< 2 நாளாகமம் 32 >
1 எசேக்கியா இவையெல்லாவற்றையும் உண்மையுடன் செய்துமுடித்தான். பின் அசீரியாவின் அரசன் சனகெரிப் வந்து யூதாவின்மேல் படையெடுத்தான். அவன் அரண்செய்யப்பட்ட பட்டணங்களை வெற்றிகொள்ள எண்ணி அவற்றை முற்றுகையிட்டான்.
௧இந்தக்காரியங்கள் நிறைவேறிவரும்போது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, பாதுகாப்பான பட்டணங்களுக்கு எதிராக முகாமிட்டு, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.
2 சனகெரிப் வந்திருப்பதையும், அவன் எருசலேமின்மேல் யுத்தம் செய்ய நோக்கம் கொண்டிருப்பதையும் எசேக்கியா கண்டான்.
௨சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் போர்செய்யத் திட்டமிட்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,
3 அப்பொழுது அவன் தனது அலுவலர்களுடனும், இராணுவ அதிகாரிகளுடனும் பட்டணத்திற்கு வெளியேயுள்ள நீரூற்றுக்களைத் தடைசெய்வதுபற்றி கலந்தாலோசித்தான். அவர்களும் அவனுக்கு உதவினார்கள்.
௩நகரத்திற்கு வெளியே இருக்கிற ஊற்றுகளை அடைத்துவிட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைசெய்தான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.
4 மனிதர் திரளாய் ஒன்றுகூடி வந்து, எல்லா நீரூற்றுகளையும் நாட்டின் வழியாக ஓடிய நீரோடைகளையும் தடுத்து நிறுத்தினார்கள். “அசீரிய அரசர்கள் வந்து ஏன் நிறைந்த தண்ணீரின் செழிப்பைக் கண்டுகொள்ளவேண்டும்” என்று சொல்லியே அவர்கள் இப்படிச் செய்தார்கள்.
௪அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி, அநேகம் மக்கள் கூடி, அனைத்து ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் அடைத்துப்போட்டார்கள்.
5 அதன்பின் அவன் கடும் முயற்சியுடன் மதில்களின் உடைந்த பகுதிகளையெல்லாம் திருத்தி மதிலின்மேல் கோபுரங்களையும் கட்டினான். அவன் அந்த மதிலுக்கு வெளியே வேறு ஒரு மதிலையும் கட்டி தாவீதின் பட்டணத்தில் ஆதார தளவரிசைகளையும் பலப்படுத்தினான். அத்துடன் அவன் ஏராளமான ஆயுதங்களையும் கேடயங்களையும் செய்திருந்தான்.
௫அவன் திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதில்களையும் கோபுரங்கள் வரை உயர்த்தி, தாவீதின் நகரத்தினுடைய கோட்டையைப் பலப்படுத்த, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்செய்து,
6 அவன் மக்களுக்கு மேலாக இராணுவ அதிகாரிகளையும் நியமித்தான். அவர்களை அவனுக்கு முன்பாக பட்டண வாசலிலுள்ள வீதியில் ஒன்றுகூட்டி, தைரியமூட்டும் வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினான்.
௬மக்களின்மேல் படைத்தலைவரை ஏற்படுத்தி, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னருகில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
7 “பலங்கொண்டு தைரியமாயிருங்கள். அசீரிய அரசனையும், அவனுடனிருக்கும் பெரும் இராணுவத்தையும் கண்டு நீங்கள் பயப்படவோ, மனஞ்சோரவோ வேண்டாம். ஏனெனில் அவனுடன் இருக்கும் படையைவிட மிகப்பெரிய வல்லமை நம்முடன் இருக்கிறது.
௭நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம்.
8 அவனுடன் இருப்பது மாம்ச புயமே, ஆனால் நமக்கு உதவிசெய்யவும், நம்மோடு யுத்தத்தில் சண்டையிடவும் இறைவனாகிய யெகோவா நம்முடன் இருக்கிறார்” என்றான். யூதாவின் அரசன் எசேக்கியா சொன்னவற்றைக் கேட்டு மக்கள் நம்பிக்கை கொண்டார்கள்.
௮அவனோடு இருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய போர்களை நடத்த நம்மோடு இருக்கிறவர் நம்முடைய தேவனாகிய யெகோவாதானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் மக்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
9 இவற்றிற்குப்பின் அசீரிய அரசன் சனகெரிப்பும், அவனுடைய எல்லாப் படைகளும் லாகீசை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவன், யூதாவின் அரசன் எசேக்கியாவிடமும், அங்கேயிருந்த யூதா மக்களிடமும் எருசலேமுக்குத் தனது அதிகாரிகளை ஒரு செய்தியுடன் அனுப்பினான்.
