< 2 நாளாகமம் 11 >

1 ரெகொபெயாம் எருசலேமை வந்தடைந்தபோது, யூதா, பென்யமீன் குடும்பத்தில் 1,80,000 போர்வீரரை ஒன்றுகூட்டினான். இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டு முழு அரசையும் தனது ஆட்சிக்குட்படுத்தவே அவர்கள் திரட்டப்பட்டனர்.
ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு போர்செய்யவும், ராஜ்ஜியத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட போர்வீரரான ஒருலட்சத்து எண்பதாயிரம்பேரைக் கூட்டினான்.
2 ஆனால் இறைவனின் மனிதன் செமாயாவுக்கு இந்த யெகோவாவின் வார்த்தை வந்தது:
தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி. அவர் சொன்னது:
3 “நீ யூதாவின் அரசனான சாலொமோனின் மகன் ரெகொபெயாமுக்கும், யூதாவிலும் பென்யமீனிலுமுள்ள எல்லா இஸ்ரயேலருக்கும் சொல்லவேண்டியதாவது:
நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அனைத்து இஸ்ரவேலரையும் நோக்கி:
4 ‘யெகோவா சொல்வது இதுவே: உங்கள் சக இஸ்ரயேலர்களுக்கு எதிராக யுத்தம்செய்யப் போகவேண்டாம். இது எனது செயல்; நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்கிறார்’” என்றான். எனவே அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு எதிராக அணிவகுத்துச் செல்வதைவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.
நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு போர்செய்யாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாக போர்செய்வதைத் தவிர்த்துத் திரும்பிப் போய்விட்டார்கள்.
5 ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்து, யூதாவில் பாதுகாப்பிற்கென பட்டணங்களைக் கட்டினான்.
ரெகொபெயாம் எருசலேமில் குடியிருந்து, யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.
6 பெத்லெகேம், ஏத்தாம், தெக்கோவா,
அவன் பெத்லெகேமும், ஏத்தாமும், தெக்கோவாவும்,
7 பெத்சூர், சோக்கோ, அதுல்லாம்,
பெத்சூரும், சோக்கோவும், அதுல்லாமும்,
8 காத், மரேஷா, சீப்,
காத்தும், மரேஷாவும், சீப்பும்,
9 அதோராயீம், லாகீசு, அசேக்கா,
அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,
10 சோரா, ஆயலோன், எப்ரோன் ஆகிய அரணான பட்டணங்களை பென்யமீனிலும் யூதாவிலும் கட்டினான்.
௧0சோராவும், ஆயலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டி,
11 அவன் அங்குள்ள பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவற்றிற்கு தளபதிகளை நியமித்தான். அவர்களுக்கான உணவையும், ஒலிவ எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் கொடுத்தான்.
௧௧அந்தப் பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சைரசமும் உள்ள சேமிப்பு அறைகளையும்,
12 அவன் எல்லாப் பட்டணங்களிலும் கேடயங்களையும், ஈட்டிகளையும் வைத்து அவற்றை மிகவும் பலப்படுத்தினான். அப்படியே யூதாவும், பென்யமீனும் அவனுடையதாயிற்று.
௧௨யூதாவும் பென்யமீனும் அவன் கட்டுப்பாட்டிலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் கேடயங்களையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.
13 இஸ்ரயேல் எங்குமுள்ள ஆசாரியரும், லேவியர்களும் அவர்களுடைய எல்லைகளிலிருந்து அவனுக்கு ஆதரவு வழங்கினர்.
௧௩இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள்.
14 லேவியர் யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் மகன்களும் புறக்கணித்ததால், தங்கள் விளைச்சல் நிலங்களையும், சொத்துக்களையும்விட்டு யூதாவுக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.
௧௪லேவியர்கள் யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யாமலிருக்க யெரொபெயாமும் அவன் மகன்களும் அவர்களைத் தள்ளிப்போட்டதால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் சொத்துக்களையும்விட்டு, யூதா தேசத்திற்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.
