< 1 பேதுரு 3 >
1 மனைவிகளே, அவ்வாறே நீங்களும் உங்கள் சொந்த கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது வசனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்தாலும், வசனமில்லாமலே அவர்களின் மனைவியின் நடத்தையினால் ஒருவேளை ஆதாயப்படுத்தக்கூடும்.
2 தூய்மையும் பயபக்தியுமுள்ள உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் காணட்டும்.
3 உங்கள் அழகு, வெளி அலங்காரத்தில் தங்கியிருக்கக் கூடாது. தலைமுடியைப் பின்னுதல், தங்க நகைகளை அணிதல், விலையுயர்ந்த உடைகளை உடுத்துதல் ஆகிய வெளியான அலங்காரத்தினாலல்ல.
4 அது உங்கள் உள்ளத்தின் அழகாகவே இருக்கவேண்டும். சாந்தமும் அமைதியும் உள்ள ஆவியே, அழிந்துபோகாத அழகைக் கொடுக்கிறது. அவ்வித அழகே இறைவனின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளது.
5 ஏனெனில் இறைவனில் நம்பிக்கையுள்ளவர்களாய், முற்காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பெண்கள் இவ்விதமாகவே தங்களை அலங்கரித்தார்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கணவர்களிடம் பணிவுடன் நடந்தார்கள்.
6 அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது எஜமான் என்று அழைத்தபோது, அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். நீங்களும் நன்மையானதைப் பயமில்லாமல் செய்தால் அவளுடைய மகள்களாய் இருப்பீர்கள்.
7 கணவர்களே, அதுபோலவே உங்கள் மனைவியுடன் சரியான புரிந்துகொள்ளுதலோடு, அக்கறையுடன் வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாயும் இறைவனின் கிருபையின் வாழ்வை உங்களுடனேகூட பெற்றுக்கொள்கிறவர்களாயும் இருப்பதனால், அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாட்டுகளுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது.
8 இறுதியாக, நீங்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் ஒருமனப்பட்டிருங்கள். இரக்கமுள்ளவர்களாயும், சகோதரரைப்போல் அன்பு காட்டுகிறவர்களாயும் இருங்கள். அனுதாபம் காட்டுங்கள். தாழ்மையுடையவர்களாய் இருங்கள்.
9 தீமைக்குப் பதிலாக தீமை செய்யவேண்டாம்; ஏளனத்திற்கு பதிலாக ஏளனம் செய்யவேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் நீங்கள் ஆசீர்வாதத்தை உரிமையாக்கவே அழைக்கப்பட்டீர்கள்.
10 ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கிறதாவது: “வாழ்வை நேசித்து, நல்ல நாட்களைக் காணவிரும்புகிறவன் எவனோ, அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி, தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுகளிலிருந்தும் காத்துக்கொள்ள வேண்டும்.
11 அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்யவேண்டும்; சமாதானத்தைத் தேடி, அதை நாடிச்செல்ல வேண்டும்.
12 ஏனெனில், கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கவனமாய் கேட்கின்றன. ஆனால் கர்த்தருடைய முகமோ தீமை செய்கிறவர்களுக்கு எதிராய் இருக்கிறது.”
13 நீங்கள் நன்மைசெய்ய ஆவலுள்ளவர்களாய் இருந்தால், யார் உங்களுக்குத் தீமை செய்வான்?
14 ஆனால் நீங்கள் நீதியானதைச் செய்வதனால் துன்பத்தை அனுபவித்தாலும், நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எனவே, “அவர்களுடைய பயமுறுத்துதலுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; கலக்கமடையவும் வேண்டாம்.”
15 ஆனால் உங்கள் இருதயங்களில் கிறிஸ்துவை கர்த்தராக ஏற்று, அவரை கனம்பண்ணுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான காரணம் என்னவென்று உங்களிடம் கேட்கிற ஒவ்வொருவருக்கும் பதில்சொல்வதற்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருங்கள்; ஆனால் தயவுடனும் மதிப்புடனுமே நீங்கள் பதில் சொல்லவேண்டும்.
16 நீங்கள் நல்மனசாட்சி உடையவர்களாயும் இருக்கவேண்டும்; அப்பொழுது கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் நல்ல நடத்தைக்கு எதிராக, தீய எண்ணத்துடன் பேசுகிறவர்கள், தங்கள் அவதூறுப் பேச்சைக்குறித்து வெட்கமடைவார்கள்.
17 தீமை செய்து துன்பப்படுவதைப் பார்க்கிலும், இறைவனுக்கு சித்தமானால் நன்மை செய்து துன்பப்படுவதே சிறந்தது.
18 ஏனெனில், கிறிஸ்து பாவங்களுக்காக ஒரே முறையாக இறந்தார். உங்களை இறைவனிடம் கொண்டுவரும்படியாக, நீதிமானான அவர், நீதியற்றவர்களுக்காக இறந்தார். அவரது உடல் கொல்லப்பட்டது, ஆனால் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார்.
19 அந்த ஆவியிலே அவர் போய், சிறையில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கம் செய்தார்.
20 அந்த ஆவிகளே வெகுகாலத்திற்கு முன்பு, நோவா பேழை செய்துகொண்டிருந்த நாட்களில், இறைவன் பொறுமையோடு இருந்தும் கீழ்ப்படியாதவைகள். அந்தப் பேழையில், எல்லாமாக எட்டுப் பேராகிய சிலரே தண்ணீரின் வழியாகக் காப்பாற்றப்பட்டார்கள்.
21 அதற்கு ஒப்பான இந்த திருமுழுக்கு உடலில் அழுக்கை நீக்குவதற்கு அல்ல, அது இறைவனைப் பற்றும் தெளிவான மனசாட்சியுடன் இருப்போம் என செய்துகொள்ளும் வாக்குறுதியாகும். இந்த திருமுழுக்கு இப்பொழுது இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினாலே, உங்களை இரட்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
22 கிறிஸ்து பரலோகத்திற்குப் போய், இறைவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார். இறைத்தூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்கு அடங்கியிருக்கின்றன.
A Dove is Sent Forth from the Ark