< 1 இராஜாக்கள் 1 >
1 தாவீது அரசன் முதிர்ந்த கிழவனாய் படுக்கையிலேயே கிடந்தான். அவனை துணிகளினால் போர்த்தியபோதும் அவனுக்குக் குளிர் தாங்கமுடியாதிருந்தது.
௧தாவீது ராஜா வயது முதிர்ந்தவனானபோது, துணிகளால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
2 எனவே அவனுடைய பணியாட்கள் அவனிடம், “அரசனைப் பராமரிப்பதற்கு ஒரு கன்னிப் பெண்ணைத் தேடுவோம். அவள் அரசனுக்கு உதவி வேலையைச் செய்யட்டும். அவள் எஜமானாகிய அரசன் சூடாக இருக்கும்படி அவருக்குப் பக்கத்திலேயே படுத்துக்கொள்ளட்டும்” என்றார்கள்.
௨அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: ராஜாவிற்கு முன்பாக நின்று, அவருக்குப் பணிவிடை செய்யவும், ராஜாவாகிய எங்களுடைய எஜமானுக்கு சூடு உண்டாக உம்முடைய மடியிலே படுத்துக்கொள்ளவும் கன்னியாகிய ஒரு இளம்பெண்ணை ராஜாவாகிய எங்கள் எஜமானுக்குத் தேடுவோம் என்று சொல்லி,
3 அதன்படியே அவர்கள் இஸ்ரயேல் நாடு முழுவதிலும் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் நாட்டைச் சேர்ந்த அபிஷாக் என்னும் அழகிய பெண்ணைக் கண்டு அரசனிடம் கொண்டுவந்தார்கள்.
௩இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவிடம் கொண்டுவந்தார்கள்.
4 அவள் அதிக அழகுள்ள பெண்ணாக இருந்தாள். அவள் அரசனைக் கவனித்து அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்துவந்தாள். ஆனால் அரசன் அவளுடன் உடலுறவு கொள்ளவில்லை.
௪அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்தாள்; அவள் ராஜாவிற்கு உதவியாக இருந்து அவனுக்குப் பணிவிடை செய்தாள்; ஆனாலும் ராஜா அவளுடன் உறவுகொள்ளவில்லை.
5 அந்த வேளையில் அரசன் தாவீதின் மகன் அதோனியா முன்வந்து, “நான் அரசனாவேன்” என்றான். அவனுடைய தாயின் பெயர் ஆகீத். எனவே அவன் தேர்களையும், குதிரைகளையும், ஐம்பது மனிதரையும் தனக்கு முன் செல்வதற்கு ஆயத்தப்படுத்தினான்.
௫ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரை வீரர்களையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது வீரர்களையும் சம்பாதித்தான்.
6 அவனுடைய தகப்பனான அரசன் தாவீது, “நீ ஏன் இவ்விதம் நடக்கவேண்டும்” என்று கேட்டு அவன் செயல்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை. அப்சலோமுக்குப் பின் பிறந்த இவன் மிகவும் அழகிய தோற்றமுள்ளவனாய் இருந்தான்.
௬அவனுடைய தகப்பன்: நீ ஏன் இப்படிச் செய்கிறாய் என்று அவனை ஒருபோதும் கண்டிக்கவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாக இருந்தான்; அப்சலோமுக்குப்பின்பு அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.
7 அதோனியா செருயாவின் மகன் யோவாபுடனும், ஆசாரியனான அபியத்தாருடனும் ஆலோசித்தான். அவர்கள் அவனுக்குத் தங்கள் ஆதரவைக் கொடுத்தார்கள்.
௭அவன் செருயாவின் மகனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனை செய்துவந்தான்; அவர்கள் அவனோடு இருந்து அவனுக்கு உதவி செய்துவந்தார்கள்.
8 ஆனால் ஆசாரியனான சாதோக்கும், யோய்தாவின் மகன் பெனாயாவும், இறைவாக்கினனான நாத்தானும், சீமேயியும், ரேயியும் தாவீதின் விசேஷ காவலனும் அதோனியாவுடன் சேரவில்லை.
௮ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் மகனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதுடன் இருக்கிற பலசாலிகளும், அதோனியாவுக்கு துணைபோகவில்லை.
9 அதன்பின் அதோனியா என்ரொகேலுக்கு அருகேயிருந்த சோகெலேத் என்னும் கல்லின்மேல் செம்மறியாடுகளையும், மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். மேலும் அவன் தன்னுடைய சகோதரரையும், அரசனின் மகன்களையும், யூதாவிலிருந்த அரச அதிகாரிகளான எல்லா மனிதர்களையும் அழைத்தான்.
