< 1 சாமுவேல் 17 >
1 பெலிஸ்தியர் யுத்தத்திற்காக படை திரட்டிக்கொண்டு யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒன்றுகூடினார்கள். சோக்கோவுக்கும், அசேக்காவுக்கும் நடுவேயுள்ள எபேஸ் தம்மீமிலே அவர்கள் முகாமிட்டார்கள்.
௧பெலிஸ்தர்கள் யுத்தம் செய்வதற்குத் தங்கள் இராணுவங்களைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒன்றாகக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே முகாமிட்டார்கள்.
2 சவுலும் இஸ்ரயேலரும் ஒன்றுகூடி ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு பெலிஸ்தியருக்கு எதிராகப் போரிடும்படி அணிவகுத்து நின்றார்கள்.
௨சவுலும் இஸ்ரவேல் மனிதர்களும் ஒன்றாகக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு, பெலிஸ்தர்களுக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
3 அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருக்கத்தக்கதாக பெலிஸ்தியர் ஒரு மலையிலும், இஸ்ரயேலர் மற்றொரு மலையிலும் நின்றார்கள்.
௩பெலிஸ்தர்கள் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர்கள் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.
4 அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் மாவீரன் பெலிஸ்தியரின் முகாமிலிருந்து வெளியே வந்து நின்றான். அவன் ஒன்பது அடிக்கும் அதிகமான உயரமுள்ளவனாய் இருந்தான்.
௪அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து புறப்பட்டு வந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாணுமாம்.
5 அவன் தலையில் வெண்கலக் கவசம் போட்டுக்கொண்டு, ஐயாயிரம் சேக்கல் நிறையுள்ள வெண்கல செதில்களாலான ஒரு போர் கவசமும் அணிந்திருந்தான்.
௫அவன் தன்னுடைய தலையின்மேல் வெண்கல கவசத்தைப் போட்டு, ஒரு போர்க்கவசம் அணிந்திருப்பான்; அந்தக் கவசத்தின் எடை ஐயாயிரம் சேக்கல் வெண்கலமாக இருக்கும்.
6 அவன் தன் கால்களில் வெண்கல கவசங்களையும் போட்டிருந்தான். அவனுடைய முதுகிலே ஒரு வெண்கல கேடகம் தொங்கிக் கொண்டிருந்தது.
௬அவன் தன்னுடைய கால்களிலே வெண்கலக் கவசத்தையும் தன்னுடைய தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் அணிந்திருப்பான்.
7 அவனுடைய ஈட்டியின் பிடி நெசவுதறி மரம்போல் இருந்தது. அதன் இரும்பு முனை அறுநூறு சேக்கல் எடையுள்ளதாயிருந்தது. கேடகம் பிடித்தவன் அவன் முன்னே நடந்தான்.
௭அவனுடைய ஈட்டியின் தாங்குக்கோல் நெசவுக்காரர்களின் தறிமரத்தின் அடர்த்தியாகவும் அவன் ஈட்டியின் முனை அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும்; கேடகம் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.
8 கோலியாத் இஸ்ரயேலின் போர்ப்படைக்கு முன் வந்துநின்று உரத்த சத்தமாய், “நீங்கள் ஏன் போருக்கு அணிவகுத்து நிற்கிறீர்கள்? நான் பெலிஸ்தியன் அல்லவா? நீங்கள் சவுலின் வேலையாட்கள் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்தெடுத்து என்னிடம் அனுப்புங்கள்.
௮அவன் வந்து நின்று, இஸ்ரவேல் இராணுவங்களைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தியன் அல்லவா? நீங்கள் சவுலின் ஊழியக்காரர்கள் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்து கொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும்.
9 அவன் என்னோடு போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்கள் அடிமைகளாவோம். நான் அவனோடு போர்செய்து அவனைக் கொன்றால் நீங்கள் எங்கள் அடிமைகளாய் எங்களுக்குப் பணிசெய்வீர்கள்” என்றான்.
