< 1 சாமுவேல் 10 >
1 அப்பொழுது சாமுயேல், ஒரு தைலக்குப்பியை எடுத்து சவுலின் தலையின்மேல் ஊற்றி அவனை முத்தமிட்டு அவனிடம், “யெகோவா உன்னை தமது உரிமைச்சொத்தான மக்கள்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணவில்லையோ?
௧அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை முத்தமிட்டு: யெகோவா உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்செய்தார் அல்லவா?
2 நீ இங்கிருந்து போகும்போது பென்யமீன் நாட்டு எல்லையாகிய செல்சாகிலுள்ள ராகேலின் கல்லைறையருகே இரண்டு மனிதரைச் சந்திப்பாய். அவர்கள் உன்னிடம், ‘நீ தேடிப்போன கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது உன் தகப்பன் அவற்றைப்பற்றி யோசிக்காமல் உன்னைப்பற்றியே கவலைப்பட்டு, என் மகனைக் குறித்து நான் என்ன செய்யவேண்டும்? என கேட்டுக்கொண்டிருக்கிறார்’ என்பார்கள்.
௨நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையான செல்சாகில் ராகேலின் கல்லறைக்கு அருகில் இரண்டு மனிதர்களைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளைப்பற்றிய கவலையைவிட்டு, உங்களுக்காக கவலைப்பட்டு, என் மகனுக்காக என்ன செய்வேன்? என்கிறான் என்று சொல்வார்கள்.
3 “அதன்பின் நீ தாபோரிலுள்ள அந்த பெரிய மரத்தடிக்குப் போவாய். அப்பொழுது அங்கே பெத்தேலிலுள்ள இறைவனை வழிபடப்போகும் மூன்று மனிதர் உன்னைச் சந்திப்பார்கள். அவர்களில் ஒருவன் மூன்று வெள்ளாட்டுக் குட்டிகளையும், மற்றவன் மூன்று அப்பங்களையும், இன்னொருவன் ஒரு தோற்குடுவையில் திராட்சை இரசத்தையும் சுமந்து கொண்டுவருவார்கள்.
௩நீ அந்த இடத்தைவிட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியிலே சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனிதர்கள் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சை ரசமுள்ள ஒரு தோல்பையும் கொண்டுவந்து,
4 அவர்கள் உன்னை வாழ்த்தி இரண்டு அப்பங்களை உனக்குக் கொடுப்பார்கள். நீ அவற்றை அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாய்.
௪உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும்.
5 “அதன்பின் பெலிஸ்தியரின் இராணுவ தடைமுகாம் அமைந்துள்ள இறைவனின் மலையான கிபியாவுக்குப் போவாய். இவ்வாறு நீ அந்த பட்டணத்துக்கு அருகே வந்தவுடன் இறைவாக்கினரின் ஊர்வலம் ஒன்றை மேடையிலிருந்து இறங்கிவரும்போது சந்திப்பாய். அவர்களின் முன்பாக வீணை, தம்புரா, புல்லாங்குழல், யாழ் ஆகிய வாத்தியங்கள் இசைக்கப்படும். அவர்கள் இறைவாக்கு சொல்லிக்கொண்டு வருவார்கள்.
௫பின்பு பெலிஸ்தர்களின் முகாம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் வரும்போது, மேடையிலிருந்து இறங்கி வருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தைச் சந்திப்பாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும், மேளமும், நாகசுரமும், சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.
6 அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் வல்லமையுடன் உன்மேல் இறங்குவார். அப்பொழுது நீயும் அவர்களுடன் இறைவாக்கு உரைப்பாய். நீ ஒரு வித்தியாசமான மனிதனாய் மாறிவிடுவாய்.
௬அப்பொழுது யெகோவாவுடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடு தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனிதனாவாய்.
7 இந்த அடையாளங்களெல்லாம் நிறைவேறும்போது, நீ உன் கைக்குக் கிடைத்தது எதையும் செய். ஏனெனில் இறைவன் உன்னோடிருக்கிறார்.
௭இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, நேரத்திற்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடு இருக்கிறார்.
8 “நீ எனக்கு முன்னே கில்காலுக்குப்போ. தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிடுவதற்கு நான் நிச்சயமாக அங்கு வருவேன். நான் வந்து நீ செய்யவேண்டியவற்றை உனக்குச் சொல்லும்வரை ஏழு நாட்கள் எனக்காகக் காத்திரு” என்றான்.
