவுமில்லை, எனது மக்களான இஸ்ரயேல்மேல் தலைவனாயிருக்கும்படி ஒருவனையும் தேர்ந்தெடுக்கவுமில்லை.
6 ஆனால் இப்பொழுது நான் எனது பெயர் விளங்கும்படி எருசலேமைத் தெரிந்தெடுத்திருக்கிறேன். எனது மக்களாகிய இஸ்ரயேலை ஆள்வதற்கு தாவீதைத் தெரிந்துகொண்டேன்.’
7 “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற விருப்பம் எனது தகப்பன் தாவீதின் இருதயத்தில் இருந்தது.
8 ஆனால் யெகோவா என் தகப்பனாகிய தாவீதைப் பார்த்து, ‘என் பெயருக்காக ஒரு ஆலயத்தை நீ கட்ட விரும்பினாய். இவ்வாறு நீ நினைத்தது நல்லதுதான்.
9 அப்படியிருந்தும் ஆலயத்தைக் கட்டவேண்டியது நீயல்ல. உனக்குப் பிறக்கும் உன் மகனே என்னுடைய பெயருக்கென்று ஆலயத்தைக் கட்டுவான்’ என்று கூறினார்.
10 “இப்பொழுது யெகோவா தாம் கூறிய வாக்கை நிறைவேற்றினார். யெகோவா வாக்குப்பண்ணியபடியே என் தகப்பன் தாவீதுக்குப் பின் நான் இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்திருக்கிறேன். நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு இந்த ஆலயத்தையும் கட்டியிருக்கிறேன்.
11 அங்கே நான் பெட்டியை வைத்தேன். அதில் இஸ்ரயேல் மக்களுடன் யெகோவா செய்த உடன்படிக்கை இருக்கிறது” என்றான்.
12 அதன்பின் சாலொமோன், இஸ்ரயேலின் சபையார் எல்லோருக்கும் முன்பாக, யெகோவாவின் பலிபீடத்தின் முன்நின்று தன் கைகளை விரித்தான்.
13 சாலொமோன் ஐந்துமுழ நீளமும், ஐந்துமுழ அகலமும், மூன்றுமுழ உயரமுமுடைய ஒரு வெண்கல மேடையைச் செய்து, அதை வெளிமுற்றத்தின் நடுவில் வைத்திருந்தான். இப்பொழுது அவன் அதில் ஏறி நின்று, கூடியிருந்த இஸ்ரயேலின் சபையார் எல்லோருக்கும் முன்பாக முழங்காற்படியிட்டு, வானத்தை நோக்கித் தன் கைகளை விரித்தான்.
14 அதன்பின் அவன், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, வானத்திலும் பூமியிலும் உம்மைப்போல் இறைவன் இல்லை; உமது வழியில் முழுமனதோடு தொடர்ந்து நடக்கிற உமது அடியவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையின்படி செயலாற்றுகிறவர் நீரே.
15 உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினீர். உமது வாயினால் நீர் வாக்குப்பண்ணியதை உமது கையினால் இன்று இருப்பதுபோல் நிறைவேற்றினீர்.
16 “இப்பொழுதும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, நீர் உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ளும். நீர் அவரிடம், ‘நீ என்முன் எனது சட்டத்தின்படி நடந்ததுபோல், உனது மகன்களும் அதின்படி நடக்க தாங்கள் செய்வதெல்லாவற்றிலும் கவனமாயிருந்தால், இஸ்ரயேலின் அரியணையில் எனக்கு முன்பாக இருப்பதற்கு உனக்கு ஒரு மகன் இல்லாமல் போவதில்லை’ என்று சொன்னீரே.
17 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியானாகிய தாவீதுக்கு நீர் வாக்குப்பண்ணிய வார்த்தைகளை நிறைவேற்றும்.
18 “ஆனாலும் உண்மையாகவே இறைவன் பூமியில் மனிதனோடு வாழ்வாரோ? வானங்களும் வானாதி வானங்களும் உம்மை உள்ளடக்க முடியாதிருக்க, நான் கட்டிய இந்த ஆலயம் எம்மாத்திரம்!
