< 1 சாமுவேல் 22 >
1 தாவீது காத்திலிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்னும் குகைக்குத் தப்பி ஓடினான். அதை அவனுடைய சகோதரரும், தகப்பன் வீட்டாரும் கேள்விப்பட்டபோது, அவர்களும் அவனிடம் போனார்கள்.
௧தாவீது அந்த இடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் குகைக்குப் போனான்; அதை அவன் சகோதரர்களும் அவன் தகப்பன் வீட்டார்கள் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்திற்குப் போனார்கள்.
2 மற்றும் துன்பப்பட்டவர்களும், கடன்பட்டவர்களும், மனவிரக்தியடைந்தவர்களும் வந்து அவனைச்சுற்றி ஒன்றுசேர்ந்தார்கள். அவன் அவர்களெல்லாருக்கும் தலைவனானான். ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.
௨ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடு கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் படியாக ஏறக்குறைய 400 பேர் அவனோடு இருந்தார்கள்.
3 தாவீது அங்கிருந்து புறப்பட்டு, மோவாபிலுள்ள மிஸ்பேக்குப் போய் மோவாபின் அரசனிடம், “இறைவன் எனக்காக என்ன செய்யப்போகிறார் என்று நான் அறியும்வரை, என் தகப்பனும் தாயும் வந்து உம்முடன் தங்கியிருக்கும்படி தயவுசெய்து அனுமதி கொடுப்பீரோ?” என்று கேட்டான்.
௩தாவீது அந்த இடத்தைவிட்டு மோவாபியர்களைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியும் வரை, என்னுடைய தகப்பனும் என்னுடைய தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயை செய்யும் என்று சொல்லி,
4 அப்படியே தாவீது அவர்களை மோவாப் அரசனிடம் விட்டான். தாவீது தனது வழக்கமான கோட்டையில் இருக்கும்வரை அவர்கள் அரசனுடன் இருந்தார்கள்.
௪அவர்களை மோவாபின் ராஜாவிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது கோட்டையில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.
5 ஆனாலும் காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதிடம், “நீ இங்கே இந்த கோட்டையில் தங்கவேண்டாம். யூதாவுக்குப் புறப்பட்டுப்போ” என்றான். எனவே தாவீது அவ்விடத்தைவிட்டு ஆரேத் என்னும் காட்டுக்குப் போனான்.
௫பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் கோட்டையில் இருக்காமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிற்கு போனான்.
6 தாவீதும் அவன் பணியாட்களும் எங்கேயிருக்கிறார்கள் என்னும் செய்தியை சவுல் அறிந்தான். அப்பொழுது அவன் கிபியாவிலுள்ள ஒரு குன்றுக்குமேல் தமரிஸ்கு மரத்தின்கீழ் கையில் ஈட்டியுடன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய அதிகாரிகள் அவனைச்சுற்றி நின்றார்கள்.
௬தாவீதும் அவனோடிருந்த மனிதர்களும் காணப்பட்ட செய்தியை சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் தன்னைச் சூழ்ந்து நிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது,
7 அப்பொழுது சவுல் அந்த அதிகாரிகளிடம், “பென்யமீன் மனிதரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களனைவரையும் ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும் நியமிப்பானோ?
௭சவுல் தன்னுடைய அருகில் நிற்கிற தன் ஊழியக்காரர்களைப் பார்த்து: பென்யமீன் மக்களே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் எல்லோருக்கும் வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லோரையும் ஆயிரத்திற்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
8 அதனால்தானோ நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாய்ச் சதி செய்திருக்கிறீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்து கொண்டதை ஒருவரும் எனக்குச் சொல்லவில்லை. உங்களில் ஒருவனும் என்னில் அக்கறை கொள்ளவில்லை. எனக்காகப் பதுங்கியிருக்கும்படி தாவீதை என் மகன் தூண்டிவிட்டதையும் ஒருவரும் எனக்குச் சொல்லவில்லை. அதையே இன்று அவன் செய்கிறான்” என்று சொன்னான்.