௯அதோனியா என்ரோகேலுக்கு அருகிலுள்ள சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்து, ராஜாவின் மகன்களாகிய தன்னுடைய சகோதரர்கள் எல்லோரையும், ராஜாவின் வேலைக்காரர்களான யூதாவின் மனிதர்கள் அனைவரையும் அழைத்தான்.
10 ஆனால் இறைவாக்கினனான நாத்தானையோ, பெனாயாவையோ, விசேஷ காவலனையோ, தனது சகோதரன் சாலொமோனையோ அவன் அழைக்கவில்லை.
௧0தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், பெனாயாவையும், பலசாலிகளையும், தன்னுடைய சகோதரனாகிய சாலொமோனையும் அழைக்கவில்லை.
11 அப்பொழுது நாத்தான், சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் போய், “ஆகீத்தின் மகனாகிய அதோனியா எங்கள் தலைவனாகிய தாவீதுக்குத் தெரியாமலேயே அரசனாகியதை நீ கேள்விப்படவில்லையா?
௧௧அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய எஜமானாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் மகனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா?
12 இப்போது உனது உயிரையும், உனது மகன் சாலொமோனின் உயிரையும் காப்பாற்ற நீ விரும்பினால், நான் உனக்கு ஆலோசனை சொல்வேன்.
௧௨இப்போதும் உன்னுடைய உயிரையும் உன் மகனாகிய சாலொமோனின் உயிரையும் காப்பாற்றும்படி நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்.
13 நீ தாவீது அரசனிடம் போய், ‘என் தலைவனாகிய அரசே, அடியாளாகிய எனக்கு: “உமது மகன் சாலொமோனே உமக்குப்பின் உமது அரியணையிலிருந்து அரசாளுவான் என்று ஆணையிட்டு வாக்களித்தீரல்லவா”? அப்படியிருக்க ஏன் அதோனியா அரசனாகிறான்?’ என்று கேள்.
௧௩நீ தாவீது ராஜாவிடம் போய்: ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, எனக்குப்பின்பு உன்னுடைய மகனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள்.
14 அவ்வாறு நீ அரசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் வந்து நீ கூறியவற்றை உறுதிப்படுத்துவேன்” என்றான்.
௧௪நீ அங்கே ராஜாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, நானும் உனக்குப் பின்வந்து, உன்னுடைய வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.
15 அப்பொழுது பத்சேபாள் மிகவும் வயதுசென்றவனாயிருந்த அரசனின் அறைக்குள் அவனைப் பார்க்கச் சென்றாள். அங்கு சூனேம் ஊராளான அபிஷாக், அரசனுக்கு உதவி வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள்.
௧௫அப்படியே பத்சேபாள் ராஜாவின் அறைக்குள் சென்றாள்; ராஜா மிகவும் வயதானவனாக இருந்தான்; சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாக் ராஜாவிற்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
16 பத்சேபாள் அரசனின் முன் தலைகுனிந்து முழங்காற்படியிட்டாள். அரசன் அவளைப் பார்த்து, “உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டான்.
௧௬பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.
17 அதற்கு அவள், “என் தலைவனே, உமக்குப்பின் எனது மகனாகிய சாலொமோனே உமது அரியணையில் இருக்கும் அடுத்த அரசனாவான் என்று, உமது இறைவனாகிய யெகோவாவின் பேரில் உமது அடியவளாகிய எனக்கு நீர் வாக்குப்பண்ணினீரே.
௧௭அதற்கு அவள்: என்னுடைய எஜமானே, எனக்குப்பின்பு உன்னுடைய மகனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய யெகோவாவைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.
18 ஆனால் இப்போது அதோனியா அரசனாகிவிட்டான். என் தலைவனாகிய அரசனுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது.
௧௮இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என்னுடைய எஜமானாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை.
19 அவன் பெருந்தொகையான மாடுகளையும், கொழுத்த கன்றுகளையும், செம்மறியாடுகளையும் பலிசெலுத்தினான். அது மட்டுமல்லாமல் அரசனின் எல்லா மகன்களையும் ஆசாரியனான அபியத்தாரையும், இராணுவத் தளபதியான யோவாப்பையும் அழைத்திருந்தான். உமது அடியவனாகிய சாலொமோனையோ அழைக்கவில்லை.
௧௯அவன் மாடுகளையும் கொழுத்தக் கன்றுகளையும் ஆடுகளையும் மிகுதியாக அடித்து, ராஜாவின் மகன்கள் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை.
20 என் தலைவனாகிய அரசே, இப்பொழுது என் தலைவனாகிய அரசனின் அரியணையில் அவருக்குப் பின் யார் அரசனாய் இருப்பான் என்று அறிவதற்காக எல்லா இஸ்ரயேலருடைய கண்களும் உம் மேலேயே இருக்கின்றன.
