< 1 சாமுவேல் 28 >
1 அக்காலத்தில் இஸ்ரயேல் மக்களை எதிர்த்துப் போரிடும்படி பெலிஸ்தியர் படை திரட்டினார்கள். அப்பொழுது ஆகீஸ் தாவீதிடம், “நீயும் உனது மனிதரும் எனது படைவீரருடன் சேர்ந்து வரவேண்டும் என்பதை அறிந்துகொள்” என்றான்.
௧அந்த நாட்களிலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய, தங்களுடைய இராணுவங்களைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன்னுடைய மனிதர்களும் என்னோடு யுத்தத்திற்கு வரவேண்டும் என்று அறிந்துகொள் என்றான்.
2 அதற்குத் தாவீது, “உம்முடைய அடியவனால் என்ன செய்யமுடியும் என்பதை நீர் அறிந்துகொள்வீர்” என்றான். எனவே தாவீதிடம் ஆகீஸ், “மிக நல்லது, உன்னை என் வாழ்நாள் முழுவதும் என் மெய்க்காவலனாக்குவேன்” என்றான்.
௨தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர்கள் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை நிரந்தரமாக என்னுடைய மெய்காவலனாக வைப்பேன் என்றான்.
3 அந்நாட்களில் சாமுயேல் இறந்திருந்தான். முழு இஸ்ரயேலரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடி அவனுடைய சொந்த பட்டணமான ராமாவிலே அவனை அடக்கம்பண்ணியிருந்தார்கள். சவுல் குறிசொல்லுகிறவர்களையும், ஆவியுடன் தொடர்புடையோரையும் தேசத்தில் இல்லாதபடித் துரத்திவிட்டிருந்தான்.
௩சாமுவேல் இதற்கு முன்பே இறந்துபோனான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவனுடைய ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் செய்தார்கள். சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடித் துரத்திவிட்டான்.
4 பெலிஸ்தியரும் ஒன்றுகூடி வந்து சூனேமிலே முகாமிட்டிருந்தார்கள். அப்பொழுது சவுல் இஸ்ரயேல் அனைவரையும் ஒன்றுசேர்த்து கில்போவாவிலே முகாமிட்டிருந்தான்.
௪பெலிஸ்தர்கள் கூடிவந்து, சூனேமிலே முகாமிட்டார்கள்; சவுலும் இஸ்ரவேலர்கள் எல்லோரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே முகாமிட்டார்கள்.
5 சவுல் பெலிஸ்தியரின் இராணுவத்தைக் கண்டவுடன் பயந்தான். அவனுடைய மனம் திகிலடைந்தது.
௫சவுல் பெலிஸ்தர்களின் முகாமை கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது.
6 சவுல் யெகோவாவிடம் விசாரித்தான். ஆனால் அவர் கனவுகளினாலோ, ஊரீமினாலோ, இறைவாக்கினராலோ அவனுக்குப் பதில் கொடுக்கவில்லை.
௬சவுல் யெகோவாவிடத்தில் விசாரிக்கும்போது, யெகோவா அவனுக்குச் சொப்பனங்களினாலும், ஊரீமினாலும், தீர்க்கதரிசிகளினாலும் பதில் சொல்லவில்லை.
7 எனவே சவுல் தன் வேலையாட்களிடம், “நான் போய் விசாரிக்கும்படி, நீங்கள் போய் குறிசொல்லுகிற ஒருத்தியைத் தேடிப் பாருங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “எந்தோரிலே ஒருத்தி இருக்கிறாள்” என்றார்கள்.
௭அப்பொழுது சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண்ணைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்கள்: இதோ, எந்தோரில் இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண் இருக்கிறாள் என்றார்கள்.
8 எனவே சவுல் மாறுவேடம் தரித்து, அன்றிரவு அவனும் அவனோடு இரண்டு மனிதரும் அந்தப் பெண்ணிடம் போனார்கள். சவுல் அவளிடம், “நீ எனக்காக ஒரு ஆவியை விசாரி. நான் பெயரிடும் ஆவியை எழுந்துவரச் சொல்” என்றான்.
