< 2 நாளாகமம் 22 >
1 எருசலேமின் மக்கள் யெகோராமின் இளையமகன் அகசியாவை அவனுடைய தந்தையின் இடத்தில் அரசனாக்கினார்கள்; ஏனெனில் அரபியருடன் முகாமுக்குள் வந்த கொள்ளையர்கள் அகசியாவுக்கு முன்பு பிறந்த யெகோராமின் எல்லா மகன்களையும் கொன்றிருந்தார்கள். எனவே யூதாவின் அரசன் யெகோராமின் மகன் அகசியா அரசனானான்.
௧எருசலேமின் குடிமக்கள், அவனுடைய இளையமகனாகிய அகசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடு கூடவந்து முகாமிட்ட படையிலிருந்தவர்கள், மூத்தமகன்கள் அனைவரையும் கொன்றுபோட்டார்கள்; இந்தவிதமாக அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் ஆட்சிசெய்தான்.
2 அகசியா அரசனானபோது இருபத்திரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஒரு வருடம் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள். அவள் உம்ரியின் பேத்தியாவாள்.
௨அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருடம் எருசலேமில் ஆட்சிசெய்தான்; ஒம்ரியின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள்.
3 அகசியாவும் ஆகாபின் வீட்டாரின் வழியிலே நடந்தான்; அவன் தீயவழியில் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனை கூறினாள்.
௩அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாக நடக்க, அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாக இருந்தாள்.
4 அவன் ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். ஏனெனில் அவனுடைய தகப்பன் இறந்துபோன பின்பு ஆகாபின் வீட்டாரே அவனுடைய ஆலோசகர்களாய் இருந்தனர்; அகசியாவின் அழிவுக்கு இவர்களே காரணமாயிருந்தார்கள்.
௪அவன் ஆகாபின் குடும்பத்தாரைப்போல் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவனுடைய தகப்பன் இறந்தபிறகு, அவர்கள் அவனுடைய அழிவிற்கு ஆலோசனைக்காரர்களாக இருந்தார்கள்.
5 அத்துடன் அகசியா அவர்களின் ஆலோசனையைக் கேட்டு இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் மகன் யோராமுடன், கீலேயாயாத்திலுள்ள ராமோத்திற்கு சீரிய அரசனான ஆசகேலுக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போனான். சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
௫அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்பட்டு, அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் மகன்களோடு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக போர்செய்யப்போனான்; அங்கே சீரியர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
6 எனவே சீரிய அரசனான ஆசகேலுடன் ராமோத்தில் செய்த யுத்தத்தில் சீரியரினால் தனக்கு ஏற்பட்ட காயங்களைச் சுகப்படுத்துவதற்காக, அவன் யெஸ்ரயேலுக்குத் திரும்பினான். அப்பொழுது ஆகாபின் மகன் யோராம் காயப்பட்டிருந்ததால், யூதாவின் அரசனான யெகோராமின் மகன் அசரியா, அவனைப் பார்ப்பதற்கு யெஸ்ரயேலுக்குப் போனான்.
௬அப்பொழுது, தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போர்செய்யும்போது, தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான்; அப்பொழுது ஆகாபின் மகனாகிய யோராம் வியாதியாயிருந்ததால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கப் போனான்.
7 அகசியா யோராமை பார்க்க வந்ததினால் இறைவன் அகசியாவுக்கு வீழ்ச்சியை உண்டாக்கினார். அகசியா வந்து சேர்ந்தபோது அவன் யோராமுடன் நிம்சியின் மகன் யெகூவைச் சந்திக்கப் போனான். ஆகாபின் குடும்பத்தை அழிப்பதற்கென யெகோவா யெகூவை அபிஷேகம் செய்திருந்தார்.
௭அகசியா யோராமிடத்திற்கு வந்தது அவனுக்கு தேவனால் உண்டான கேடாக மாறினது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனேகூட, யெகோவா ஆகாபின் குடும்பத்தாரை அழிக்க அபிஷேகம்செய்யப்பட்ட நிம்சியின் மகனாகிய யெகூவை நோக்கி வெளியே போனான்.
8 யெகூ ஆகாபின் குடும்பத்தாருக்குத் தண்டனைத் தீர்ப்பை வழங்கும்போது, அகசியாவிடம் பணிபுரிந்த யூதாவின் தலைவர்களையும், அவனுடைய உறவினர்களின் மகன்களையும், அவன் அலுவலர்களையும் கண்டுபிடித்துக் கொன்றான்.
௮யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது, அவன் அகசியாவுக்கு சேவை செய்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரர்களின் மகன்களையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.
9 பின்பு அவன் அகசியாவைத் தேடிப் போனான். அப்பொழுது சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அகசியாவை யெகூவின் மனிதர் பிடித்தனர். அவன் யெகூவிடம் கொண்டுவரப்பட்டு கொலைசெய்யப்பட்டான். அவர்கள், “யெகோவாவை முழு இருதயத்துடனும் தேடிய யோசபாத்தின் மகன் இவன்” என்று சொல்லி அவனை அடக்கம்பண்ணினார்கள்; எனவே, ஆட்சியைத் திரும்பக் கைப்பற்றக்கூடிய வல்லமையுடைய ஒருவனும் அகசியாவின் குடும்பத்தில் இருக்கவில்லை.
௯பின்பு, அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளிந்துகொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழு இருதயத்தோடும் யெகோவாவை தேடின யோசபாத்தின் மகன் என்று சொல்லி, அவனை அடக்கம்செய்தார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குத் திறமையுள்ள ஒருவரும் அகசியாவின் குடும்பத்திற்கு இல்லாமற்போனது.
10 அகசியாவின் தாய் அத்தாலியாள் தன் மகன் இறந்ததைக் கண்டபோது, அவள் யூதாவின் அரச குடும்பம் எல்லாவற்றையும் அழிக்கத் தொடங்கினாள்.
௧0அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சத்தார் அனைவரையும் கொன்றுபோட்டாள்.
11 ஆனால் அரசனான யெகோராமின் மகள் யோசேபாள், கொலைசெய்யப்படவிருந்த இளவரசர்களிடமிருந்து அகசியாவின் மகன் யோவாஸை களவாகக் கொண்டுபோய், அவனுடைய செவிலியத் தாயுடன் படுக்கையறையில் வைத்தாள். ஏனெனில் யோசேபாள் அரசன் யோராமின் மகளும், ஆசாரியன் யோய்தாவின் மனைவியும், அகசியாவின் சகோதரியுமாவாள். அவள் அத்தாலியாளிடமிருந்து பிள்ளையை ஒளித்துவைத்தபடியினால் அத்தாலியாளால் பிள்ளையைக் கொலைசெய்ய முடியவில்லை.
௧௧ராஜாவின் மகளாகிய யோசேபியாத், கொன்று போடப்படுகிற ராஜகுமாரர்களுக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசை ஒருவருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு, அவனையும் அவன் வேலைக்காரியையும் படுக்கையறையில் வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாமலிருக்க, ராஜாவாகிய யோராமின் மகளும் ஆசாரியனாகிய யோய்தாவின் மனைவியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள்; அவள் அகசியாவின் சகோதரியாக இருந்தாள்.
12 அத்தாலியாள் அரசாண்ட ஆறுவருஷமளவும், யோவாஸ் தொடர்ந்து அவர்களுடன் இறைவனின் ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.
௧௨இவர்களோடு அவன் ஆறுவருடங்களாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ஆட்சிசெய்தாள்.