௯அவன் என்னோடே யுத்தம்செய்யவும் என்னைக் கொல்லவும் திறமையுள்ளவனாக இருந்தால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாக இருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரர்களாக இருந்து, எங்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்று சொல்லி,
10 பின்னும் அந்தப் பெலிஸ்தியன், “நான் இன்று இஸ்ரயேல் படையைப் போருக்கு வரும்படி அறைகூவல் விடுக்கிறேன். ஒருவனை அனுப்புங்கள். நாங்கள் இருவரும் ஒருவரோடொருவர் சண்டையிடுவோம்” என்றான்.
௧0பின்னும் அந்தப் பெலிஸ்தியன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய இராணுவங்களுக்கு சவால் விட்டேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்செய்ய ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான்.
11 சவுலும் இஸ்ரயேல் மக்களும் அந்த பெலிஸ்தியனின் வார்த்தைகளைக் கேட்டபோது, சோர்வுற்று திகிலடைந்தார்கள்.
௧௧சவுலும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.
12 தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த, எப்பிராத்தியனான ஈசாயின் மகனாயிருந்தான். ஈசாய் என்பவனுக்கு எட்டு மகன்களிருந்தார்கள். அவன் சவுலின் காலத்தில் முதியவனும் வயது சென்றவனுமாயிருந்தான்.
௧௨தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானான ஈசாய் என்னும் பெயருள்ள எப்பிராத்திய மனிதனுடைய மகனாக இருந்தான்; ஈசாய்க்கு எட்டு மகன்கள் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற மக்களுக்குள்ளே வயது முதிர்ந்த கிழவனாக மதிக்கப்பட்டான்.
13 ஈசாயின் மூத்த மகன்கள் மூவரும் யுத்தம் செய்ய சவுலைப் பின்பற்றி சென்றிருந்தார்கள். முதல்பேறானவன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப், மூன்றாவது மகன் சம்மா என்பவர்கள் ஆவர்.
௧௩ஈசாயினுடைய மூன்று மூத்த மகன்கள் சவுலோடு யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று மகன்களில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாம் மகனுக்கு அபினதாப் என்றும், மூன்றாம் மகனுக்கு சம்மா என்றும் பெயர்.
14 தாவீது எல்லோரிலும் இளையவன். மூத்தவர்கள் மூன்றுபேரும் சவுலைப் பின்பற்றிப் போயிருந்தார்கள்.
௧௪தாவீது எல்லோருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடுப் போயிருந்தார்கள்.
15 ஆனால் தாவீது தன் தகப்பனின் செம்மறியாடுகளை மேய்ப்பதற்காக இடையிடையே சவுலிடமிருந்து பெத்லெகேமுக்குப் போவதும் வருவதுமாய் இருந்தான்.
௧௫தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப்போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.
16 அந்நாட்களில் நாற்பது நாட்களாக அந்தப் பெலிஸ்தியன், ஒவ்வொரு காலையும், மாலையும் இவ்வாறு முன்னேவந்து, அங்கு நின்று சவால் விட்டான்.
௧௬அந்தப் பெலிஸ்தியன் காலையிலும் மாலையிலும் 40 நாட்கள் வந்துவந்து நிற்பான்.
17 ஒரு நாள் ஈசாய் தன் மகன் தாவீதிடம், “இந்த எப்பா அளவு வறுத்த தானியத்தையும், இந்த பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கும் உன் சகோதரரிடம் விரைவாகப் போ.
௧௭ஈசாய் தன்னுடைய மகனான தாவீதை பார்த்து: உன்னுடைய சகோதரர்களுக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கிற உன்னுடைய சகோதரர்களிடத்தில் ஓட்டமாகப் போய்,
18 அத்துடன் இந்தப் பத்துப் பால்கட்டிகளையும் அவர்களுடைய படைத் தலைவனிடம் கொடுத்து, உன் சகோதரர் நலமாய் இருக்கிறார்களா என விசாரித்து வா.
௧௮இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர்கள் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான்.
19 அவர்கள் சவுலுடனும், இஸ்ரயேல் மனிதர்களுடனும் சேர்ந்து ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தியரோடு யுத்தம்செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
௧௯அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர்கள் எல்லோரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்துக்கொண்டிருந்தார்கள்.
20 தாவீது அதிகாலையில் எழுந்து மந்தையை ஒரு மேய்ப்பனின் பாதுகாப்பில் விட்டு, ஈசாய் தனக்கு அறிவுறுத்தியபடியே, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனான். படைகள் போர் ஒலி எழுப்பிக்கொண்டு யுத்த நிலைகளுக்கு அணிவகுத்துப் போகையில் அவன் முகாமுக்கு வந்துசேர்ந்தான்.
