< 1 சாமுவேல் 15 >
1 சாமுயேல் சவுலிடம், “தம் மக்களான இஸ்ரயேலர்மேல் உன்னை அரசனாக அபிஷேகம் பண்ணும்படி யெகோவாவினால் அனுப்பப்பட்டவன் நானே. எனவே இப்பொழுது யெகோவாவிடமிருந்து வந்த செய்தியைக் கேள்.
௧பின்பு சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலர்களாகிய தம்முடைய மக்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்செய்வதற்குக் யெகோவா என்னை அனுப்பினாரே; இப்போதும் யெகோவாவுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:
2 சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களை அமலேக்கியர் வழிமறித்த செயலுக்காக நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன்.
௨சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
3 இப்பொழுது நீ போய் அமலேக்கியரைத் தாக்கி அவர்களின் உடைமைகள் அனைத்தையும் முழுவதும் அழித்துவிடு. அவர்களைத் தப்பவிடாதே. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், மாடுகள், செம்மறியாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடு” என்று சொன்னான்.
௩இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான்.
4 சவுல் மனிதர்களை அழைப்பித்து தெலாயிமிலே அவர்களைக் கணக்கெடுத்தான். அப்பொழுது இரண்டு இலட்சம் காலாட்படையினரும், யூதாவிலிருந்து பத்தாயிரம் மனிதரும் இருந்தார்கள்.
௪அப்பொழுது சவுல்: இதை மக்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களை கணக்கெடுத்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா மக்கள் பத்தாயிரம்பேருமாக இருந்தார்கள்.
5 சவுல் அமலேக்கியருடைய பட்டணத்துக்கு வந்து, அவர்களைத் தாக்குவதற்காகக் பள்ளத்தாக்கிலே பதுங்கியிருந்தான்.
௫சவுல் அமலேக்குடைய பட்டணம் வரை வந்து, பள்ளத்தாக்கிலே காத்திருந்தான்.
6 அப்பொழுது சவுல் கேனியரிடம், “நான் அமலேக்கியருடன் உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்களைவிட்டுப் போய்விடுங்கள். ஏனெனில் இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது நீங்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டினீர்கள்” என்றான். அதைக் கேட்டவுடன் கேனியர் அமலேக்கியரை விட்டு அப்பால் போய்விட்டார்கள்.
௬சவுல் கேனியரை பார்த்து: நான் அமலேக்கியர்களோடு உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் தயைசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர்கள் அமலேக்கியர்களின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.
7 பின்பு சவுல் ஆவிலா தொடங்கி எகிப்திற்குக் கிழக்கேயுள்ள சூர் வரைக்கும் இருந்த அமலேக்கியரைத் தாக்கினான்.
௭அப்பொழுது சவுல்: ஆவிலா துவங்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லை வரை இருந்த அமலேக்கியர்களை முறியடித்து,
8 அத்துடன் அமலேக்கியரின் அரசனான ஆகாகை உயிரோடே பிடித்தான். அங்குள்ள மக்கள் அனைவரையும் வாளால் அழித்தான்.
௮அமலேக்கியர்களின் ராஜாவான ஆகாகை உயிரோடு பிடித்தான்; மக்கள் அனைவரையும் கூர்மையான பட்டயத்தாலே படுகொலை செய்தான்.
9 ஆனால் சவுலும், இராணுவப் படையினரும் ஆகாக் அரசனையும், முதற்தரமான செம்மறியாடுகள், ஆடுமாடுகள், கொழுத்த கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள் ஆகிய தரமான எல்லாவற்றையும் தப்பவிட்டார்கள். அவற்றை முழுவதும் அழிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் தரமற்றதும், பலவீனமுமானவற்றை முழுவதும் அழித்தார்கள்.
௯சவுலும் மக்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் சிறந்தவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனமில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான அனைத்தையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள்.
10 அதன்பின் யெகோவாவினுடைய வார்த்தை சாமுயேலுக்கு வந்தது.