௮அப்பொழுது சவுல் வேடம் மாறி, வேறு உடை அணிந்துகொண்டு, அவனும் அவனோடு இரண்டுபேரும் இரவிலே அந்த பெண்ணிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் பார்த்து: நீ எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான்.
9 அந்தப் பெண்ணோ அவரிடம், “சவுல் செய்தது உமக்குத் தெரியும்தானே. அவன், ஆவியுடன் தொடர்பு கொள்கிறவர்களையும் நாட்டில் இராதபடி செய்திருக்கிறான். அப்படியிருக்க எனக்கு மரணம் ஏற்படும்படி ஏன் என் உயிருக்குக் கண்ணி வைக்கிறீர்” என்று கேட்டாள்.
௯அதற்கு அந்த பெண்: சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடி, தடை செய்த செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என்னுடைய உயிருக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
10 அதற்குச் சவுல், “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீ இதற்காகத் தண்டிக்கப்பட மாட்டாய் என்பதும் நிச்சயம்” என யெகோவாவின் பெயரில் ஆணையிட்டான்.
௧0அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் தீங்கு வராது என்பதைக் யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் யெகோவாவின்மேல் ஆணையிட்டான்.
11 அப்பொழுது அந்தப் பெண் சவுலிடம், “உமக்காக யாரை அழைக்கவேண்டும்” என்றாள். அதற்குச் சவுல், “சாமுயேலை அழைப்பி” என்றான்.
௧௧அப்பொழுது அந்த பெண்: உமக்கு நான் யாரை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றான்.
12 அந்தப் பெண் சாமுயேலைக் கண்டவுடன் உரத்த சத்தமாய்ச் சவுலைக் கூப்பிட்டு, “நீர்தானே சவுல்? ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்றாள்.
௧௨அந்த பெண் சாமுவேலைப் பார்த்தவுடன் மகா சத்தமாய் அலறி, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தானே சவுல் என்றாள்.
13 அதற்குச் சவுல் அரசன், “பயப்படாதே! உனக்கு என்ன தெரிகிறது?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண், “ஒரு தெய்வ உருவம் நிலத்துக்குள்ளிருந்து எழும்பி வருவது தெரிகிறது” என்றாள்.
௧௩ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ பார்க்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த பெண்: முதியவர் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
14 அதற்குச் சவுல், “அதனுடைய தோற்றம் எப்படியிருக்கிறது?” என்று கேட்டான். அதற்கு அவள், “மேலங்கி உடுத்திய வயது முதிர்ந்த ஒருவர் எழும்பி வருகிறார்” என்றாள். அவர் சாமுயேல் எனச் சவுல் அறிந்துகொண்டான். உடனே தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கினான்.
௧௪அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனிதன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைவரை முகங்குனிந்து வணங்கினான்.
15 அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “நீ என்னை வெளியே கொண்டுவந்து ஏன் என்னைக் குழப்பினாய்” என்று கேட்டான். அதற்குச் சவுல், “நான் பெரிய ஆபத்திலிருக்கிறேன். பெலிஸ்தியர் எனக்கெதிராக யுத்தம் செய்கிறார்கள். இறைவனோ என்னைவிட்டு விலகிவிட்டார். இறைவாக்கினர் மூலமாகவோ, கனவு மூலமாகவோ அவர் இப்போது எனக்குப் பதிலளிப்பதில்லை. இதனால்தான் நான் என்ன செய்யவேண்டுமென்று அறிவிக்கும்படி உம்மை அழைத்தேன்” என்றான்.
௧௫சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரச் செய்து, என்னைத் தொந்தரவு செய்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர்கள் எனக்கு விரோதமாய் யுத்தம்செய்கிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலும், சொப்பனங்களினாலும் எனக்கு பதில் சொல்கிறதில்லை; எனவே, நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைத்தேன் என்றான்.
16 அதற்குச் சாமுயேல், “இப்பொழுது யெகோவா உன்னைவிட்டு விலகி உன் பகைவனாய் இருக்கும்போது நீ ஏன் என்னைக் கேட்கிறாய்?
௧௬அதற்குச் சாமுவேல்: யெகோவா உன்னைவிட்டு விலகி, உனக்கு எதிரியாக இருக்கும்போது, நீ என்னிடத்தில் ஏன் கேட்கிறாய்?
