< 2 நாளாகமம் 19 >

1 யூதாவின் அரசன் யோசபாத் பாதுகாப்பாக எருசலேமிலுள்ள அரண்மனைக்குத் திரும்பினான்.
யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவந்தான்.
2 அப்போது அனானியின் மகனான தரிசனக்காரன் யெகூ அரசனைச் சந்திக்க வெளியே போனான். அவன் அரசனாகிய யோசபாத்திடம், “நீ கொடியவனுக்கு உதவிசெய்து யெகோவாவை வெறுக்கிறவர்களில் அன்பாயிருக்கலாமா? இதன் காரணமாக யெகோவாவின் கடுங்கோபம் உன்மேல் வந்திருக்கிறது.
அப்பொழுது அனானியின் மகனாகிய யெகூ என்னும் தரிசனம் காண்கிறவன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, யெகோவாவைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதனால் யெகோவாவுடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.
3 ஆயினும், உன்னிடத்தில் சில நல்ல காரியங்கள் உண்டு. அதாவது நீ அசேராவின் விக்கிரகத் தூண்களை நாட்டிலிருந்து அகற்றி, இறைவனைத் தேடுவதற்கு அவர் பக்கமாய் உனது இருதயத்தைத் திருப்பினாய்” என்றான்.
ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளைத் தேசத்தைவிட்டு அகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின காரியத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.
4 யோசபாத் எருசலேமில் குடியிருந்தான். அவன் மறுபடியும் பெயெர்செபா தொடங்கி எப்பிராயீம் மலைநாடு வரையுள்ள மக்களைக் காண்பதற்கு சென்று, அவர்களைத் திரும்பவும் அவர்களின் முற்பிதாக்களின் இறைவனான யெகோவாவின் பக்கமாய் திரும்பச் செய்தான்.
யோசபாத் எருசலேமிலே குடியிருந்து, திரும்ப பெயர்செபா தொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசம்வரை உள்ள மக்களுக்குள்ளே பிரயாணமாகப் போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் திரும்பச்செய்தான்.
5 அவன் யூதாவிலுள்ள அரண்செய்யப்பட்ட பட்டணங்களில் இருக்கும்படி நாட்டில் நீதிபதிகளை நியமித்தான்.
அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,
6 அவன் அவர்களிடம், “நீங்கள் செய்வதைக்குறித்து கவனமாக யோசனை பண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் மனிதனுக்காக நியாயந்தீர்ப்பதில்லை, யெகோவாவுக்காக நியாயந்தீர்க்கிறீர்கள். நீங்கள் தீர்ப்பு வழங்கும்போதெல்லாம் அவர் உங்களோடு இருக்கிறார்.
அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனிதனுடைய கட்டளையினால் அல்ல, யெகோவாவுடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற காரியத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.
7 இப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் உங்கள்மேல் இருப்பதாக. கவனமாக நியாயம் தீருங்கள், ஏனெனில் நம்முடைய இறைவனாகிய யெகோவாவிடம் அநியாயமோ, பாரபட்சமோ, இலஞ்சம் வாங்குதலோ இல்லை” என்றான்.
ஆதலால் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருப்பதாக, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் பாரபட்சமும் இல்லை, லஞ்சம் வாங்குதலும் அவரிடத்திலே செல்லாது என்றான்.
8 எருசலேமிலும்கூட யோசபாத் லேவியரிலும், ஆசாரியர்களிலும், இஸ்ரயேலின் குடும்பத் தலைவர்களிலும் இருந்து சிலரை நியமித்தான். அவர்கள் யெகோவாவின் சட்டங்களை நிர்வகித்து, வழக்குகளைத் தீர்த்து வைத்தார்கள். அவர்கள் எருசலேமில் குடியிருந்தார்கள்.
அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியர்களிலும், ஆசாரியர்களிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் யெகோவாவுடைய நியாயங்களைக்குறித்தும் விவாதக் காரியங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,
9 அவன் அவர்களுக்குக் கொடுத்த கட்டளைகளாவன: “நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து உண்மையுடனும், முழு இருதயத்துடனும் பணிசெய்ய வேண்டும்.
அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து, செய்யவேண்டியது என்னவென்றால்,
10 பட்டணங்களில் வாழ்கின்ற உங்களது உடனொத்த சகோதரர் இரத்தம் சிந்துதல், சட்டம், கட்டளைகள், விதிமுறைகள், ஒழுங்குவிதிகள் ஆகிய வழக்குகளை உங்களிடம் கொண்டுவரும்போது, யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்யவேண்டாம் என, நீங்கள் அவர்களை எச்சரிக்க வேண்டும். இல்லையெனில் அவரது கடுங்கோபம் உங்கள்மேலும், உங்கள் சகோதரர்மேலும் வரும். இதைச் செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் பாவம் செய்யமாட்டீர்கள்.
௧0பலவித இரத்தப்பழியைக்குறித்த காரியங்களும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த பலவித வழக்குச்செய்திகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாமலிருக்கவும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் கடுங்கோபம் வராமலிருக்கவும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் குற்றவாளிகள் ஆகமாட்டீர்கள்.
11 “யெகோவா சம்பந்தமான எந்த விஷயத்திலும் பிரதான ஆசாரியனான அமரியா உங்களுக்குத் தலைமை வகிப்பான். யூதாவின் தலைவனான இஸ்மயேலின் மகன் செபதியா, அரசன் சம்பந்தமான எந்த விஷயத்திலும் தலைமை வகிப்பான். லேவியர்களும் உங்களுக்கு முன்பாக அதிகாரிகளாகப் பணிசெய்வார்கள். துணிவுடன் செயல்படுங்கள், நன்றாய் பணிசெய்பவர்களோடு யெகோவா கூடஇருப்பாராக” என்றான்.
௧௧இதோ, ஆசாரியனாகிய அமரியா, யெகோவாவுக்குரிய எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் மகனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்குரிய எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியர்களும் உங்களுக்கு முன்பாக அதிகாரிகளாக இருந்து உங்களுக்கு உதவி செய்வார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் யெகோவா துணை என்றான்.

< 2 நாளாகமம் 19 >