௧0அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
11 “சவுலை அரசனாக்கியதை முன்னிட்டு நான் மனம் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் என்னைவிட்டு விலகிவிட்டான். என் அறிவுறுத்தல்களை நிறைவேற்றவுமில்லை” என்றார். இது சாமுயேலுக்கு மனவேதனையைக் கொடுத்தது. இதனால் சாமுயேல் அன்றிரவு முழுவதும் யெகோவாவிடம் அழுதான்.
௧௧நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் வருந்தி, இரவு முழுவதும் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்.
12 மறுநாள் அதிகாலையில் சாமுயேல் எழுந்து சவுலைச் சந்திப்பதற்காகப் போனபோது, அங்குள்ளவர்கள் அவனிடம், “சவுல் கர்மேலுக்குப் போய்விட்டான். அங்கே அவன் தன்னைக் கனம்பண்ணும்படி ஒரு நினைவுச் சின்னத்தை நாட்டிவிட்டு பின் திரும்பி கில்காலுக்குப் போய்விட்டான்” என்றார்கள்.
௧௨மறுநாள் அதிகாலையில் சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு வெற்றிதூண் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.
13 அப்பொழுது சாமுயேல் சவுலிடம் போனபோது, சவுல் சாமுயேலிடம், “யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் யெகோவாவினுடைய அறிவுறுத்தல்களை நிறைவேற்றிவிட்டேன்” என்றான்.
௧௩சாமுவேல் சவுலினிடத்திற்கு போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
14 அதற்குச் சாமுயேல் அவனிடம், “அப்படியானால் என் காதுகளில் விழுகின்ற செம்மறியாடுகள் கத்தும் சத்தம் என்ன? நான் கேட்கின்ற ஆடுமாடுகள் கதறும் சத்தம் என்ன?” என்று கேட்டான்.
௧௪அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
15 அதற்கு சவுல், “அவற்றை அமலேக்கியரிடமிருந்து இராணுவவீரர்கள் கொண்டுவந்தார்கள். உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு பலி செலுத்துவதற்காக ஆடு மாடுகளில் சிறந்தவற்றைத் தப்பவிட்டார்கள். மற்றவைகளை நாங்கள் முற்றிலும் அழித்துவிட்டோம்” என்றான்.
௧௫அதற்குச் சவுல்: அமலேக்கியர்களிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; மக்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.
16 அப்பொழுது சாமுயேல், “உன் பேச்சை நிறுத்து. நேற்றிரவு யெகோவா எனக்குச் சொன்னவற்றை நான் உனக்குச் சொல்லுகிறேன்” என்றான். அதற்குச் சவுல், “சொல்லும்” என்றான்.
௧௬அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், யெகோவா இந்த இரவில் எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.
17 எனவே சாமுயேல் சவுலிடம், “நீ உன்னுடைய பார்வையில் சிறியவனாயிருந்தபோதும் நீ இஸ்ரயேல் கோத்திரங்களுக்குத் தலைவனாகவில்லையா? யெகோவாவே உன்னை இஸ்ரயேலருக்கு அரசனாக அபிஷேகம் பண்ணினார்.
௧௭அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராக இருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; யெகோவா உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தாரே.
18 யெகோவாவே உன்னை, ‘நீ போய்க் கொடியவர்களாகிய அமலேக்கியரை முழுவதும் அழித்துவிடு. அவர்களை முழுவதும் அழிக்கும்வரை அவர்களுடன் யுத்தம் செய்’ என்று உன்னை அனுப்பினார்.
௧௮இப்போதும் யெகோவா: நீ போய் அமலேக்கியர்களாகிய அந்தப் பாவிகளைக் கொன்று, அவர்களை முழுவதுமாக அழிக்கும்வரை, அவர்களோடு யுத்தம்செய் என்று சொல்லி, உம்மை அந்த வழியாக அனுப்பினார்.
