< 2 நாளாகமம் 26 >
1 அதன்பின் யூதாவின் மக்கள் எல்லோரும் அமத்சியாவின் மகனான பதினாறு வயதுடைய உசியாவைக் கொண்டுவந்து அவன் தகப்பனின் இடத்தில் அரசனாக்கினார்கள்.
௧அப்பொழுது யூதா மக்கள் எல்லோரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் இடத்திலே ராஜாவாக்கினார்கள்.
2 அரசன் அமத்சியா தனது முற்பிதாக்களைப்போல இறந்தபின், உசியா ஏலாத்தைத் திரும்பவும் கட்டி, அதை யூதாவுடன் சேர்த்துக்கொண்டான்.
௨ராஜா இறந்தபின்பு, இவன் ஏலாத்தைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவுடன் இணைத்துக்கொண்டான்.
3 உசியா அவனுடைய பதினாறாவது வயதில் அரசனானான். அவன் எருசலேமில் ஐம்பத்திரண்டு வருடங்கள் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்; அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.
௩உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தாளான அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்.
4 அவன் தனது தகப்பன் அமத்சியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான்.
௪அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்து,
5 இறைபயத்தில் தன்னைப் பயிற்றுவித்த சகரியாவின் நாட்களில் உசியா இறைவனைத் தேடினான். அவன் யெகோவாவைத் தேடிய காலமெல்லாம் இறைவன் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
௫தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதுள்ளவனாக இருந்தான்; அவன் யெகோவாவை தேடின நாட்களில் தேவன் அவனுடைய காரியங்களை வாய்க்கச் செய்தார்.
6 அவன் பெலிஸ்தியருக்கு எதிராக யுத்தம்செய்யப் போய் காத், அஸ்தோத், யப்னே ஆகிய பட்டணங்களின் மதில்களை உடைத்துப்போட்டான். அதன்பின்பு அவன் அஸ்தோத்தின் அருகிலும், பெலிஸ்தியருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
௬அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு போர்செய்து, காத்தின் மதிலையும், யப்னேயின் மதிலையும், அஸ்தோத்தின் மதிலையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
7 இறைவன் பெலிஸ்தியர், கூர்பாகாலிலே வாழ்ந்த அரபியர், மெயூனியர் ஆகியோருக்கு எதிராக அவனுக்கு உதவி செய்தார்.
௭பெலிஸ்தர்களையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியர்களையும் மெகுனியர்களையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணை நின்றார்.
8 அம்மோனியர் உசியாவுக்கு வரி கொண்டுவந்தார்கள். அவனுடைய புகழ் எகிப்தின் எல்லைவரை பரவியிருந்தது. ஏனெனில் அவன் மிகவும் பலம்பொருந்திவனாய் இருந்தான்.
௮அம்மோனியர்கள் உசியாவுக்கு வரிகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய புகழ் எகிப்தின் எல்லைவரை எட்டியது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.
9 உசியா எருசலேமில் மூலைவாசல் அருகிலும், பள்ளத்தாக்கின் வாசல் அருகிலும், மதில்களின் மூலையிலும் கோபுரங்களைக் கட்டி பலப்படுத்தினான்.
௯உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், மதில்களின் மூலைகளின்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.
10 அவன் பாலைவனத்திலும் கோபுரங்களைக் கட்டி, அநேகம் கிணறுகளையும் தோண்டினான். ஏனெனில் அவனிடம் மலையடிவாரத்திலும், சமவெளியிலும் அநேகம் வளர்ப்பு மிருகங்கள் இருந்தன. அவனிடம் அவனுடைய வயல்களிலும், குன்றுகளிலுள்ள திராட்சைத் தோட்டங்களிலும், வளமான நிலங்களிலும் வேலைசெய்வதற்கு மனிதர் இருந்தார்கள். ஏனெனில் அவன் விவசாயத்தை விரும்பினான்.