19 என் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியவனாகிய என் மன்றாட்டையும், இரக்கத்திற்கான வேண்டுதலையும் கவனித்துக் கேளும்; உமது அடியவன் உமது சமுகத்தில் மன்றாடும் கதறுதலையும் விண்ணப்பத்தையும் கேட்பீராக.
20 உமது பெயர் விளங்குமென்று நீர் சொன்ன இடமான இந்த ஆலயத்தை, உமது கண்கள் இரவும் பகலும் நோக்குவதாக. இந்த இடத்தை நோக்கி, உமது அடியேன் செய்யும் மன்றாட்டை நீர் கேட்பீராக.
21 இந்த இடத்தை நோக்கி உமது அடியவனும், உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரும் மன்றாடும்போது, எங்களுடைய விண்ணப்பத்தைக் கேளும். உம்முடைய உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேளும்; நீர் கேட்கும்போது மன்னியும்.
22 “ஒரு மனிதன் தன் அயலானுக்கு தவறு செய்திருக்கையில், அவன் ஆணையிடும்படி கேட்கப்பட்டால், அவன் வந்து இந்த ஆலயத்தில் உமது பலிபீடத்தின்முன் ஆணையிட்டால்,
23 அப்பொழுது நீர் வானத்திலிருந்து கேட்டு நியாயம் செய்யும். குற்றம் செய்தவனுக்கு அவன் செய்ததற்கேற்ற தண்டனையை அவன் தலைமேல் வரப்பண்ணி, உமது அடியவருக்கு இடையில் நியாயம் செய்யும். குற்றமற்றவனை குற்றமற்றவன் என்று அவனுடைய குற்றமின்மையை நிலைநாட்டும்.
24 “உமது மக்களாகிய இஸ்ரயேலர், உமக்கு எதிராக பாவம் செய்ததினால், பகைவர்களால் தோற்கடிக்கப்படலாம். அப்பொழுது அவர்கள் மனந்திரும்பி உமது பெயரை அறிக்கையிட்டு, இந்த ஆலயத்தில் உம்மிடம் மன்றாடி, விண்ணப்பம் செய்யும்போது,
25 பரலோகத்திலிருந்து கேட்டு உமது மக்களாகிய இஸ்ரயேலின் பாவத்தை மன்னியும். நீர் அவர்களுக்கும், அவர்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிற்குத் திரும்பவும் அவர்களைக் கொண்டுவாரும்.
26 “உமக்கெதிராக உமது மக்கள் பாவம் செய்ததினால், வானங்கள் அடைக்கப்பட்டு, மழை இல்லாமல் போகும்போது, நீர் அவர்களைத் துன்புறுத்தியதால், இந்த இடத்தை நோக்கி அவர்கள் மன்றாடுவார்கள். அவ்வாறு அவர்கள் உமது பெயரை அறிக்கையிட்டு, தங்கள் பாவத்தைவிட்டு மனந்திரும்பி வேண்டும்போது,
27 நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உமது அடியவர்களும், உமது மக்களுமான இஸ்ரயேலரின் பாவத்தை மன்னியும். அவர்கள் வாழ்வதற்கு சரியான வழியைக் கற்பியும். நீர் உமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டில் மழையை அனுப்பும்.
28 “நாட்டில் பஞ்சம் அல்லது கொள்ளைநோய் வருகிறபோதும், தாவர நோய், பூஞ்சணம், வெட்டுக்கிளி, தத்துவெட்டி வருகின்றபோதும், அல்லது பகைவர்கள் அவர்களுடைய பட்டணங்களில் ஏதாவது ஒன்றை முற்றுகையிடும்போதோ, எந்தவித பேராபத்துகளோ, வியாதியோ வரும்போதும்,
29 அப்பொழுது உமது மக்களாகிய இஸ்ரயேலர் எவராவது தன் வேதனைகளையும் துன்பங்களையும் உணர்ந்தவர்களாய், இந்த ஆலயத்தை நோக்கித் தங்கள் கைகளை விரித்து மன்றாட்டையோ விண்ணப்பத்தையோ செய்தால்,
30 உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேட்டு மன்னியும். நீர் ஒவ்வொருவருடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியால், அவனவன் செய்த செயல்களுக்குமேற்ப அவனவனுக்குச் செய்யும். மனிதரின் இருதயங்களை அறிந்திருக்கிறவர் நீர் மட்டுமே.
