< 2 நாளாகமம் 12 >
1 ரெகொபெயாம் தன்னை அரசனாக நிலைப்படுத்தி, வல்லமையடைந்தபின், அவனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் யெகோவாவினுடைய சட்டத்தைக் கைவிட்டார்கள்.
௧ரெகொபெயாம் ராஜ்ஜியத்தைத் திடப்படுத்தித் தன்னை பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடு இஸ்ரவேலர்கள் அனைவரும் யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.
2 அவர்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருந்தபடியினால், எகிப்திய அரசனான சீஷாக் அரசன் ரெகொபெயாம் அரசாண்ட ஐந்தாம் வருடம் எருசலேமைத் தாக்கினான்.
௨அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக துரோகம்செய்ததால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருடத்தின் ஆட்சியில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதாயிரம் குதிரைவீரர்களோடும் எருசலேமுக்கு விரோதமாக வந்தான்;
3 அவன் 1,200 தேர்களுடனும், 60,000 குதிரைவீரர்களுடனும் வந்தான். அத்துடன் எகிப்திலிருந்து லிபியர், சூக்கியர், கூஷியர் அடங்கிய எண்ணற்ற படையுடனும் வந்தான்.
௩அவனோடுகூட எகிப்திலிருந்து வந்த லிபியர்கள், சூக்கியர்கள், எத்தியோப்பியரான மக்கள் எண்ணமுடியாதவர்களாக இருந்தார்கள்.
4 அவன் யூதாவின் அரணான பட்டணங்களைப் கைப்பற்றி எருசலேம் வரைக்கும் வந்தான்.
௪அவன் யூதாவுக்கு அடுத்த பாதுகாப்பான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்வரை வந்தான்.
5 அப்பொழுது இறைவாக்கினன் செமாயா, சீஷாக்கிற்குப் பயந்து எருசலேமில் ஒன்றுகூடியிருந்த ரெகொபெயாமிடத்திற்கும், யூதாவின் தலைவர்களிடத்திற்கும் வந்தான். அவன் அவர்களிடம், “யெகோவா சொல்வது இதுவே, ‘நீங்கள் என்னைக் கைவிட்டீர்கள்; அதனால், நானும் இப்பொழுது சீஷாக்கின் கையிலே உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்’ என்கிறார்” என்றான்.
௫அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்திற்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்திற்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழுவதற்கு விட்டுவிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
6 இஸ்ரயேலின் தலைவர்களும் அரசனும் தங்களைத் தாழ்த்தி, “யெகோவா நீதியுள்ளவர்” என்று சொன்னார்கள்.
௬அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: யெகோவா நீதியுள்ளவர் என்றார்கள்.
7 அவர்கள் தங்களைத் தாழ்த்தியதை யெகோவா கண்டபோது, யெகோவாவின் இந்த வார்த்தை செமாயாவுக்கு வந்தது: “அவர்கள் தங்களைத் தாழ்த்தியிருப்பதனால் நான் அவர்களை அழிக்கமாட்டேன்; நான் விரைவில் அவர்களை விடுவிப்பேன். சீஷாக்கின் மூலம் எனது கோபத்தை எருசலேமின்மேல் ஊற்றமாட்டேன்.
௭அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் யெகோவா கண்டபோது, யெகோவாவுடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.
8 எப்படியாயினும் அவர்கள் அவனுக்கு கீழ்ப்பட்டு இருப்பார்கள், அதனால் அவர்கள் எனக்குப் பணிசெய்வதற்கும், மற்ற நாட்டு அரசர்களுக்கு பணிசெய்வதற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை அறிந்துகொள்வார்கள்.”
௮ஆனாலும் என்னை சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களை சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனை சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.
9 எகிப்தின் அரசன் சீஷாக் எருசலேமைத் தாக்கியபோது, அவன் யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனையிலும் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடிக் கொண்டுபோனான். சாலொமோன் செய்துவைத்திருந்த எல்லா தங்கக் கேடயங்கள் உட்பட அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான்.
௯அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாக வந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்கேடயங்கள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
10 எனவே அரசன் ரெகொபெயாம் அவற்றிற்குப் பதிலாக வெண்கல கேடயங்களைச் செய்து, அரச அரண்மனை வாசல் காவலர்களின் தளபதிகளிடம் ஒப்படைத்தான்.
௧0அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற பாதுகாவலருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
11 யெகோவாவின் ஆலயத்திற்கு அரசன் போகும்போதெல்லாம், அந்தக் காவலர் கேடயங்களை எடுத்துக்கொண்டு அரசனோடு போய், திரும்பவும் அவற்றைக் காவலறைக்குள் கொண்டுவந்து வைப்பார்கள்.
௧௧ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது, அரண்மனைக் காவலர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
12 ரெகொபெயாம் தன்னை தாழ்த்தியபடியால், அவனை முழுவதும் அழிக்காதபடி, யெகோவாவின் கோபம் அவனைவிட்டுத் திரும்பியது; யூதாவில் இன்னும் சில நற்செயல்கள் காணப்பட்டது.
௧௨அவன் தன்னைத் தாழ்த்தினதால், யெகோவா அவனை முழுவதும் அழிக்காமல் அவருடைய கோபம் அவனைவிட்டுத் திரும்பினது; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் ஒழுங்குள்ளதாயிருந்தது.
13 அரசன் ரெகொபெயாம் தன்னை எருசலேமில் உறுதியாய் நிலைப்படுத்தித் தொடர்ந்து அரசனாயிருந்தான். அவன் அரசனாகும்போது அவனுக்கு நாற்பத்தொரு வயதாயிருந்தது. யெகோவா தனது பெயர் விளங்கும்படி இஸ்ரயேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து தெரிந்துகொண்ட பட்டணமான எருசலேமில் பதினேழு வருடங்கள் அரசாண்டான். அம்மோனியப் பெண்ணான அவன் தாயின் பெயர் நாமாள்.
௧௩அப்படியே ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, யெகோவா தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோன் வம்சத்தாளான அவனுடைய தாயின் பெயர் நாகமாள்.
14 யெகோவாவைத் தேடுவதற்கு அவன் தன் இருதயத்தில் உறுதியாய் இராதபடியினால் தீமையையே செய்தான்.
௧௪அவன் யெகோவாவை தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.
15 ரெகொபெயாமின் ஆட்சிக் காலத்தின் தொடக்கமுதல் முடிவு வரையான நிகழ்வுகள், இறைவாக்கினனான செமாயாவின் குறிப்புப் புத்தகத்திலும், தரிசனக்காரனான இத்தோவியரின் வம்ச வரலாற்றுப் புத்தகத்திலும் அல்லவோ எழுதியிருக்கின்றன. ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் இடையில் தொடர்ந்து யுத்தம் நடந்து கொண்டேயிருந்தது.
௧௫ரெகொபெயாமின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள அனைத்து செயல்களும் செமாயாவின் புத்தகத்திலும், தரிசனம் காண்கிறவனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் எல்லா நாட்களும் போர் நடந்துகொண்டிருந்தது.
16 ரெகொபெயாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் அபியா அவனுடைய இடத்தில் அரசனானான்.
௧௬ரெகொபெயாம் இறந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் மகனாகிய அபியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.