௨0தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; இராணுவங்கள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.
21 இஸ்ரயேலரும், பெலிஸ்தியரும் போருக்கு ஆயத்தமாக நேருக்குநேர் நின்றார்கள்.
௨௧இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்களும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.
22 தாவீது தான் கொண்டுவந்த பொருட்களை உணவுவிநியோக பொறுப்பாளனிடம் கொடுத்துவிட்டு, படை அணிவகுத்து நின்ற இடத்திற்கு ஓடித் தன் சகோதரரை வாழ்த்தினான்.
௨௨அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, பொருட்களை காக்கிறவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, இராணுவங்களுக்குள் ஓடி, தன் சகோதரர்களைப்பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.
23 அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் அந்த பெலிஸ்திய மாவீரன் தன் அணியிலிருந்து வெளியே வந்து வலிமையான அறைகூவலைச் சொன்னான். தாவீது அதைக் கேட்டான்.
௨௩அவன் இவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்திய வீரன் பெலிஸ்தர்களின் இராணுவங்களிலிருந்து எழும்பிவந்து நின்று, முன்பு சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.
24 இஸ்ரயேலர் அனைவரும் அந்த மனிதனைக் கண்டவுடன் மிகவும் பயந்து ஓடினார்கள்.
௨௪இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்த மனிதனைப் பார்க்கும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்திற்கு விலகி ஓடிப்போவார்கள்.
25 அவ்வேளையில் இஸ்ரயேலர், “இந்த மனிதன் தொடர்ந்து எப்படி வெளியே வருகிறான் என்று பார்த்தீர்களா? அவன் இஸ்ரயேலருக்கு அறைகூவல் விடுக்கவே வருகிறான். இவனைக் கொல்பவனுக்கு அரசன் பெரும் செல்வத்தைக் கொடுப்பான். தன் மகளையும் திருமணம் செய்துகொடுத்து இஸ்ரயேலில் அவனுடைய தகப்பனின் குடும்பத்திற்கு வரிவிலக்கையும் கொடுப்பான்” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
௨௫அந்தநேரத்தில் இஸ்ரவேலர்கள்: வந்து நிற்கிற அந்த மனிதனைப் பார்த்தீர்களா?, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்கிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய மகளைத் தந்து, அவனுடைய தகப்பன் வீட்டாரை இஸ்ரவேலிலே வரியில்லாமல் வாழச் செய்வார் என்றார்கள்.
26 அதைக்கேட்ட தாவீது அருகில் நின்ற வீரரிடம், “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலருக்கு நேரிட்ட அவமானத்தை நீக்குபவனுக்கு என்ன செய்யப்படும்? வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தியன் யார்?” என்று கேட்டான்.
௨௬அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான்.
27 அதற்கு அந்த வீரர்கள் அவனிடம், “அவனைக் கொல்பவனுக்கு இவ்விதமாகவே செய்யப்படும்” என்று சொல்லி, முன்பு சொன்னவற்றையே மறுபடியும் சொன்னார்கள்.
௨௭அதற்கு மக்கள்: அவனைக் கொல்கிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.
28 தாவீது அந்த வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை அவனுடைய மூத்த சகோதரனான எலியாப் கேட்டபோது கோபமடைந்து, “நீ ஏன் இங்கே வந்தாய்? அந்தக் கொஞ்ச செம்மறியாடுகளை காட்டிலே யார் பொறுப்பில் விட்டுவந்தாய்? நீ எவ்வளவு இறுமாப்புடையவன் என்றும், உன் இருதயம் எவ்வளவு கொடுமையானது என்றும் நான் அறிவேன். நீ யுத்தத்தைப் பார்ப்பதற்காகவே இங்கு வந்தாய்” என்றான்.
௨௮அந்த மனிதர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபம் கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யாரிடம் ஒப்படைத்தாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் பெருமையையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.
29 அதற்கு தாவீது, “இப்பொழுது நான் என்ன செய்துவிட்டேன்? நான் பேசவும் கூடாதா?” என்று கேட்டான்.
