< 1 சாமுவேல் 24 >

1 பெலிஸ்தியரைத் துரத்திவிட்டுச் சவுல் திரும்பியபோது, “தாவீது என்கேதி பாலைவனத்திலே தங்கியிருக்கிறான்” என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
சவுல் பெலிஸ்தர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
2 அப்பொழுது சவுல் இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு, “காட்டாடுகளின் குன்றுகள்” என்ற இடத்திற்கு அருகே தாவீதையும், அவன் ஆட்களையும் தேடிப்பார்க்கப் போனான்.
அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட 3,000 பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
3 போகும் வழியில் ஆட்டுத்தொழுவங்கள் இருந்த இடத்திற்கு வந்தான். அங்கே ஒரு குகை இருந்தது. சவுல் மலசலம் கழிப்பதற்காக அதற்குள் போனான். தாவீதும் அவன் மனிதரும் குகையினுள்ளே இருந்தார்கள்.
வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு குகை இருந்தது; அதிலே சவுல் காலைக்கடன் கழிக்கப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தக் குகையின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.
4 அப்பொழுது தாவீதின் மனிதர், “நீ விரும்பியபடி உன் பகைவனுக்கு செய்வதற்கு அவனை உன் கையில் ஒப்படைப்பேன் என்று யெகோவா உனக்குச் சொல்லிய நாள் இன்றுதான்” என்றார்கள். உடனே தாவீது சவுல் அறியாதபடி தவழ்ந்துபோய், அவன் அங்கியின் ஒரு மூலையை வெட்டினான்.
அப்பொழுது தாவீதின் மனிதர்கள் அவனை நோக்கி: இதோ, நான் உன்னுடைய எதிரியை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று யெகோவா உன்னோடு சொன்ன நாள் இதுவே என்றார்கள்; தாவீது எழுந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெதுவாக அறுத்துக்கொண்டான்.
5 பின் சவுலின் அங்கியின் மூலையை வெட்டியதற்காக தாவீதின் மனசாட்சி அவனை உறுத்தியது.
தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினால் அவனுடைய மனது அடித்துக்கொண்டிருந்தது.
6 அப்பொழுது அவன் தன் மனிதரிடம், “யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு எஜமானுக்கு இப்படியான செயலை நான் செய்யவும், அவருக்கு விரோதமாக எனது கையை உயர்த்தவும் யெகோவா அனுமதிக்கமாட்டார். ஏனெனில் அவர் யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்றான்.
அவன் தன்னுடைய மனிதர்களைப் பார்த்து: யெகோவா அபிஷேகம்செய்த என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடி, யெகோவா என்னைக் காப்பாராக; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவர் என்று சொல்லி,
7 தாவீது இந்த வார்த்தைகளால் தன் மனிதரைக் கடிந்துகொண்டு சவுலைத் தாக்குவதற்கு அவர்களை அவன் அனுமதிக்கவில்லை. அப்பொழுது சவுல் குகையை விட்டு புறப்பட்டுத் தன் வழியே போனான்.
தன்னுடைய மனிதர்களை சவுலின்மேல் எழும்ப விடாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை செய்தான்; சவுல் எழுந்து, குகையைவிட்டு, வழியே நடந்து போனான்.
8 உடனே தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியே வந்து, “என் தலைவனான அரசே!” என்று சத்தமாய் கூப்பிட்டான். சவுல் திரும்பிப் பார்த்தபோது தாவீது தரைமட்டும் குனிந்து அவனை வணங்கினான்.
அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரை வரை முகங்குனிந்து வணங்கி,
9 பின்பு தாவீது சவுலிடம், “தாவீது உனக்குத் தீங்குசெய்ய எண்ணம் கொண்டிருக்கிறான் என்று மனிதர் உமக்குச் சொல்லும்போது நீர் ஏன் நம்புகிறீர்?
சவுலை நோக்கி: தாவீது உமக்கு தீங்கு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனிதர்களுடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
10 இன்று இந்தக் குகையில் யெகோவா உம்மை என்னிடம் ஒப்படைத்தார் என்பதை உம்முடைய கண்கள் கண்டன. உம்மைக் கொலை செய்யும்படி சிலர் என்னைத் தூண்டினார்கள். நானோ உம்மைத் தப்பவிட்டேன். ‘யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவராகையால் என் தலைவனாகிய உமக்கு எதிராக என் கையை உயர்த்தமாட்டேன்’ என்று நான் அவர்களுக்குச் சொன்னேன்.
௧0இதோ, யெகோவா இன்று குகையில் உம்மை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என்னுடைய கை உம்மைத் தப்பவிட்டது; என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடேன்; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவராமே என்றேன்.