௮நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படி, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்கும்வரை, ஏழு நாட்கள் காத்திரு என்றான்.
9 சவுல் சாமுயேலிடமிருந்து புறப்படும் நேரத்தில் இறைவன் அவன் இருதயத்தை மாற்றினார். அன்றே இந்த அடையாளங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டன.
௯அவன் சாமுவேலைவிட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறு இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நடந்தது.
10 அவர்கள் கிபியாவுக்கு வந்தபோது இறைவாக்கினரின் ஊர்வலம் ஒன்று அவனைச் சந்தித்தது. இறைவனின் ஆவியானவர் அவன்மேல் வல்லமையுடன் இறங்கினார். அவனும் அவர்களுடன் சேர்ந்து இறைவாக்கு உரைத்தான்.
௧0அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கியதால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.
11 சவுலை முன்பே அறிந்தவர்கள் அவன் இறைவாக்கினருடன் இறைவாக்கு சொல்வதைக் கண்டபோது அவர்கள், “கீஷின் மகனுக்கு நேர்ந்தது என்ன? சவுலும் இறைவாக்கினரில் ஒருவனா?” என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள்.
௧௧அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லோரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்கிறதைப் பார்த்தபோது: கீசின் மகனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டார்கள்.
12 அப்பொழுது அவ்விடத்தில் வாழ்ந்த ஒருவன், “இவர்களது தகப்பன் யார்?” என்று கேட்டான். எனவே, “சவுலும் இறைவாக்கினரின் கூட்டத்தில் ஒருவனா?” என்று கேட்கும் பழமொழி உருவாயிற்று.
௧௨அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியானது.
13 சவுல் இறைவாக்கு சொல்லி முடித்தபின் மேடைக்குப் போனான்.
௧௩அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.
14 அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன் சவுலிடமும் அவனின் வேலைக்காரனிடமும், “நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?” என்று கேட்டான். அதற்குச் சவுல், “கழுதைகளைத் தேடிப்போனோம். எங்கேயும் காணாததால் சாமுயேலிடம் போனோம்” என்றான்.
௧௪அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவனுடைய வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்கும் காணாததால், சாமுவேலிடத்திற்குப் போனோம் என்றான்.
15 அதற்கு சவுலின் சிறிய தகப்பனார், “சாமுயேல் உனக்குச் சொன்னவற்றை எனக்குச் சொல்” என்று கேட்டான்.
௧௫அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.
16 அதற்கு சவுல் அவனிடம், “கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் எங்களுக்குச் சொன்னார்” என்றான். ஆனால் சாமுயேல் தன்னை அரசனாக்குவதைப்பற்றிச் சொன்னதை அவன் தனது சிறிய தகப்பனுக்குச் சொல்லவில்லை.
௧௬சவுல் தன் சிறிய தகப்பனைப் பார்த்து: கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று எங்களுக்கு வெளிப்படையாக சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்ஜிய காரியத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை.
17 மிஸ்பாவிலே யெகோவாவிடத்தில் இஸ்ரயேல் மக்களை வரும்படி சாமுயேல் அழைத்தான்.
௧௭சாமுவேல் மக்களை மிஸ்பாவிலே யெகோவாவிடத்தில் வரவழைத்து,
18 அப்பொழுது சாமுயேல் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், நான் இஸ்ரயேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். நான் உங்களை எகிப்தின் அதிகாரத்திலிருந்தும், உங்களை ஒடுக்கிய எல்லா அரசுகளிலிருந்தும் விடுவித்தேன்.
௧௮இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்த, உங்களை எகிப்தியர்களின் கைக்கும், உங்களைத் துன்பப்படுத்தின எல்லா ராஜாக்களின் கைக்கும் மீட்டுவிட்டேன்.
19 நீங்களோ உங்களைப் பல பேரழிவுகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் தப்புவிக்கும் உங்கள் இறைவனை இப்பொழுது புறக்கணித்துவிட்டீர்கள். ‘எங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்தும்’ என்று சொன்னீர்கள். எனவே இப்பொழுது உங்கள் கோத்திரங்களின்படியேயும், வம்சங்களின்படியேயும் யெகோவாவுக்கு முன்பாக வந்து நில்லுங்கள்” என்றான்.
