< 2 நாளாகமம் 25 >
1 அமத்சியா அரசனானபோது அவன் இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான், அவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் யொவதானாள். அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.
௧அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின் பெயர் யொவதானாள்.
2 அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான்; ஆனால் முழுமனதுடன் செய்யவில்லை.
௨அவன் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடு அப்படி செய்யவில்லை.
3 ராஜ்யம் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் திடப்படுத்தப்பட்டபின் அவன் தனது தகப்பனாகிய அரசனைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்றுபோட்டான்.
௩ஆட்சி அவனுக்கு நிலைப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய வேலைக்காரர்களைக் கொன்றுபோட்டான்.
4 எனினும் அவன் அவர்களுடைய மகன்களைக் கொலைசெய்யவில்லை. அவன் மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதியுள்ளவாறு செயற்பட்டான். யெகோவா கட்டளையிட்ட பிரகாரம், “பிள்ளைகளுடைய பாவங்களுக்காக பெற்றோரோ, பெற்றோரின் பாவங்களுக்காக பிள்ளைகளோ கொல்லப்படக்கூடாது; ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாவங்களுக்காகவே சாகவேண்டும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
௪ஆனாலும் பிள்ளைகளினாலே தகப்பன்களும், தகப்பன்களினாலே பிள்ளைகளும் கொலைசெய்யப்படாமல், அவனவன் செய்த பாவத்தினாலே அவனவன் கொலைசெய்யப்படவேண்டுமென்று மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் யெகோவா கட்டளையிட்டபிரகாரம் எழுதியிருக்கிறபடி, அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொலைசெய்யாதிருந்தான்.
5 அமத்சியா யூதாவின் மக்களை ஒன்றுகூட்டி முழு யூதாவுக்கும், பென்யமீனுக்குமான அவர்களின் குடும்பங்களின்படி ஆயிரம்பேரின் தளபதிகளையும், நூறுபேரின் தளபதிகளையும் நியமித்தான். அதன்பின் அவன் இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களை ஒன்றுதிரட்டினான். அவர்களில் ஈட்டியும், கேடயமும் பயன்படுத்தத் தெரிந்தவர்களான, இராணுவ பணிக்கு ஆயத்தமான 3,00,000 மனிதர் இருப்பதைக் கண்டான்.
௫அமத்சியா யூதா மனிதரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா, பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும், நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபதுவயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை எண்ணிப்பார்த்து, போருக்குப் புறப்படவும், ஈட்டியையும் கேடகத்தையும் பிடிக்கத்தகுதியான போர்வீரர்கள் மூன்றுலட்சம்பேர் என்று கண்டான்.
6 அத்துடன் அவன் இஸ்ரயேலில் இருந்தும் 1,00,000 இராணுவவீரர்களை நூறு தாலந்து வெள்ளி கொடுத்து கூலிக்கு அமர்த்தினான்.
௬இஸ்ரவேலிலும் ஒருலட்சம் பராக்கிரமசாலிகளை நூறு தாலந்து வெள்ளி கொடுத்து கூலிக்கு அமர்த்தினான்.
7 ஆனால் இறைவனின் மனிதன் ஒருவன் அவனிடம் வந்து சொன்னதாவது: “அரசனே, இஸ்ரயேலின் இந்தப் படை உன்னோடு யுத்தத்திற்கு வரவே கூடாது. ஏனெனில் யெகோவா இஸ்ரயேலரோடு இல்லை. எப்பிராயீம் மக்கள் யாருடனும் இல்லை.
௭தேவனுடைய மனிதன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் படை உம்முடனே வரக்கூடாது; யெகோவா எப்பிராயீமின் எல்லா மகன்களாகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.
8 நீ யுத்தத்திற்கு போய், தைரியமாய் சண்டையிட்டாலும்கூட, இறைவனோ உங்கள் பகைவர்களுக்கு முன்பாக உங்களை முறியடிப்பார். ஏனெனில் உதவிசெய்யவும், தோற்கடிக்கவும் இறைவனுக்கு வல்லமை உண்டு” என்றான்.
௮போக விரும்பினால் நீர் போகலாம், காரியத்தை நடத்தும்; போருக்குத் தைரியமாக நில்லும்; தேவன் உம்மை எதிரிக்கு முன்பாக விழச்செய்வார்; உதவி செய்யவும் விழச்செய்யவும் தேவனாலே முடியும் என்றான்.
9 அதற்கு அமத்சியா இறைவனின் மனிதனிடம், “இந்த இஸ்ரயேல் படைக்கு நான் செலுத்திய நூறு தாலந்து வெள்ளி என்னாவது?” என்று கேட்டான். அதற்கு இறைவனின் மனிதன், “யெகோவாவினால் இதற்கும் அதிகமாகக் கொடுக்கமுடியும்” என்றான்.
௯அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் படைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனிதனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனிதன்: அதைப்பார்க்கிலும் அதிகமாகக் யெகோவா உமக்குக் கொடுக்கமுடியும் என்றான்.