௮நீங்களெல்லோரும் எனக்கு எதிராக சதி செய்தது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கை செய்யும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவன் கூட இல்லையா? இந்த நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய, என்னுடைய மகன் என்னுடைய வேலைக்காரனை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டானே என்றான்.
9 அப்பொழுது சவுலின் அதிகாரிகளுடன் நின்ற ஏதோமியனான தோவேக்கு சவுலிடம், “ஈசாயின் மகன் நோபிலுள்ள அகிதூபின் மகன் அகிமெலேக்கிடம் வந்ததைக் கண்டேன்.
௯அப்பொழுது சவுலின் ஊழியக்காரர்களோடு நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பதிலாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் மகனான அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.
10 அகிமெலேக்கு அவனுக்காக யெகோவாவிடம் விசாரித்து, மன்றாடினான். அவனுக்கு உணவையும், பெலிஸ்தியனான கோலியாத்தின் வாளையும் கொடுத்தான்” என்றான்.
௧0இவன் அவனுக்காகக் யெகோவாவிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு ஆகாரம் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.
11 அப்பொழுது சவுல் ஆளனுப்பி அகிதூபின் மகனும், ஆசாரியனுமான அகிமெலேக்கையும், நோபிலிருந்த ஆசாரியர்களான அவன் தகப்பனின் முழுக் குடும்பத்தையும் அழைத்தான். அவர்கள் அனைவரும் அரசனிடம் வந்தார்கள்.
௧௧அப்பொழுது ராஜா: அகிதூபின் மகனான அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டார்களாகிய எல்லா ஆசாரியர்களையும் அழைத்தான்; அவர்கள் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.
12 அப்பொழுது சவுல் அவர்களிடம், “அகிதூபின் மகனே! நான் சொல்வதைக் கேள்” என்றான். அதற்கு அவன், “சொல்லும் ஆண்டவனே” என்றான்.
௧௨அப்பொழுது சவுல்: அகிதூபின் மகனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என்னுடைய ஆண்டவனே என்றான்.
13 அப்பொழுது சவுல் அவனிடம், “நீ ஈசாயின் மகனுடன் சேர்ந்து ஏன் எனக்கு விரோதமாய்ச் சதிசெய்தாய்? நீ அவனுக்கு அப்பமும், வாளும் கொடுத்து அவனுக்காக இறைவனிடமும் விசாரித்தாயே. அவன் எனக்கு விரோதமாகக் கலகம்செய்து, இன்று செய்வதுபோல என்னைப்பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறான்” என்று கேட்டான்.
௧௩அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாக சதிசெய்து, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய அவன் எனக்கு எதிராக எழும்பும்படி, நீ அவனுக்கு ரொட்டியும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
14 அதற்கு அகிமெலேக் அரசனிடம், “அரசனுடைய மருமகனும், உம்முடைய மெய்க்காவலர் தலைவனும், உம்முடைய வீட்டில் உயர்வாய் மதிக்கப்படுபவனுமான தாவீதைப்போல் உம்முடைய பணியாட்களுள் எல்லாம் உமக்கு உண்மையுள்ளவர் யார்?
௧௪அகிமெலேக் ராஜாவுக்குப் பதிலாக: உம்முடைய எல்லா ஊழியக்காரர்களிலும் தாவீதைப் போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்து வருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?
15 அவனுக்காக நான் இறைவனிடம் விசாரித்தது அன்றுதான் முதல் முறையோ? ஒருபோதும் இல்லை. உமது அடியவனையும், என் தகப்பனின் குடும்பத்தில் எவனையும் அரசன் குற்றம் சாட்டாதிருப்பாராக. ஏனெனில் இந்த விவரங்களைப்பற்றி உமது அடியவனுக்கு எதுவுமே தெரியாது” என்றான்.
௧௫இன்றையதினம் அவனுக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்யத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாவது என்னுடைய தகப்பன் வீட்டார்களில் எவன் மேலாவது குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்ததில்லை என்றான்.