17 யெகோவா என் மூலமாய் உனக்கு முன்னறிவித்தபடி செய்திருக்கிறார். உன் அரசை உன்னிடமிருந்து பறித்து உன் அயலானான தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.
௧௭யெகோவா என்னைக்கொண்டு சொன்னபடியே செய்துமுடித்து, ராஜ்ஜியத்தை உன்னுடைய கையிலிருந்து பறித்து, அதை உன்னுடைய தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.
18 நீ யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல், அமலேக்கியருக்கு விரோதமான அவருடைய கடுங்கோபத்தினாலான அவரின் தீர்ப்பை நிறைவேற்றவில்லை. அதனால்தான் அவர் இன்று உனக்கு இப்படிச் செய்தார்.
௧௮நீ யெகோவாவுடைய சொல் கேட்காமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியால், யெகோவா இன்றையதினம் உனக்கு இப்படிச் செய்தார்.
19 மேலும் யெகோவா இஸ்ரயேலரையும், உன்னையும் பெலிஸ்தியரிடம் ஒப்படைப்பார். எனவே நாளைக்கு நீயும் உன் மகன்களும் என்னோடு இருப்பீர்கள். இஸ்ரயேலின் இராணுவப் படையையும் பெலிஸ்தியரிடம் ஒப்படைப்பார்” என்றான்.
௧௯யெகோவா உன்னையும், உன்னுடைய மக்களாகிய இஸ்ரவேலர்களையும் பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன்னுடைய மகன்களும் என்னோடு இருப்பீர்கள்; இஸ்ரவேலின் முகாமையும் யெகோவா பெலிஸ்தர்களின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
20 சாமுயேல் சொன்னவற்றைக் கேட்டவுடனே சவுல் பயந்து தரையில் முகங்குப்புற விழுந்தான். அவன் அன்று பகலும், இரவும் ஒன்றுமே சாப்பிடாதபடியால் பலவீனமாய் இருந்தான்.
௨0அதை கேட்டவுடனே சவுல் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் அன்று பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தபடியால், அவன் பெலவீனமாக இருந்தான்.
21 அப்பொழுது சவுல் மிகவும் கலக்கமடைந்திருப்பதைக் கண்ட அந்தப் பெண், “நான் உமக்குக் கீழ்ப்படிந்தேன். என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நீர் சொன்னபடியே செய்தேன்.
௨௧அப்பொழுது அந்த பெண் சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என்னுடைய உயிரை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
22 இப்பொழுது நீரும் உமது அடியாளுடைய வார்த்தைகளைக் கேட்டு நீர் பயணம் செய்வதற்கு ஏற்ற பெலன் பெறும்படி நான் உமக்குக் கொடுக்கும் உணவைச் சாப்பிடும்” என்றாள்.
௨௨இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைச் சாப்பிடுவீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.
23 சவுலோ, “நான் சாப்பிடமாட்டேன்” என மறுத்தான். ஆனால் அவன் பணியாட்களும் அவளுடன் சேர்ந்து சவுலை வற்புறுத்தவே அவன் சம்மதித்தான். அவன் நிலத்திலிருந்து எழுந்து ஒரு படுக்கையின்மேல் உட்கார்ந்தான்.
௨௩அவனோ அதை மறுத்து, நான் சாப்பிடமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரர்களும் அந்த பெண் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.
24 அப்பெண்ணின் வீட்டில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று இருந்தது. உடனே அவள் அதைக் கொன்று சமைத்தாள். மாவைப் பிசைந்து புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டாள்.
௨௪அந்த பெண்ணிடம் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதை விரைவாக அடித்து, மாவு எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு,
25 அவற்றைச் சவுலுக்கும் அவன் பணியாட்களுக்கும் முன்பாக வைத்தபோது அவர்கள் சாப்பிட்டார்கள், அன்றிரவே அவர்கள் எழுந்து அவ்விடமிருந்து போனார்கள்.
௨௫சவுலுக்கும் அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் சாப்பிட்டு எழுந்து, அந்த இரவிலேயே புறப்பட்டுப் போனார்கள்.