௨௯அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு காரணம் இல்லையா என்று சொல்லி,
30 பின்பு தாவீது அவனைவிட்டுச் சென்று வேறொருவனிடம் அதே கேள்வியைக் கேட்டான். முன் சொல்லப்பட்ட பதிலையே அவனும் சொன்னான்.
௩0அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்படியே கேட்டான்; மக்கள் முன்போலவே பதில் சொன்னார்கள்.
31 தாவீது சொன்னவற்றைக் கேட்டவர்கள் சவுலுக்கு அதை அறிவித்தார்கள். சவுல் தாவீதை அழைத்தான்.
௩௧தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலினிடம் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைத்தான்.
32 அப்பொழுது தாவீது சவுலிடம், “அந்தப் பெலிஸ்தியனான கோலியாத்தைக் கண்டு ஒருவரும் கலங்கவேண்டாம். உமது அடியவனாகிய நான் போய் அவனோடு சண்டையிடுவேன்” என்றான்.
௩௨தாவீது சவுலை பார்த்து: இவனால் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்செய்வேன் என்றான்.
33 அதற்கு சவுல், “அந்தப் பெலிஸ்தியனுக்கு எதிராய் போய், சண்டையிட உன்னால் முடியாது. நீயோ ஒரு சிறுவன். அவனோ இளமை முதல் போர் வீரனாய் இருக்கிறான்” என்றான்.
௩௩அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்செய்ய உன்னால் முடியாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான்.
34 அதற்கு தாவீது சவுலிடம், “உமது ஊழியன் என் தகப்பனின் செம்மறியாட்டு மந்தையை மேய்ப்பவன். ஒரு சிங்கமோ, கரடியோ வந்து மந்தையிலிலுள்ள ஒரு செம்மறியாட்டைப் பிடித்துக்கொண்டு போகும்போதெல்லாம்,
௩௪தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு முறை ஒரு சிங்கமும் ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.
35 நான் அவற்றைப் பின்தொடர்ந்து போய் அதை அடித்து அதன் வாய்க்குள் இருந்த செம்மறியாட்டை விடுவித்திருக்கிறேன். அது என்மேல் பாய்ந்தபோதும் அதன் தாடியைப் பிடித்து அடித்துக் கொன்றிருக்கிறேன்.
௩௫நான் அதைப் பின்தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடையைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன்.
36 இவ்வாறு உமது அடியவனாகிய நான் சிங்கத்தையும், கரடியையும் கொன்றிருக்கிறேன். இந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனும் அவற்றின் ஒன்றைப்போல் எனக்கிருப்பான். ஏனெனில் அவன் வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறான்” என்றான்.
௩௬அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான்.
37 மேலும் தாவீது, “சிங்கத்தின் பிடியிலிருந்தும், கரடியின் பிடியிலிருந்தும் என்னை விடுவித்த யெகோவா, இந்தப் பெலிஸ்தியனின் கையிலிருந்தும் என்னை விடுவிப்பார்” என்றான். எனவே சவுல், “நீ போ. யெகோவா உன்னோடுகூட இருப்பாராக” என்று தாவீதுக்குச் சொன்னான்.
௩௭பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த யெகோவா இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, யெகோவா உன்னுடன் இருப்பாராக என்றான்.
38 பின்பு சவுல் தன் இராணுவ சீருடைகளை தாவீதுக்கு உடுத்துவித்தான். தன் போர்கவசத்தையும், வெண்கல தலைக்கவசத்தையும் அணிவித்தான்.
௩௮சவுல் தாவீதுக்குத் தன் உடைகளை அணிவித்து வெண்கலமான ஒரு கவசத்தை அவனுடைய தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் அணிவித்தான்.
39 தாவீதோ சவுலின் வாளைத் தன் யுத்த உடையின்மேல் கட்டிக்கொண்டு, ஆயுதம் தரித்துப் பழக்கமில்லாதபடியால் சுத்தி நடக்க முயன்றான். அதனால் அவன் சவுலிடம், “இவற்றுடன் என்னால் போகமுடியாது. ஏனெனில் எனக்கு இவை பழக்கமில்லை” என்று சொல்லி அவற்றைக் கழற்றினான்.
