< 2 நாளாகமம் 16 >
1 ஆசாவின் ஆட்சியின் முப்பத்தாறாம் வருடத்தில், இஸ்ரயேலின் அரசனான பாஷா, யூதாவுக்கு விரோதமாகப் போய், யூதா அரசனான ஆசாவின் எல்லையிலிருந்து யாரும் வெளியே வரவோ, உள்ளே போகவோ முடியாதபடி தடுப்பதற்காக ராமாவைச் சுற்றி அரண் அமைத்தான்.
௧ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருடத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.
2 அப்பொழுது ஆசா யெகோவாவின் ஆலயத்தின் திரவிய களஞ்சியத்திலும், தன் சொந்த அரண்மனை திரவிய களஞ்சியத்திலும் இருந்து வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து தமஸ்குவை ஆட்சி செய்த சீரிய அரசன் பெனாதாத்திற்கு அனுப்பினான்.
௨அப்பொழுது ஆசா யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலும் உள்ள பொக்கிஷங்களிலிருந்து வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வசிக்கிற பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடம் அனுப்பி:
3 மேலும் அவன் அவர்களிடம், “உம்முடைய தகப்பனுக்கும், என்னுடைய தகப்பனுக்குமிடையில் இருந்ததுபோல, உமக்கும் எனக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருக்கட்டும். இதோ பாரும், நான் வெள்ளியையும், தங்கத்தையும் உமக்கு பரிசாக அனுப்புகிறேன். நீர் இஸ்ரயேலின் அரசனான பாஷாவுடன் வைத்துள்ள ஒப்பந்தத்தை முறித்துவிடும். அப்போது அவன் என்னிடமிருந்து பின்வாங்கி விடுவான்” என்று சொல்லி அனுப்பினான்.
௩எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையை முறித்துப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.
4 பெனாதாத் அரசனாகிய ஆசாவுடன் உடன்பட்டு தனது இராணுவத் தளபதிகளை இஸ்ரயேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பினான். அவர்கள் ஈயோன், தாண், ஆபேல் மாயீம் பட்டணங்களையும் நப்தலியின் களஞ்சியப் பட்டணங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றினார்கள்.
௪பென்னாதாத், ராஜாவாகிய ஆசாவுக்கு செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் அனைத்து சேமிப்புக் கிடங்குகளையும் தாக்கினார்கள்.
5 பாஷா இதைக் கேள்விப்பட்டபோது ராமாவைக் கட்டுவதை நிறுத்தி, தனது வேலையைக் கைவிட்டான்.
௫இதை பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைக் கைவிட்டான்.
6 அப்பொழுது அரசன் ஆசா யூதாவின் எல்லா மனிதர்களையும் கொண்டுவந்தான். அவர்கள் போய் பாஷா பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் ராமாவிலிருந்து கொண்டுபோனார்கள். ஆசா அவற்றைப் பயன்படுத்தி கேபாவையும், மிஸ்பாவையும் கட்டினான்.
௬அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையும் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
7 அந்தக் காலத்தில் தரிசனக்காரனான அனானி என்பவன் யூதாவின் அரசன் ஆசாவிடம் வந்தான். அவன் ஆசாவிடம், “நீ இறைவனாகிய உனது யெகோவாவிடம் நம்பிக்கை வைக்காமல், சீரிய அரசனில் நம்பிக்கை வைத்தாய். அதனால் சீரிய அரசனின் படை உனது கைக்குத் தப்பித்துக் கொண்டது.
௭அக்காலத்திலே தரிசனம் காண்கிறவனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய யெகோவாவைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டதால், சீரியா ராஜாவின் படை உமது கைக்குத் தப்பிப்போனது.
8 கூஷியர்களும், லிபியர்களும் எண்ணற்ற தேர்களுடனும், குதிரைவீரர்களுடனும் வலிய இராணுவவீரர்களாய் இருக்கவில்லையோ? அப்படியிருந்தும் நீ யெகோவாமேல் நம்பிக்கை வைத்தபோது, அவர் உன் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தாரே.
௮மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரை வீரருமுள்ள எத்தியோப்பியரும் லிபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் யெகோவாவைச் சார்ந்து கொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.
9 ஏனெனில் இருதயத்தை முழுவதுமாக அவருக்கு ஒப்புக்கொடுக்கிறவர்களைப் பெலப்படுத்தும்படி, யெகோவாவினுடைய கண்களோ பூமியெங்கும் உலாவுகிறது. நீ மூடத்தனமானதைச் செய்திருக்கிறாய். ஆனபடியினால் இன்றுமுதல் நீ யுத்தங்களை சந்திப்பாய்” என்று சொன்னான்.
௯தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த, யெகோவாவுடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்தக் காரியத்தில் அறிவில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு போர்கள் ஏற்படும் என்றான்.
10 இதனால் ஆசா தரிசனக்காரனுடன் கோபங்கொண்டான்; அவன்மேல் ஆசா மிகவும் கோபங்கொண்டதனால் அவனைச் சிறையில் அடைத்தான். அந்த நாளிலேயே ஆசா சில மக்களையும் மிகக் கொடுமையாக ஒடுக்கினான்.
௧0அதனால் ஆசா தரிசனம் காண்கிறவன்மேல் கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதைத்தவிர அக்காலத்தில் மக்களுக்குள் சிலரைக் கொடூரமாக நடப்பித்தான்.
11 ஆசாவின் ஆட்சிக் காலத்தின் தொடக்கமுதல் முடிவுவரை உள்ள நிகழ்வுகள் இஸ்ரயேல், யூதா அரசர்களின் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன.
௧௧ஆசாவின் ஆரம்பம்முதல் முடிவுவரையுள்ள செயல்பாடுகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
12 அவனுடைய ஆட்சியின் முப்பத்தொன்பதாம் வருடத்தில் ஆசா தனது கால்களில் ஏற்பட்ட வியாதியினால் வேதனைப்பட்டான். அவனுடைய வியாதி கடுமையானதாய் இருந்தும், அவன் தனது வியாதியிலும்கூட யெகோவாவின் உதவியைத் தேடவில்லை. ஆனால் வைத்தியரின் உதவியை மட்டும் தேடினான்.
௧௨ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருடத்திலே தன் கால்களில் வியாதி ஏற்பட்டு, அந்த வியாதி மிகவும் அதிகரித்தது; அவன் தன் வியாதியிலும் யெகோவாவை அல்ல, மருத்துவர்களையே தேடினான்.
13 அதன்பின் தனது ஆட்சியின் நாற்பத்தோராவது வருடத்தில் ஆசா தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான்.
௧௩ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருடத்தில் இறந்தான்.
14 அவர்கள் ஆசாவை தாவீதின் நகரத்தில் தனக்கென அவன் வெட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவர்கள் நறுமணப் பொருட்களினாலும், பலவிதமான தைலங்களினாலும் நிறைந்த பாடையில் அவனைக் கிடத்தினார்கள். அவர்கள் அவனைக் கனப்படுத்துவதற்காக பெரும் நெருப்பை வளர்த்தனர்.
௧௪தைலக்காரர்களால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனைக் கிடத்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்காக வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்செய்தார்கள்.