௯இதன்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழு படையுடன் லாகீசுக்கு எதிராக முற்றுகை போட்டிருக்கும்போது, யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்திற்கும், எருசலேமிலுள்ள யூதா மக்கள் அனைவரிடத்திற்கும் தன் வேலைக்காரர்களை அனுப்பி:
10 “அசீரியாவின் அரசன் சனகெரிப் சொல்வது இதுவே: எதன்மேல் உங்கள் நம்பிக்கையை வைத்து முற்றுகையிடப்பட்ட எருசலேமுக்குள் தொடர்ந்து இருக்கிறீர்கள்?
௧0அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றுகை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருப்பதற்கு, நீங்கள் எதன்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?
11 எசேக்கியா, ‘இறைவனாகிய எங்கள் யெகோவா அசீரிய அரசனின் கையிலிருந்து நம்மை விடுவிப்பார்’ எனச் சொல்லி உங்களைத் தவறாக வழிநடத்துகிறான். அவன் உங்களைப் பசியாலும், தாகத்தாலும் சாகடிக்கப்போகிறான்.
௧௧நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தாலும் சாகும்படி உங்களுக்குப் போதிக்கிறான் அல்லவா?
12 எசேக்கியாதானே இந்த தெய்வத்தின் வழிபாட்டு மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றிப்போட்டான். ‘நீங்கள் கட்டாயமாக ஒரே பலிபீடத்தின் முன்னே வழிபட்டு, அதின்மேல் தான் பலிகளை எரிக்கவேண்டும் என அவன் யூதாவுக்கும், எருசலேமுக்கும் சொல்லவில்லையா’?
௧௨அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியர்களுக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா?
13 “நானும் எனது தந்தையரும் மற்ற நாட்டு மக்கள் கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் செய்தது உங்களுக்குத் தெரியாதா? அந்த நாடுகளின் தெய்வங்களால், அவர்களுடைய நாட்டை என் கையிலிருந்து காப்பாற்ற எப்பொழுதாவது முடிந்ததா?
௧௩நானும் என் முன்னோர்களும் தேசத்து சகல மக்களுக்கும் செய்ததை அறியவில்லையா? அந்த தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ?
14 எனது முற்பிதாக்கள் அழித்துப்போட்ட இந்த நாடுகளின் தெய்வங்களில் எந்த தெய்வத்தினால் என்னிடமிருந்து தன் மக்களைப் பாதுகாக்க முடிந்தது? பின் எப்படி உங்கள் தெய்வத்தால் உங்களை எனது கையிலிருந்து விடுவிக்க முடியும்?
௧௪என் முன்னோர்கள் பாழாக்கின அந்த மக்களுடைய அனைத்து தெய்வங்களிலும் எவன் தன் மக்களை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்? அப்படியிருக்க, உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கமுடியுமா?
15 இப்பொழுதும் எசேக்கியா இவ்வாறு உங்களை ஏமாற்றி, தவறான வழியில் நடத்த இடங்கொடுக்க வேண்டாம். நீங்கள் அவனை நம்பவேண்டாம். ஏனெனில் என் கரத்திலிருந்தோ, என் தந்தையரின் கரத்திலிருந்தோ எந்த ஒரு நாட்டிலும், அரசிலும் தம் மக்களை விடுவிக்கக்கூடிய தெய்வம் இருந்ததோ! இப்பொழுது உங்கள் இறைவன் உங்களை என் கையிலிருந்து விடுவிப்பார் என்பது எவ்வளவு நம்பிக்கையற்ற ஒரு விஷயம்” என சொல்லி அனுப்பினான்.
௧௫இப்போதும் எசேக்கியா உங்களை ஏமாற்றவும், இப்படி உங்களுக்கு போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த மக்களின் தெய்வமும், எந்த ராஜ்யத்தின் தெய்வமும் தன் மக்களை என் கைக்கும் என் முன்னோர்களின் கைக்கும் தப்புவிக்க முடியாமல் இருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,
16 சனகெரிப்பின் அதிகாரிகள் இன்னும் அதிகமாக இறைவனாகிய யெகோவாவுக்கும், அவரது அடியவன் எசேக்கியாவுக்கும் எதிராகப் பேசினார்கள்.
௧௬அவனுடைய வேலைக்காரர்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் இன்னும் அதிகமாகப் பேசினார்கள்.