௧௯நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை மீட்டு இரட்சித்த உங்கள் தேவனை இந்த நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்களுக்கு ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக உங்கள் கோத்திரத்தின் படியும், வம்சங்களின்படியும் வந்து நில்லுங்கள் என்றான்.
20 இவ்வாறு சாமுயேல் இஸ்ரயேல் கோத்திரங்களையெல்லாம் கூட்டிச்சேர்த்தபின் பென்யமீன் கோத்திரன்மேல் சீட்டு விழுந்தது.
௨0சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் அருகில் வரச்செய்தபின்பு பென்யமீனின் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது.
21 அப்பொழுது சாமுயேல் பென்யமீன் கோத்திரத்தாரை குடும்பங்களின்படியே முன்னே வரும்படி அழைத்தான். அவர்களில் மாத்திரி வம்சத்தின்மேலும், கடைசியாக கீஷின் மகன் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது. ஆனால் அவர்கள் அவனைத் தேடியபோது, அவன் அங்கு காணப்படவில்லை.
௨௧அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படி அருகில் வரச்செய்தபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் மகனான சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் காணவில்லை.
22 எனவே அவர்கள் யெகோவாவிடம், “அந்த மனிதன் இங்கே வந்திருக்கிறானா?” என்று கேட்டார்கள். அதற்கு யெகோவா, “ஆம்; அவன் பொருள் வைக்கிற இடத்தில் ஒளிந்திருக்கிறான்” என்றார்.
௨௨அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் யெகோவாவிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் பொருட்கள் வைக்கிற இடத்திலே ஒளிந்துகொண்டிருக்கிறான் என்று யெகோவா சொன்னார்.
23 அவர்கள் ஓடிப்போய் அவனை வெளியே கொண்டுவந்தார்கள். அவன் மக்கள் மத்தியில் நின்றபோது அதிக உயரமுடையவனாயிருந்தான். மற்றவர்கள் எல்லாம் அவனுடைய தோளுக்குக் கீழேயே இருந்தனர்.
௨௩அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் மக்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தார்கள். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான்.
24 அப்பொழுது சாமுயேல் மக்களனைவரிடமும், “யெகோவா தெரிந்துகொண்டவனைக் காண்கிறீர்களா? எல்லா மக்களுக்குள்ளும் இவனைப்போல் ஒருவனுமில்லை” என்றான். இதைக் கேட்ட மக்கள், “அரசன் நீடூழி வாழ்க!” என்று சொல்லிச் சத்தமிட்டு ஆர்ப்பரித்தார்கள்.
௨௪அப்பொழுது சாமுவேல் எல்லா மக்களையும் பார்த்து: யெகோவா தெரிந்து கொண்டவனைப் பாருங்கள், எல்லா மக்களுக்குள்ளும் அவனுக்குச் சமமானவன் இல்லை என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.
25 சாமுயேல் அரச முறைமை ஒழுங்குவிதிகளை மக்களுக்கு விளங்கப்படுத்தினான். அவற்றை ஒரு புத்தகச்சுருளில் எழுதி, யெகோவா முன்னிலையில் பத்திரமாய் வைத்தான். அதன்பின் சாமுயேல் மக்கள் அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவிட்டான்.
௨௫சாமுவேல் ராஜ்ஜிய முறையை மக்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புத்தகத்தில் எழுதி, யெகோவாவுக்கு முன்பாக வைத்து, மக்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.
26 சவுலும் கிபியாவிலுள்ள தன் வீட்டுக்குப் போனான். அவனுடன் இறைவனால் தங்கள் இருதயத்தில் தொடப்பட்ட வீரமுள்ள மனிதரும் சேர்ந்துகொண்டார்கள்.
௨௬சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதைத் தூண்டினாரோ, அவர்களும் அவனோடு போனார்கள்.
27 அப்பொழுது சில கலகக்காரர், “இவன் நம்மை எப்படிக் காப்பாற்றுவான்” என்று சவுலை அசட்டை செய்து, அவனுக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவரவில்லை. ஆனால் சவுலோ மவுனமாயிருந்தான்.
௨௭ஆனாலும் சில பயனற்ற மக்கள்: இவனா நம்மைக் காப்பாற்றப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டுவராமல் அவனை அசட்டைசெய்தார்கள்; அவனோ காது கேட்காதவனைப்போல இருந்தான்.