10 எனவே அமத்சியா தன்னிடம் எப்பிராயீமிலிருந்து வந்த படையை வெளியேற்றி அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவிட்டான். அவர்கள் யூதாவின்மேல் கடுங்கோபத்துடனும், மிக ஆத்திரத்துடனும் அவ்விடத்தைவிட்டு தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
௧0அப்பொழுது அமத்சியா எப்பிராயீமரில் தன்னிடத்திற்கு வந்த படையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதனால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபம் உண்டாகி, கடுமையான எரிச்சலோடு தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
11 அமத்சியா தனது பெலத்தைத் திரட்டிக்கொண்டு இராணுவத்தை உப்புப் பள்ளத்தாக்கிற்கு நடத்திச்சென்று, அங்கே அவன் சேயீர் மனிதரில் 10,000 பேரைக் கொன்றான்.
௧௧அமத்சியாவோ தைரியமாக, தன் மக்களைக் கூட்டி, உப்புப்பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பத்தாயிரம்பேரை வெட்டினான்.
12 அத்துடன் யூதாவின் இராணுவமும் 10,000 மனிதரை உயிருடன் பிடித்து, அவர்களை ஒரு செங்குத்தான மலை உச்சிக்கு கொண்டுபோய் அங்கேயிருந்து கீழே தள்ளிவிட்டனர். அவர்கள் மோதுண்டு விழுந்து நொறுங்கினார்கள்.
௧௨யூதா மக்கள், பத்தாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையின் உச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லோரும் நொறுங்கிப்போகத்தக்கதாக அந்தக் கன்மலையின் உச்சியிலிருந்து கீழேத் தள்ளிவிட்டார்கள்.
13 இதேவேளையில் யுத்தத்தில் தங்களோடு வரவேண்டாமென அமத்சியா திருப்பி அனுப்பிய இராணுவவீரர்கள், சமாரியா தொடங்கி பெத் ஓரோன் வரையிலுமுள்ள யூதாவின் நகரங்களை திடீரெனத் தாக்கினார்கள். அவர்கள் 3,000 பேரைக் கொலைசெய்து அதிக அளவிலான கொள்ளைப்பொருட்களையும் கொண்டுபோனார்கள்.
௧௩தன்னோடுகூட போருக்கு வராமலிருக்க, அமத்சியா திருப்பிவிட்ட போர் வீரர்கள், சமாரியாமுதல் பெத்தொரோன்வரை உள்ள யூதா பட்டணங்களைத் தாக்கி, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாகக் கொள்ளையிட்டார்கள்.
14 அமத்சியா ஏதோமியரை முறியடித்துவிட்டு திரும்பும்போது, சேயீர் மக்களின் தெய்வங்களையும் கொண்டுவந்தான். அவன் அவற்றைத் தனது சொந்தத் தெய்வங்களாக வைத்து வணங்கி, அவற்றிற்குத் தகன காணிக்கைகளையும் செலுத்தினான்.
௧௪அமத்சியா ஏதோமியர்களை முறியடித்து, சேயீர் மக்களின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு. அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்கு தூபம் காட்டினான்.
15 யெகோவாவின் கோபம் அமத்சியாவுக்கு எதிராகப் பற்றியெரிந்தது. அவர் அவனிடத்திற்கு ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன், “நீ ஏன் இந்த மக்களின் தெய்வங்களிடம் ஆலோசனை கேட்கிறாய். அவைகளால் தனது சொந்த மக்களை உன்னுடைய கையிலிருந்து காப்பாற்ற முடியவில்லையே” என்று கேட்டான்.
௧௫அப்பொழுது, யெகோவா அமத்சியாவின்மேல் கோபப்பட்டு, அவனிடத்திற்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் மக்களை உமது கைக்குத் தப்புவிக்காமற்போன மக்களின் தெய்வங்களை நீர் ஏன் நம்பவேண்டும் என்றான்.
16 அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அரசன் அவனிடம், “அரசனுக்கு ஆலோசகனாக உன்னை நாங்கள் நியமித்தோமா? நிறுத்து! நீ ஏன் வீணாக சாகவேண்டும்?” என்றான். எனவே இறைவாக்கினன் பேசுவதை சற்று நிறுத்தி, பின்பு அவன், “எனது ஆலோசனையைக் கேட்காமல் நீ இவற்றைச் செய்தபடியால், இறைவன் உன்னை அழிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னான்.
௧௬தன்னோடு அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேட்காமற்போனதால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
17 பின்பு யூதாவின் அரசன் அமத்சியா தனது ஆலோசகர்களிடம் யோசனை கேட்டான். அதன்படி இஸ்ரயேலின் அரசனான யோவாஸுக்கு, “நீ வந்து என்னை முகமுகமாய் எதிர்கொள்” என சவால் விட்டான். இந்த யோவாஸ் யோவாகாஸின் மகன்; யோவாகாஸ் யெகூவின் மகன்.
௧௭பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைசெய்து, யெகூவின் மகனாக இருந்த யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய திறமையைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான்.