17 அரசனும்கூட இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை அவமதித்து கடிதங்கள் எழுதியிருந்தான். அவற்றில், “மற்ற நாட்டு மக்கள் கூட்டங்களின் தெய்வங்கள் அவற்றின் மக்களை எனது கையிலிருந்து காப்பாற்றவில்லை. அதேபோல் எசேக்கியாவின் தெய்வமும் அவனுடைய மக்களை எனது கையிலிருந்து காப்பாற்றாது” என்று இறைவனுக்கு எதிராய் எழுதியிருந்தான்.
௧௭தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் தங்கள் மக்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் மக்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை அவமதிக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் கடிதங்களையும் எழுதினான்.
18 அதன்பின் அவர்கள் மதில்களின் மேலிருந்த எருசலேமின் மக்களை பயமுறுத்தி, திகிலடையப் பண்ணவும், பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காகவும் எபிரெய மொழியிலே கூப்பிட்டார்கள்.
௧௮அவர்கள் மதிலின்மேலிருக்கிற எருசலேமின் மக்களைப் பயப்படுத்தி, கலங்கச்செய்து, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூத மொழியிலே மகா சத்தமாகக் கூப்பிட்டு,
19 அவர்கள் மனிதரின் கைவேலையான உலகத்தின் மற்ற மக்கள் கூட்டங்களின் தெய்வங்களைக் குறித்துப் பேசியதுபோலவே எருசலேமின் இறைவனைக் குறித்தும் பேசினார்கள்.
௧௯மனிதர்கள் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூமியிலுள்ள மக்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தெய்வங்களைக்குறித்துப் பேசுகிறதுபோல எருசலேமின் தேவனையும்குறித்துப் பேசினார்கள்.
20 எசேக்கியா அரசனும், ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயாவும் இதுபற்றி பரலோகத்தை நோக்கி, அழுது மன்றாடினார்கள்.
௨0இதனால் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தனை செய்து, வானத்தை நோக்கி முறையிட்டார்கள்.
21 அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார். அவன் அசீரிய அரசனின் முகாமிலிருந்த எல்லா இராணுவவீரர்களையும், தலைவர்களையும், அதிகாரிகளையும் அழித்தொழித்தான். எனவே அவன் தனது சொந்த நாட்டிற்கு அவமானத்துடன் பின்வாங்கிப் போனான். அவன் தனது தெய்வத்தின் கோவிலுக்குள் போனபோது அவனுடைய மகன்களில் சிலர் அவனை வாளால் வெட்டி வீழ்த்தினார்கள்.
௨௧அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் முகாமிலுள்ள அனைத்து பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், தளபதிகளையும் அழித்தான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாகத் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தெய்வத்தின் கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
22 இவ்வாறு யெகோவா எசேக்கியாவையும், எருசலேம் மக்களையும் அசீரிய அரசன் சனகெரிப்பின் கையினின்றும், மற்ற எல்லோருடைய கைகளினின்றும் காப்பாற்றினார். எல்லாப் பக்கங்களிலும் அவர் அவர்களைப் பாதுகாத்தார்.
௨௨இப்படிக் யெகோவா எசேக்கியாவையும் எருசலேமின் குடிமக்களையும் அசீரியருடைய ராஜாவாகிய. சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லோருடைய கைக்கும் விலக்கிக் காப்பாற்றி, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.
23 அநேகர் எருசலேமுக்கு யெகோவாவுக்கு காணிக்கைகளையும், யூதாவின் அரசன் எசேக்கியாவுக்குப் விலையுயர்ந்த நன்கொடைகளையும் கொண்டுவந்தார்கள். அப்பொழுதிலிருந்து அவன் எல்லா தேசத்தார்களாலும் உயர்வாய் மதிக்கப்பட்டான்.
௨௩அநேகம்பேர் யெகோவாக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு விலையுயர்ந்த பொருட்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிறகு சகல மக்களின் பார்வைக்கும் மதிக்கப்பட்டவனாயிருந்தான்.
24 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் தருவாயில் இருந்தான். அவன் யெகோவாவிடம் மன்றாடினபோது அவர் அவனுக்குப் பதிலளித்து, ஒரு அற்புத அடையாளத்தைக் கொடுத்தார்.
௨௪அந்த நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணமடையும்தருவாயில் இருந்தான்; அவன் யெகோவாவை நோக்கி ஜெபம்செய்யும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்செய்து, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.
25 ஆனால் எசேக்கியாவின் இருதயமோ பெருமைகொண்டது. அவனுக்குக் காண்பிக்கப்பட்ட தயவுக்கு ஏற்றபடி அவன் நடக்கவில்லை. அதனால் யெகோவாவின் கோபம் அவன் மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் இருந்தது.