௧0அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும், வயல்வெளியிலேயும், விவசாயிகளும், திராட்சைத்தோட்டக்காரர்களும் உண்டாயிருந்ததால், அவன் வனாந்திரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக கிணறுகளை வெட்டினான்; அவன் வேளாண்மைப் பிரியனாயிருந்தான்.
11 பிரிவு பிரிவாக யுத்தத்திற்குப் போக திறமையாகப் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவம் உசியாவிடம் இருந்தது. எண்ணிக்கையின்படியே அவர்கள் அரச அதிகாரிகளில் ஒருவனான அனனியாவின் தலைமையின்கீழ் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். செயலாளராகிய ஏயேலினாலும், அதிகாரி மாசெயாவினாலும் இவர்கள் ஒன்றுதிரட்டப்பட்டார்கள்.
௧௧உசியாவுக்கு போர்வீரர்களின் படையும் இருந்தது; அது செயலாளனாகிய ஏயெலினாலும் அதிகாரியாகிய மாசேயாவினாலும் எண்ணிக்கைபார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் அணி அணியாகப் போர்செய்யப் புறப்பட்டது.
12 இந்த இராணுவவீரர்களுக்குத் தலைமைவகித்த குடும்பத் தலைவர்களின் மொத்தத்தொகை 2,600 ஆகும்.
௧௨பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
13 அவர்களின் தலைமையின்கீழ் 3,07,500 மனிதர் யுத்தத்திற்காக பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். அரசனுக்கு உதவிசெய்யவும், அவனுடைய பகைவர்களை எதிர்க்கவும் வல்லமையுள்ள படையாக இது இருந்தது.
௧௩இவர்களுடைய கையின்கீழ் எதிரிகளுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, மிகத் திறமையோடு போர்செய்கிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான படை இருந்தது.
14 உசியா கேடயங்கள், ஈட்டிகள், தலைக்கவசங்கள், வில்லுகள், கவண்கற்கள் என்பவற்றை முழு இராணுவத்திற்கும் கொடுத்திருந்தான்.
௧௪இந்தப் படையில் உள்ளவர்களுக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைக்கவசங்களையும், மார்புக்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
15 அம்புகளை எய்யவும், பெரிய கற்களை வீசி எறியவும், எருசலேமில் கோபுரங்களிலிருந்தும் மூலைப் பாதுகாப்பு அரண்களிலிருந்தும் உபயோகிப்பதற்கு திறமையான மனிதர்களினால் இயந்திரங்களைச் செய்திருந்தான். அவனுடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. ஏனெனில் இறைவன் அவன் பலமுள்ளவனாகும்வரை உதவினார்.
௧௫கோபுரங்கள்மேலும் மதிலின் முனையிலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பயன்படுத்துவதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த இயந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவனுடைய புகழ் வெகுதூரம் பரவியது; அவன் பலப்படும்வரை ஆச்சரியமான விதத்தில் அவனுக்கு அநுகூலமுண்டானது.
16 ஆனால் உசியா பலமுடையவனான பின்பு, அவனுடைய அகந்தை அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் தன் இறைவனாகிய யெகோவாவுக்கு உண்மையற்றவனாய் இருந்து தூபபீடத்தில் தூபங்காட்டும்படி ஆலயத்திற்குள் நுழைந்தான்.
௧௬அவன் பலப்பட்டபோது, தனக்கு அழிவு ஏற்படும் வரை, அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபம் காட்ட யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
17 ஆசாரியன் அசரியாவும், தைரியமான இன்னும் எண்பது யெகோவாவின் ஆசாரியரும் அவனைத் தொடர்ந்து உள்ளே போனார்கள்.