18 ஆனால் இஸ்ரயேலின் அரசன் யோவாஸ், யூதாவின் அரசன் அமத்சியாவுக்கு மறுமொழியாக, “லெபனோனிலுள்ள முட்செடி, லெபனோனிலுள்ள கேதுருமரத்திடம் ஒரு செய்தி அனுப்பி, ‘உனது மகளை எனது மகனுக்குத் திருமணம் செய்துகொடு’ என்றது. அப்பொழுது லெபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் வந்து அந்த முட்செடியைத் தன் பாதத்தின்கீழ் மிதித்துப்போட்டது.
௧௮அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்குத் திருமணம் செய்து கொடு என்று கேட்கச்சொன்னது; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழியே போகும்போது ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
19 நீ உனக்குள்ளேயே ஏதோமை தோற்கடித்தேன் என சொல்லிக்கொள்கிறாய். இப்பொழுது நீ இறுமாப்பும் பெருமையும் கொண்டிருக்கிறாய். ஆனாலும் வீட்டிலே இரு! நீ ஏன் கஷ்டத்தை வேண்டுமென்று தேடி உனது வீழ்ச்சிக்கும் யூதாவின் வீழ்ச்சிக்கும் காரணமாயிருக்க வேண்டும்?” என்றான்.
௧௯நீ ஏதோமியர்களை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளச் செய்தது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடு யூதாவும் விழுவதற்காக, பொல்லாப்பை ஏன் தேடிக்கொள்ளவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.
20 ஆயினும் அமத்சியா அதற்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஏதோமிய தெய்வத்தைத் தேடியதனால், இறைவன் அவர்களை யோவாஸிடம் ஒப்புக்கொடுக்கும்படி அவ்விதமாய் செயல்பட்டார்.
௨0ஆனாலும் அமத்சியா கேட்காமற்போனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதால் அவர்களை அவர்களுடைய சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக தேவனாலே இப்படி நடந்தது.
21 எனவே இஸ்ரயேலின் அரசன் யோவாஸ் தாக்கினான். அவனும் யூதாவின் அரசன் அமத்சியாவும் யூதாவிலுள்ள பெத்ஷிமேஷிலே ஒருவரையொருவர் எதிர்கொண்டார்கள்.
௨௧அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள்.
22 இஸ்ரயேலரால் யூதா தோற்கடிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு ஓடினார்கள்.
௨௨யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக தோல்வியடைந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
23 இஸ்ரயேல் அரசன் யோவாஸ், யூதாவின் அரசனான யோவாஸின் மகனும், அகசியாவின் பேரனுமான அமத்சியாவை பெத்ஷிமேஷில் கைதியாக்கினான். அதன்பின் அரசன் யோவாஸ் அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் மதிலை ஏறத்தாழ அறுநூறு அடி தூரத்துக்கு எப்பிராயீம் வாசலிலிருந்து மூலைவாசல்வரை இடித்துப்போட்டான்.
௨௩இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், அகசியாவின் மகனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் மதிலில் எப்பிராயீம் வாசல்துவங்கி மூலைவாசல்வரை நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு,
24 ஓபேத் ஏதோமின் பொறுப்பில் கொடுக்கப்பட்டிருந்த இறைவனின் ஆலயத்தில் காணப்பட்ட தங்கத்தையும், வெள்ளியையும், எல்லாப் பொருட்களையும் யோவாஸ் எடுத்துக்கொண்டான். அத்துடன் அரச அரண்மனை திரவியங்களையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
௨௪தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமிடம் கிடைத்த சகல பொன்னையும், வெள்ளியையும், பணிமுட்டுகளையும், ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
25 இஸ்ரயேலின் அரசனான யோவாகாஸின் மகன் யோவாஸ் இறந்தபின்பு, யூதாவின் அரசனான யோவாஸின் மகன் அமத்சியா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான்.
௨௫யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் மகனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான்.
26 அமத்சியாவின் மற்ற ஆட்சிக்கால நிகழ்வுகள், தொடக்கமுதல் முடிவுவரை யூதா, இஸ்ரயேல் அரசர்களின் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன.
௨௬அமத்சியாவின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள செயல்பாடுகளான மற்ற காரியங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது.
27 அமத்சியா யெகோவாவைப் பின்பற்றுவதை விட்டுத் திரும்பிய காலத்திலிருந்து, எருசலேமிலுள்ளவர்கள் அவனுக்கெதிராக சதி செய்தார்கள். அதனால் அவன் லாகீசுக்குத் தப்பி ஓடினான். ஆனால் அவனுடைய பகைவர்கள் அவனுக்கு எதிராக மனிதரை அனுப்பி, அங்கேயே வைத்து அவனைக் கொன்றனர்.
௨௭அமத்சியா யெகோவாவைவிட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்துகொண்டார்கள்; அதனால் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பின்னே லாகீசுக்கு மனிதர்களை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு,
28 அவனுடைய உடல் குதிரையில் கொண்டுவரப்பட்டு, யூதாவின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.
௨௮குதிரைகள்மேல் அவனை எடுத்து வந்து, யூதாவின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்.