௨௫எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உதவிக்குத் தகுந்தவாறு நடக்காமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபம் வந்தது.
26 அதன்பின் எசேக்கியா தனது இருதயப் பெருமையிலிருந்து மனந்திரும்பினான். அதேபோல் எருசலேம் மக்களும் செய்தார்கள். அதனால் எசேக்கியாவின் நாட்களில் யெகோவாவின் கோபம் அவர்கள்மேல் வரவில்லை.
௨௬எசேக்கியாவின் மனமேட்டிமையினினால் அவனும் எருசலேமின் மக்களும் தங்களைத் தாழ்த்தினதால், யெகோவாவுடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.
27 எசேக்கியா மிகுந்த செல்வமும், கனமும் உடையவனாய் இருந்தான். வெள்ளி, தங்கம், மாணிக்கக் கற்கள், நறுமணப் பொருட்கள், கேடயங்கள், மற்றும் எல்லா விதமான விலைமதிப்புமிக்க பொருட்கள் ஆகியவற்றிற்குமாக திரவிய களஞ்சியங்களைக் கட்டினான்.
௨௭எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும், பொன்னும், இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும், கேடகங்களும், விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,
28 இவற்றுடன்கூட தானிய விளைச்சலையும், புதிய திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் சேர்த்து வைக்க களஞ்சியங்களையும் கட்டினான். அத்துடன் பல்வேறு வகையான மந்தைகளுக்குத் தொழுவங்களையும், ஆடுகளுக்கு பட்டிகளையும் கட்டினான்.
௨௮தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சைரசமும் எண்ணெயும் வைக்கும்படியான சேமிப்பு அறைகளையும், அனைத்துவிதமான மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.
29 அவன் கிராமங்களையும் கட்டி, பெருந்திரளான ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் பெற்றிருந்தான். ஏனெனில் இறைவன் பெரும் செல்வத்தை அவனுக்குக் கொடுத்திருந்தார்.
௨௯அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டி ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகா திரளான செல்வத்தைக் கொடுத்தார்.
30 எசேக்கியாவே கீகோன் மேற்பகுதி நீரோடையிலிருந்து புறப்பட்ட தண்ணீர் வெளியில் செல்லும் வழியை அடைத்தான். அந்தத் தண்ணீரைத் தாவீதின் பட்டணத்தின் மேற்குப் பக்கமாகத் திருப்பி அனுப்பினான். அவன் மேற்கொண்ட எல்லாவற்றிலும் அவனுக்கு வெற்றியே கிடைத்தது.
௩0இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதன் தண்ணீரை மேற்கேயிருந்து கீழே தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.
31 ஆனால் நாட்டில் நடந்திருந்த அற்புதமான அடையாளத்தைப் பற்றி அவனிடம் விசாரிப்பதற்குப் பாபிலோனின் ஆளுநர்களால் தூதுவர்கள் அனுப்பப்பட்டார்கள். அப்போது இறைவன் அவனைப் சோதித்து அவனுடைய இருதயத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அறிந்துகொள்வதற்காக அவனைவிட்டு அகன்றிருந்தார்.
௩௧ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் பிரதிநிதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்திற்கு அனுப்பப்பட்ட காரியத்தில் அவன் இருதயத்தில் இருக்கிற எல்லாவற்றையும் அறிவதற்காக அவனைச் சோதிப்பதற்கு தேவன் அவனைக் கைவிட்டார்.
32 எசேக்கியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய பக்தி செயல்களும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் புத்தகத்திலுள்ள ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயாவின் தரிசனத்தில் எழுதப்பட்டுள்ளன.
௩௨எசேக்கியாவின் மற்ற காரியங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்திலும் எழுதப்பட்டிருக்கிறது.
33 எசேக்கியா தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தாவீதின் சந்ததிகளின் கல்லறைகள் இருந்த முக்கியமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் இறந்தபோது யூதா மக்கள் எல்லோரும், எருசலேம் மக்களும் அவனுக்கு மரியாதை செலுத்தினர். அவன் மகன் மனாசே அவனுடைய இடத்திற்கு அரசனானான்.
௩௩எசேக்கியா இறந்தபின்பு, அவனை தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் முக்கியமான கல்லறையில் அடக்கம்செய்தார்கள்; யூதா முழுவதும், எருசலேமின் மக்களும் அவன் இறந்தபோது அவனுக்கு மரியாதை செலுத்தினார்கள்; அவன் மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான்.