19 ஆனால் நீ ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. நீ ஏன் அந்த கொள்ளைப்பொருட்களை பாய்ந்து எடுத்து யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்தாய்?” என்று கேட்டான்.
௧௯இப்படியிருக்க, நீர் யெகோவாவுடைய சொல்லைக்கேட்காமல், கொள்ளைப்பொருட்களின் மேல் ஆசைவைத்து, யெகோவாவுடைய பார்வைக்குப் தீங்கானதை செய்தது என்ன என்றான்.
20 அதற்குச் சவுல் சாமுயேலை நோக்கி, “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தேன். யெகோவா செய்யச் சொன்ன பணியைச் செய்து, அமலேக்கியரை முற்றிலும் அழித்து, அவர்கள் அரசனான ஆகாகையும் சிறைபிடித்து வந்தேன்.
௨0சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய சொல்லைக் கேட்டு, யெகோவா என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவான ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியர்களைக் கொலை செய்தேன்.
21 இராணுவவீரர்களோ இறைவனுக்கு அழிக்கப்பட ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளிலிருந்து சிறந்த செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு கில்காலிலே பலியிடுவதற்காகவே கொண்டுவந்தார்கள்” என்றான்.
௨௧மக்களோ உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குக் கில்காலிலே பலியிடுவதற்காக, கொள்ளைப்பொருட்களிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே முதன்மையானவகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.
22 அதற்கு சாமுயேல் பதிலாகச் சொன்னதாவது: “யெகோவா தனது குரலுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், தகன காணிக்கைகளிலும் பலிகளிலும் மகிழ்ச்சியடைவாரோ? கீழ்ப்படிதலே, பலி செலுத்துவதிலும் மேலானது; அவருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதே, ஆட்டுக்கடாக்களின் கொழுப்பிலும் மேலானது.
௨௨அதற்குச் சாமுவேல்: “யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைவிட, சர்வாங்க தகனங்களும் பலிகளும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைவிட கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் கொழுப்பைவிட செவிகொடுத்தலும் உத்தமம்.
23 கலகம் பண்ணுவது, குறிசொல்லும் பாவத்தைப் போன்றது. அகங்காரம், விக்கிரக வழிபாட்டைப்போல் தீமையானது. நீ யெகோவாவின் வார்த்தையைத் தள்ளிவிட்டபடியால், அவரும் நீ அரசனாய் இராதபடி உன்னைப் புறக்கணித்துவிட்டார்.”
௨௩கலகம்செய்தல் பில்லிசூனிய பாவத்திற்கும், பிடிவாதம்செய்தல் அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது; நீர் யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்ததாலே, அவர் உம்மை ராஜாவாக இல்லாதபடி புறக்கணித்துத் தள்ளினார்” என்றான்.
24 அப்பொழுது சவுல் சாமுயேலிடம், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் யெகோவாவினுடைய கட்டளையையும், உம்முடைய அறிவுறுத்தல்களையும் மீறினேன். நான் மக்களுக்குப் பயந்ததினால் அவர்களின் விருப்பத்திற்கு இடங்கொடுத்தேன்.
௨௪அப் பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதால் பாவம் செய்தேன்; நான் மக்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
25 எனவே இப்போது நான் யெகோவாவை வழிபடும்படி என் பாவத்தை மன்னித்து, என்னுடன் திரும்பிவரும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்” என்று கேட்டான்.
௨௫இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் யெகோவாவை தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான்.
26 அதற்கு சாமுயேல் சவுலிடம், “நான் உன்னோடு திரும்பிவரமாட்டேன். நீ யெகோவாவின் வார்த்தையை புறக்கணித்ததால், நீ இஸ்ரயேல்மீது அரசனாய் இராதபடி யெகோவாவும் உன்னைப் புறக்கணித்துவிட்டார்” என்றான்.
௨௬சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடு திரும்பிவருவதில்லை; யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடி, யெகோவா உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
27 பின்பு சாமுயேல் போகும்படி திரும்பவே, சவுல் அவன் மேலாடையின் ஓரத்தைப் பிடித்தபோது, அது கிழிந்து போயிற்று.