௩௯அவனுடைய பட்டயத்தை தாவீது தன் உடைகளின்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகமுடியாது; இந்த பழக்கம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,
40 பின்பு தாவீது கையில் தன் மேய்ப்பனின் கோலை எடுத்துக்கொண்டு நீரோடையிலிருந்த ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து மேய்ப்பருக்குரிய பையில் போட்டு, கவணையும் கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனை அணுகினான்.
௪0தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பர்களுக்குரிய தன்னுடைய பையிலே போட்டு, தன்னுடைய கவணைத் தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனின் அருகில் போனான்.
41 அப்பொழுது அந்த பெலிஸ்தியன் தாவீதை நோக்கி வந்துகொண்டிருந்தான். கேடயம் பிடிப்பவன் அவனுக்கு முன்னால் நடந்து வந்தான்.
௪௧பெலிஸ்தனும் நடந்து, தாவீதின் அருகில் வந்தான்; கேடகத்தை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.
42 அந்தப் பெலிஸ்தியன் தாவீதை நன்றாகப் பார்த்து, அவன் ஒரு சிறுவன் மட்டுமே என்றும், சிவந்த உடலுடையவனும், அழகுள்ளவனும் என்று கண்டு அவனை அலட்சியம் செய்தான்.
௪௨பெலிஸ்தியன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் அழகுமான சிவந்த மேனியுள்ளவனுமாக இருந்தபடியால், அவனை இழிவாகக் கருதினான்.
43 அவன் தாவீதிடம், “நீ தடிகளுடன் என்னிடம் வருவதற்கு நான் என்ன ஒரு நாயா?” என்று கேட்டுத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லித் தாவீதைச் சபித்தான்.
௪௩பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன்னுடைய தெய்வங்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.
44 மேலும் அவன் தாவீதிடம், “என்னிடத்தில் இங்கே வா; உன் மாமிசத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும், வெளியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன்” என்றான்.
௪௪பின்னும் அந்தப் பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன்னுடைய மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான்.
45 அதற்குத் தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நானோ, நீ எதிர்த்த இஸ்ரயேல் படைகளின் இறைவனான சேனைகளின் யெகோவாவின் பெயரிலேயே உன்னை எதிர்த்து வருகிறேன்.
௪௫அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
46 இன்று யெகோவா உன்னை என் கையில் ஒப்படைப்பார். நான் உன்னை அடித்து வீழ்த்தி, உன் தலையை வெட்டிப்போடுவேன். இன்று பெலிஸ்திய படைகளின் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன். இதனால் இஸ்ரயேலில் ஒரு இறைவன் இருக்கிறாரென்பதை முழு உலகமும் அறிந்துகொள்ளும்.
௪௬இன்றையதினம் யெகோவா உன்னை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன்னுடைய தலையை உன்னை விட்டு எடுத்து, பெலிஸ்தர்களுடைய முகாமின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளுவார்கள்.
47 அத்துடன், யெகோவா வாளாலும், ஈட்டியாலும் விடுவிப்பவரல்ல என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டமும் அறிந்துகொள்வார்கள். இந்த யுத்தம் யெகோவாவினுடையது. எனவே உங்கள் அனைவரையும் அவர் எங்கள் கைகளில் ஒப்படைப்பார்” என்றான்.
௪௭யெகோவா பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த மக்கள்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் யெகோவாவுடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
48 அந்த பெலிஸ்தியன் அவனைத் தாக்குவதற்கு நெருங்கி வருகையில், தாவீது அவனை எதிர்கொள்ள போர்முனைக்கு விரைந்தோடினான்.
௪௮அப்பொழுது அந்தப் பெலிஸ்தியன் எழும்பி, தாவீதுக்கு எதிராக நெருங்கி வரும்போது, தாவீது விரைவாக அந்த இராணுவத்திற்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,
49 தாவீது தன் பைக்குள் தன் கையை விட்டு ஒரு கல்லை எடுத்து அதை கவணில் வைத்து, அதை வீசி பெலிஸ்தியனின் நெற்றியில் அடித்தான். அந்தக் கல் பெலிஸ்தியனின் நெற்றியில் பதிந்ததால், அவன் முகங்குப்புற நிலத்தில் விழுந்தான்.