11 என் தகப்பனே! என் கையிலுள்ள உம்முடைய அங்கியின் துண்டைப் பாரும். நான் உமது அங்கியின் துண்டை வெட்டி எடுத்தேன். ஆனால் உம்மைக் கொலைசெய்யவில்லை. என்னைப் புரிந்துகொண்டு, நான் அநியாயம் செய்தோ, கலகம் செய்தோ ஒரு குற்றவாளியாகவில்லை என்று ஏற்றுக்கொள்ளும். நான் உமக்கு ஒரு பிழையையும் செய்யவில்லை. ஆனால் நீரோ என் உயிரை வாங்குவதற்கு வேட்டையாடுகிறீர்.
௧௧என்னுடைய தகப்பனே பாரும்; என்னுடைய கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என்னுடைய கையிலே தீங்கும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என்னுடைய உயிரை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
12 ஆனாலும் யெகோவா உமக்கும் எனக்கும் நடுவில் நின்று நியாயந்தீர்பாராக. நீர் எனக்குச் செய்த பிழைகளுக்காக யெகோவா உம்மைப் பழிவாங்குவாராக. ஆனால் என் கையோ உம்மைத் தொடாது.
௧௨யெகோவா எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, யெகோவா தாமே என்னுடைய காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.
13 ‘தீயோர்களிடத்திலிருந்து தீய செயல்கள் பிறக்கும்’ என்று ஒரு முதுமொழி உண்டு. ஆதலால் எனது கை உம்மைத் தொடாது.
௧௩முதியோர் வாக்கின்படியே, தீயோரிடமிருந்து தீமை பிறக்கும்; எனவே, என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.
14 “இஸ்ரயேலின் இறைவன் யாருக்கு விரோதமாக வந்திருக்கிறார்? யாரை நீர் துரத்துகிறீர்? ஒரு செத்த நாயையா? ஒரு தெள்ளுப்பூச்சியையா?
௧௪இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?
15 யெகோவாவே நீதிபதியாய் இருந்து நமக்கிடையில் நியாயந்தீர்பாராக. அவர் எனக்காக வழக்காடி என்னை உம் கையிலிருந்து விடுவித்து நிரபராதி எனத் தீர்ப்பாராக” என்றான்.
௧௫யெகோவா நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வாதாடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
16 இவ்வாறு தாவீது சவுலுக்குச் சொல்லி முடிந்தபின், சவுல் அவனிடம், “தாவீதே, என் மகனே, இது உன்னுடைய குரல்தானா?” என்று கேட்டு சத்தமிட்டு அழுதான்.
௧௬தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
17 பின்னும் தாவீதிடம், “நீ என்னைவிட அதிக நேர்மையானவன்; நீ என்னை நன்றாக நடத்தியிருக்கிறாய். நானோ உன்னை கேவலமாய் நடத்தினேன்.
௧௭தாவீதைப் பார்த்து: நீ என்னைவிட நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன்.
18 நீ எனக்குச் செய்த நன்மையைக் குறித்து இப்பொழுது சொன்னாயே. யெகோவா என்னை உன்னிடம் ஒப்படைத்திருந்தும் நீ என்னைக் கொலைசெய்யவில்லை.
௧௮நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கச்செய்தாய்; யெகோவா என்னை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்று போடவில்லை.
19 ஒருவன் தன் பகைவனைக் காணும்போது அவனுக்குத் தீங்கு செய்யாமல் தப்பிப் போகவிடுவானோ? அதனால் இன்று நீ என்னை நடத்திய விதத்திற்காக யெகோவா உனக்கு நல்ல பலன் அளிப்பாராக.
௧௯ஒருவன் தன்னுடைய எதிரியைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமாக போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் யெகோவா உனக்கு நன்மை செய்வாராக.
20 இப்பொழுது நீ அரசனாவாய் என்பதும் இஸ்ரயேலரின் அரசாட்சி உன்னால் நிலைநாட்டப்படும் என்பதும் எனக்கு நிச்சயமாய்த் தெரியும்.
௨0நீ நிச்சயமாக ராஜாவாக இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்ஜியம் உன்னுடைய கையில் நிலைக்கும் என்றும் அறிவேன்.
21 இப்பொழுது என் சந்ததியை அழிப்பதில்லையென்றும் என் தகப்பனின் குடும்பத்திலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும் யெகோவாவின் பெயரில் நீ ஆணையிட்டுக் கொடு” என்றான்.
௨௧இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என்னுடைய சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என்னுடைய தகப்பன் வீட்டாரில் என்னுடைய பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் யெகோவாமேல் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
22 அவ்வாறே தாவீது சவுலுக்கு ஆணையிட்டான். பின்பு சவுல் தன் இருப்பிடத்திற்குப் போனான். தாவீதும் அவன் ஆட்களும் தங்கள் அரணான இடத்திற்குப் போனார்கள்.
௨௨அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாதுகாப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

< 1 சாமுவேல் 24 >