௨௭போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவனுடைய சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
28 அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “இன்றே யெகோவா இஸ்ரயேலின் அரசை உன்னிடமிருந்து கிழித்தெடுத்து, உன் அயலவர்களுக்குள் உன்னிலும் சிறந்த ஒருவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
௨௮அப்பொழுது சாமுவேல் அவனை பார்த்து: யெகோவா இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைவிட உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.
29 இஸ்ரயேலின் மகிமையான இறைவன் பொய் சொல்வதுமில்லை, மனம் மாறுவதுமில்லை. ஏனெனில் மனம் மாறுவதற்கு அவர் ஒரு மனிதனல்ல” என்று சொன்னான்.
௨௯இஸ்ரவேலின் பெலனாக இருப்பவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதிலிருந்து மனம் மாறுவதும் இல்லை; மனம் மாற அவர் மனிதன் அல்ல என்றான்.
30 அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். ஆயினும் என் மக்களின் முதியவர் முன்பாகவும், இஸ்ரயேலர் முன்பாகவும் என்னைத் தயவுசெய்து கனம்பண்ணும். நான் உம்முடைய இறைவனாகிய யெகோவாவை வழிபடும்படி என்னோடு திரும்பி வாரும்” என்று கேட்டான்.
௩0அதற்கு அவன்: நான் பாவம் செய்தேன்; இப்போது என் மக்களின் மூப்பர்களுக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனப்படுத்தி, நான் உம்முடைய தேவனாகிய யெகோவாவைத் தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான்.
31 எனவே சாமுயேல் திரும்பிச் சவுலுடன் சென்றான். சவுல் யெகோவாவை வழிபட்டான்.
௩௧அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் யெகோவாவைத் தொழுதுகொண்டான்.
32 அதன்பின் சாமுயேல் சவுலிடம், “அமலேக்கியரின் அரசனான ஆகாகை என்னிடம் கொண்டுவா” என்றான். “மரணத்தின் கசப்பு என்னைவிட்டு நீங்கி விட்டது” என்று எண்ணி தைரியத்துடன் ஆகாக் அங்கே வந்தான்.
௩௨பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவான ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு போனது நிச்சயம் என்றான்.
33 ஆனால் சாமுயேல் அவனிடம், “உன் வாள் பெண்களைப் பிள்ளையற்றவர்கள் ஆக்கிற்று; அப்படியே உன் தாயும் பெண்களுக்குள் பிள்ளையற்றவளாவாள்” என்று சொல்லி சாமுயேல் யெகோவாவுக்கு முன்பாக கில்காலிலே ஆகாகைக் கொன்றான்.
௩௩சாமுவேல்: உன் பட்டயம் பெண்களைப் பிள்ளை இல்லாதவர்களாக ஆக்கினதுபோல, பெண்களுக்குள்ளே உன் தாயும் பிள்ளை இல்லாதவள் ஆவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே யெகோவாவுக்கு முன்பாக ஆகாகைத் துண்டு துண்டாக வெட்டிப்போட்டான்.
34 பின்பு சாமுயேல் ராமாவுக்கு போனான். சவுல் தன் ஊரான கிபியாவிலுள்ள தன் வீட்டுக்குப் போனான்.
௩௪பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
35 சாமுயேல் சவுலுக்காகத் துக்கப்பட்டபோதிலும்கூட, தான் சாகும்வரை திரும்பவும் சவுலைச் சந்திப்பதற்கு போகவில்லை. இஸ்ரயேலருக்குமேல் அரசனாகத் தாம் சவுலை நியமித்ததின் நிமித்தம் யெகோவா மனம் வருந்தினார்.
௩௫சவுல் மரணமடையும் நாள்வரை சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் யெகோவா மன வருத்தப்பட்டதினால், சாமுவேல் சவுலுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.