16 அப்பொழுது சவுல், “அகிமெலேக்கே! நீ நிச்சயமாய் சாவாய். நீயும் உன் தகப்பன் வீட்டாரனைவரும் நிச்சயமாய் சாவீர்கள்” என்றான்.
௧௬ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன்னுடைய தகப்பன் வீட்டார்கள் அனைவரும் நிச்சயமாக சாகவேண்டும் என்றான்.
17 மேலும் அவன் தன் அருகில் நின்றவர்களிடம், “நீங்கள் யெகோவாவினுடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்” எனக் கட்டளையிட்டான். “ஏனெனில் அவர்கள் தாவீதுக்குத் துணையாயிருந்தார்கள். அவன் தப்பி ஓடிப்போனதை அறிந்திருந்தும் அவர்கள் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை” என்றான். ஆனால் அரசனின் அதிகாரிகளுக்கு யெகோவாவினுடைய ஆசாரியர்களைக் கொலை செய்யும்படி கையோங்க மனம்வரவில்லை.
௧௭பின்பு ராஜா தன்னருகில் நிற்கிற காவலர்களை பார்த்து: நீங்கள் போய், யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரர்களோ, யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை.
18 எனவே அரசன் தோவேக்கிடம், “நீ ஆசாரியர்களை கொன்றுவிடு” என்று கட்டளையிட்டான். உடனே ஏதோமியனான தோவேக்கு திரும்பி அவர்களை அன்றையதினம் வெட்டி வீழ்த்தினான். அவன் பஞ்சுநூல் ஏபோத்தை அணிந்திருந்த எண்பத்தைந்து ஆசாரியர்களை அன்றையதினம் கொன்றான்.
௧௮அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல் நூல் ஏபோத்தை அணிந்திருக்கும் 85 பேரை அன்றையதினம் கொன்றான்.
19 அத்துடன் ஆசாரியர்களின் பட்டணமான நோபிலுள்ள ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள் எல்லோரையும் வாளுக்கு இரையாக்கினான். அங்கிருந்த மாடுகள், கழுதைகள், செம்மறியாடுகள் உட்பட எல்லாவற்றையும்கூட வாளுக்கு இரையாக்கினான்.
௧௯ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், கைக் குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் கூர்மையான பட்டயத்தால் வெட்டிப்போட்டான்.
20 ஆனால் அகிதூபின் மகனாகிய அகிமெலேக்கின் மகன் அபியத்தார் தாவீதோடு சேரும்படி உயிர் தப்பி ஓடினான்.
௨0அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன்களில் அபியத்தார் என்னும் பெயருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் இடத்திற்கு ஓடிப்போய்,
21 சவுல் யெகோவாவின் ஆசாரியர்களைக் கொலைசெய்துவிட்டான் என்று தாவீதுக்கு அவன் சொன்னான்.
௨௧சவுல் யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.
22 அப்பொழுது தாவீது அபியத்தாரிடம், “ஏதோமியனான தோவேக்கு அன்று அங்கே இருந்தபோது, அவன் சவுலுக்கு அதை நிச்சயமாய் அறிவிப்பானென்று அன்றே எனக்குத் தெரியும். உன் தகப்பனின் முழுக் குடும்பத்தின் மரணத்துக்கும் நானே காரணம்.
௨௨அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்ததாலே, அவன் எப்படியாகிலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன்னுடைய தகப்பன் வீட்டார்களாகிய எல்லோருடைய மரணத்திற்கும் காரணம் நானே.
23 நீ பயப்படாமல் என்னோடேகூடத் தங்கியிரு, என்னைக் கொலைசெய்யத் தேடுபவனே உன்னையும் தேடுகிறான். எனவே என்னுடன் தங்குவது உனக்குப் பாதுகாப்பாயிருக்கும்” என்று சொன்னான்.
௨௩நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் உயிரை வாங்கத்தேடுகிறவனே உன்னுடைய உயிரையும் வாங்கத்தேடுகிறான்; நீ என்னுடைய ஆதரவிலே இரு என்றான்.