31 அதனால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்கள் வாழும் காலமெல்லாம் உமக்குப் பயந்து, உமது வழியில் நடப்பார்கள்.
32 “உம்முடைய மக்களான இஸ்ரயேலரைச் சேராதவனும், தூரதேசத்திலிருந்து வந்த அந்நியன் உமது பெரிதான பெயரின் நிமித்தமும், உமது வலிமைமிக்க கரத்தின் நிமித்தமும், நீட்டிய புயத்தின் நிமித்தமும் தூரதேசத்திலிருந்து வந்த அவன் இந்த ஆலயத்தை நோக்கி மன்றாடும்போது,
33 நீர் உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து அதைக்கேட்டு அந்த அந்நியன் உம்மிடம் கேட்பது எதுவானாலும் அதைச் செய்யும். அப்பொழுது பூமியில் எல்லா மக்களும் உமது பெயரை அறிந்து, உமது சொந்த மக்களாகிய இஸ்ரயேலர் நடப்பதுபோல் உமக்குப் பயந்து நடப்பார்கள். அத்துடன் நான் கட்டிய இந்த ஆலயத்தில் உமது பெயர் விளங்குகிறது என்றும் அறிவார்கள்.
34 “உமது மக்கள் தங்கள் பகைவர்களுக்கெதிராக போருக்குப் போகக்கூடும். அவ்வாறு நீர் அவர்களை எங்கே அனுப்பினாலும், நீர் தெரிந்துகொண்ட இந்தப் பட்டணத்தையும், உமது பெயருக்கு நான் கட்டிய இந்த ஆலயத்தையும் நோக்கி அவர்கள் மன்றாடும்போது,
35 பரலோகத்திலிருந்து அவர்களுடைய மன்றாட்டையும், வேண்டுதலையும் கேட்டு அவர்களுடைய சார்பாய் செயலாற்றும்.
36 “பாவம் செய்யாதவன் எவனும் இல்லை. அதனால் அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்வார்கள்; அப்பொழுது நீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களை அவர்களின் பகைவரிடம் ஒப்புக்கொடுத்தால், பகைவர்கள் அவர்களைத் தூரத்திலோ அருகிலோ உள்ள நாட்டிற்கு சிறைபிடித்துக்கொண்டு போவார்கள்.
37 அவர்கள் தாங்கள் கைதிகளாய் இருக்கும் நாட்டில் உணர்ந்து மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து, தீமையான செயல்களைச் செய்து, கொடுமையாய் நடந்தோம்’ என்று சிறைபட்டுப்போன நாட்டிலே உம்மிடம் அவர்கள் கெஞ்சி,
38 அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் நாட்டில் இருந்து, தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, நீர் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டையும், நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், நான் உமது பெயருக்கென கட்டிய ஆலயத்தையும் நோக்கி உம்மை நோக்கி அவர்கள் மன்றாடினால்,
39 நீர் குடியிருக்கும் இடமான பரலோகத்திலிருந்து அவர்கள் மன்றாட்டையும் கெஞ்சுதலையும் கேட்டு, அவர்கள் சார்பாய் செயலாற்றும். உமக்கெதிராகப் பாவஞ்செய்த உமது மக்களை மன்னியும்.
40 “என் இறைவனே, இந்த இடத்தில் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு உமது கண்களும் காதுகளும் கவனமாகத் திறந்திருக்கட்டும்.
41 “இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே எழுந்திரும்,
42 இறைவனாகிய யெகோவாவே, நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.