௪௯தன்னுடைய கையை பையிலே விட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
50 இவ்வாறு தாவீது ஒரு கவணினாலும், ஒரு கல்லினாலும் அந்தப் பெலிஸ்தியனை வெற்றிகொண்டான். கையில் வாள் இல்லாமலே தாவீது பெலிஸ்தியனை அடித்து வீழ்த்தி அவனைக் கொன்றான்.
௫0இப்படியாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனைத் தோற்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லை.
51 உடனே தாவீது ஓடிப்போய் பெலிஸ்தியனின் மேலாக நின்றான். பெலிஸ்தியனின் வாளை உறையிலிருந்து உருவி எடுத்து, தான் கொன்றவனின் தலையை வெட்டிப்போட்டான். தங்கள் வீரன் இறந்ததைக் கண்ட பெலிஸ்தியர் திரும்பி ஓடினார்கள்.
௫௧எனவே, தாவீது பெலிஸ்தியனின் அருகே ஓடி அவன்மேல் நின்று, அவனுடைய பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக்கொன்று அதினாலே அவனுடைய தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர்கள் கண்டு, ஓடிப்போனார்கள்.
52 அப்பொழுது யூதா, இஸ்ரயேல் மனிதர்களும் திரண்டு ஆர்ப்பரித்து அவர்களைத் துரத்திச் சென்றார்கள். இவ்வாறு காத்தின் நுழைவாசல் வரையும், எக்ரோனின் வாசல்கள் வரையும் பெலிஸ்தியரைத் துரத்திச் சென்றார்கள். அவர்களின் இறந்தவர்களின் உடல்கள் சாராயீமின் வழியில் காத், எக்ரோன் மட்டும் பரவிக்கிடந்தன.
௫௨அப்பொழுது இஸ்ரவேலர்களும் யூதா மனிதர்களும் எழுந்து, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைவரை, எக்ரோனின் வாசல்கள்வரை, பெலிஸ்தர்களைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணம் வரை, எக்ரோன் பட்டணம் வரை, பெலிஸ்தர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
53 இஸ்ரயேலர் பெலிஸ்தியரைத் துரத்திச் சென்றபின், திரும்பிவந்து அவர்களுடைய முகாம்களைக் கொள்ளையிட்டார்கள்.
௫௩இஸ்ரவேல் மக்கள் பெலிஸ்தர்களை துரத்தின பின்பு, திரும்பி வந்து, அவர்களுடைய முகாம்களைக் கொள்ளையிட்டார்கள்.
54 பின்பு தாவீது பெலிஸ்தியனின் தலையை எடுத்துக்கொண்டு எருசலேமுக்கு வந்தான். ஆனால் அவனுடைய ஆயுதங்களைத் தன் சொந்த கூடாரத்தில் வைத்தான்.
௫௪தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன்னுடைய கூடாரத்திலே வைத்தான்.
55 தாவீது பெலிஸ்தியனுக்கு எதிராகப் புறப்பட்டு போகிறதை பார்த்துக்கொண்டிருந்த சவுல் தனது படைத்தலைவனான அப்னேரிடம், “இந்த வாலிபன் யாருடைய மகன்?” என்று கேட்டான். அதற்கு அப்னேர், “அரசே! நீர் வாழ்வது நிச்சயம்போல அவன் யாரென்று எனக்குத் தெரியாது” என்றான்.
௫௫தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போகிறதை சவுல் கண்டபோது, அவன் சேனாதிபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
56 அப்பொழுது அரசன், “அந்த வாலிபன் யாருடைய மகனென்று விசாரித்து அறிந்து வா” என்றான்.
௫௬அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளை யாருடைய மகன் என்று கேள் என்றான்.
57 தாவீது பெலிஸ்தியனைக் கொன்றபின் திரும்பி வந்தவுடனே அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்து வந்தான். தாவீதின் கையில் இன்னும் பெலிஸ்தியனின் தலை இருந்தது.
௫௭தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பும்போது, அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவனுடைய கையில் இருந்தது.
58 சவுல் அவனிடம், “வாலிபனே, நீ யாருடைய மகன்?” என்று கேட்டான். அதற்குத் தாவீது, “நான் பெத்லெகேம் ஊரானான உமது ஊழியன் ஈசாயின் மகன்” என்றான்.
௫௮அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாக இருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.