15 ஆனால் யெரொபெயாம் தான் செய்திருந்த வழிபாட்டு மேடைகளுக்கும், ஆடு, கன்றுக்குட்டி விக்கிரகங்களுக்குமென தனது சொந்த ஆசாரியர்களை நியமித்தான்.
௧௫அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.
16 இஸ்ரயேலர் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் தேடவேண்டும் எனத் தங்கள் இருதயத்தில் நினைத்தவர்கள், தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு பலி செலுத்துவதற்கென லேவியர்களைப் பின்பற்றி எருசலேமுக்குப் போனார்கள்.
௧௬அந்த லேவியர்களின் பின்னே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடுவதற்காக எருசலேமுக்கு வந்தார்கள்.
17 இவ்வாறு அவர்கள் மூன்று வருடங்கள் சாலொமோனின் மகனான ரெகொபெயாமுக்கு உதவிசெய்து, யூதாவின் அரசாட்சியை நிலைநிறுத்திப் பெலப்படுத்தினார்கள்; இந்த மூன்று வருடங்களும் அவர்கள் தாவீது, சாலொமோன் நடந்த வழிகளில் நடந்தார்கள்.
௧௭இப்படி மூன்று வருடங்கள்வரை யூதாவின் ராஜ்ஜியத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருடங்கள்வரை நடந்தார்கள்.
18 ரெகொபெயாம் மகலாத்தைத் திருமணம் செய்தான். இவள் தாவீதின் மகன் எரிமோத்திற்கும் ஈசாயின் மகனான எலியாபின் மகள் அபியாயேலுக்கும் பிறந்தவள்.
௧௮ரெகொபெயாம் தாவீதின் மகனாகிய எரிமோத்தின் மகள் மகலாத்தையும், ஈசாயின் மகனாகிய எலியாபின் மகள் அபியாயேலையும் திருமணம்செய்தான்.
19 மகலாத் அவனுக்கு எயூஸ், ஷெமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள்.
௧௯இவள் அவனுக்கு ஏயூஸ், செமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள்.
20 பின்பு அவன் அப்சலோமின் மகளான மாக்காளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு அபியா, அத்தாய், சீசா, செலோமித் ஆகியோரைப் பெற்றாள்.
௨0அவளுக்குப்பிறகு அப்சலோமின் மகளாகிய மாகாளைத் திருமணம்செய்தான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள்.
21 ரெகொபெயாம் தனது மற்ற மனைவியரையும், வைப்பாட்டிகள் எவரையும்விட, அப்சலோமின் மகளான மாக்காள்மீதே அன்பாயிருந்தான். அவனுக்கு எல்லாமாக மொத்தம் பதினெட்டு மனைவிகளும், அறுபது வைப்பாட்டிகளும், இருபத்தெட்டு மகன்களும், அறுபது மகள்களும் இருந்தார்கள்.
௨௧ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லோரிலும், அப்சலோமின் மகளாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் திருமணம்செய்து, இருபத்தெட்டு மகன்களையும் அறுபது மகள்களையும் பெற்றான்.
22 ரெகொபெயாம் மாக்காளின் மகன் அபியாவை அரசனாக்கும்படி, அவனுடைய சகோதரருக்குள் முதன்மையான இளவரசனாக்கினான்; அவனையே அரசனாக்க வேண்டுமென்றிருந்தான்.
௨௨ரெகொபெயாம் மாகாளின் மகனாகிய அபியாவை அவன் சகோதரர்களுக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.
23 அவன் ஞானமாய் நடந்து, தன் மகன்களில் சிலரை பென்யமீன், யூதா நாடுகளெங்குமுள்ள அரணுள்ள பட்டணங்களில் பிரிந்து பரவலாய் இருக்கச்செய்தான். அவன் அவர்களுக்கு ஏராளமான உணவுப் பொருட்களையும், அவர்களுக்கென அநேக மனைவிகளையும் கொடுத்தான்.
௨௩அவன் புத்தியாக நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள பாதுகாப்பான சகல பட்டணங்களிலும் தன் மகன்கள் அனைவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.

< 2 நாளாகமம் 11 >