௧௭ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடுகூடக் யெகோவாவின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பின்னே உட்பிரவேசித்து,
18 அவர்கள் அரசனுக்கு எதிர்முகமாகப் போய் நின்று, “உசியாவே, யெகோவாவுக்கு நறுமண தூபங்காட்டுவதற்கு உமக்குத் தகுதியில்லை. அது தூபங்காட்டுவதற்கென பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் சந்ததிகளான ஆசாரியருக்குரியது. பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறும். நீர் பாவம் செய்தீர். நீர் இறைவனாகிய யெகோவாவினால் கனப்படுத்தப்படமாட்டீர்” என்று சொன்னார்கள்.
௧௮ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, யெகோவாவுக்குத் தூபங்காட்டுகிறது உமக்குரியதல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களுக்கே உரியது; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக இருக்காது என்றார்கள்.
19 தூபங்காட்டும்படி, தூப கலசத்தைக் கையில் வைத்திருந்த உசியா கோபங்கொண்டான். அவன் யெகோவாவின் ஆலயத்தில் தூபபீடத்திற்கு முன்பாக ஆசாரியருக்குமுன் கடுங்கோபத்துடன் நிற்கும்போதே அவனுடைய நெற்றியில் குஷ்டவியாதி தோன்றியது.
௧௯அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடு கோபமாகப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே தொழுநோய் தோன்றியது.
20 பிரதான ஆசாரியன் அசரியாவும் மற்ற ஆசாரியரும் அவனைப் பார்த்தபோது, அவனுடைய நெற்றியில் குஷ்டவியாதி இருப்பதைக் கண்டார்கள். எனவே அவர்கள் விரைவாக அவனை வெளியேற்றினார்கள். உண்மையாகவே யெகோவா தன்னைத் துன்புறுத்தியபடியால் அவனும் உடனே வெளியேறினான்.
௨0பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் அனைத்து ஆசாரியர்களும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே தொழுநோய் பிடித்தவனென்று கண்டு, அவனை விரைவாக அங்கேயிருந்து வெளியேறச் செய்தார்கள்; யெகோவா தன்னை அடித்ததால் அவன் தானும் வெளியே போக அவசரப்பட்டான்.
21 உசியா அரசன் தான் சாகும் நாள்வரை குஷ்டவியாதி உடையவனாகவே இருந்தான். அவன் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டவனாக குஷ்டவியாதியுடன் ஒரு புறம்பான வீட்டில் வாழ்ந்தான். அவனுடைய மகன் யோதாம் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்து நாட்டு மக்களை ஆளுகை செய்தான்.
௨௧ராஜாவாகிய உசியா தன் மரணநாள்வரை தொழுநோயாளியாயிருந்து, யெகோவாவுடைய ஆலயத்திற்குப் விலக்கி வைக்கப்பட்டு இருந்ததால், ஒரு தனித்த வீட்டிலே தொழுநோயாளியாக குடியிருந்தான்; அவன் மகனாகிய யோதாம், ராஜாவின் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
22 உசியாவின் மற்ற ஆட்சிக்கால நிகழ்ச்சிகள், தொடக்கமுதல் முடிவுவரை இறைவாக்கினன் ஆமோஸின் மகன் ஏசாயாவினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
௨௨உசியாவின் ஆரம்பம் முதல் கடைசி வரையுள்ள செயல்பாடுகளான மற்ற காரியங்களை ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.
23 உசியா தன் முற்பிதாக்களைப்போல இறந்தபின்பு, அரசர்களுக்குச் சொந்தமான அடக்க நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஏனெனில் அவன், “குஷ்டவியாதி உடையவனாயிருந்தான்” என மக்கள் சொன்னார்கள். அவனுடைய மகன் யோதாம் அவனுடைய இடத்தில் அரசனானான்.
௨௩உசியா இறந்த பின்பு, மக்கள் அவனைத் தொழுநோயாளியென்று சொல்லி, அவனை அவன் முன்னோர்களுக்கு அருகில், ராஜாக்களை அடக்கம்செய்கிற இடத்திற்கு அருகிலுள்ள நிலத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.