௨0ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, ராஜாவாகிய என்னுடைய எஜமானுக்குப் பிறகு அவருடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பவன் யார் என்று தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரவேலர்கள் அனைவரின் கண்களும் உம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது.
21 இல்லாவிட்டால் என் தலைவனாகிய அரசன் உமது முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டபின்பு, நானும் என் மகன் சாலொமோனும் குற்றவாளிகளாக நடத்தப்படுவோம்” என்றாள்.
௨௧அறிவிக்காமற்போனால் ராஜாவாகிய என்னுடைய எஜமான் மரித்து முற்பிதாக்ககளைப் போல உலகத்தை விட்டு போனப் பின்பு, நானும் என்னுடைய மகனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாகக் கருதப்படுவோம் என்றாள்.
22 அவள் இவ்வாறு அரசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே இறைவாக்கினன் நாத்தான் அங்கு வந்தான்.
௨௨அவள் ராஜாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்தான்.
23 அவர்கள் அரசனிடம், “இறைவாக்கினன் நாத்தான் இங்கு வந்திருக்கிறான்” என்றார்கள். அப்பொழுது நாத்தான் அரசனிடம் வந்தபோது, அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கினான்.
௨௩தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவிற்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவிற்கு முன்பாக வந்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.
24 நாத்தான் அரசனிடம், “தலைவனாகிய அரசனே! உமக்குப்பின் அதோனியாவே அரசனாக உமது அரியணையில் இருப்பான் என்று எப்போதாகிலும் நீர் அறிவித்திருக்கிறீரோ?
௨௪நாத்தான்: ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, அதோனியா எனக்குப்பின்பு ராஜாவாகி, அவனே என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நீர் சொன்னது உண்டோ?
25 இன்று அவன் பெருந்தொகையான மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் அநேகம் செம்மறியாடுகளையும் பலி செலுத்தியிருக்கிறான். அவன் அரசனின் எல்லா மகன்களையும் இராணுவ தளபதிகளையும் ஆசாரியன் அபியத்தாரையும் அழைத்திருக்கிறான். அவர்கள் இப்பொழுது அவனுடன் சாப்பிட்டுக் குடித்து, ‘அரசனாகிய அதோனியா நீடூழி வாழவேண்டும்’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
௨௫அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும், ஆடுகளையும் மிகுதியாக அடித்து, ராஜாவின் மகன்கள் அனைவரையும் இராணுவத்தலைவர்களையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாக சாப்பிட்டுக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள்.
26 ஆனால் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியன் சாதோக்கையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும் உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.
௨௬ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் மகனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.
27 இது, எங்கள் அரசனாகிய தலைவன் தமக்குப்பின்பு யார் அரியணையில் இருக்கவேண்டும் என தமது பணியாட்களுக்கு அறிவிக்காமல் செய்த ஒரு காரியமோ?” என்றான்.
௨௭ராஜாவாகிய என்னுடைய எஜமானனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவன் இவன்தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காமலிருக்கும்போது, இந்தக் காரியம் ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.
28 அப்பொழுது தாவீது, “பத்சேபாளை இங்கு கூப்பிடுங்கள்” என்று கூறினான். அவள் உள்ளே வந்து அரசனுக்கு முன்பாக நின்றாள்.
௨௮அப்பொழுது தாவீது ராஜா மறுமொழியாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜாவின் சமுகத்தில் வந்து ராஜாவிற்கு முன்பாக நின்றாள்.
29 அப்பொழுது அரசன் தாவீது அவளிடம் ஆணையிட்டுச் சொன்னதாவது: “என்னை எல்லா ஆபத்திலிருந்தும் விடுவித்த யெகோவா இருப்பது நிச்சயமெனில்,
௨௯அப்பொழுது ராஜா: உன்னுடைய மகனாகிய சாலொமோன் எனக்குப்பின்பு அரசாண்டு, அவனே என்னுடைய இடத்தில் என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை,
30 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரால் எனக்குப்பின் உன் மகன் சாலொமோனே அரசனாவான் என்றும், அவனே என் அரியணையில் எனக்குப்பின் எனது இடத்தில் இருப்பான் என்றும் முன்பு உனக்கு ஆணையிட்டுச் சொன்னதை நிறைவேற்றுவேன் என்பதும் நிச்சயம்” என்று ஆணையிட்டான்.
௩0என்னுடைய ஆத்துமாவை எல்லாப் பிரச்சனையிலிருந்தும் விலக்கி மீட்ட யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்.
31 பின்பு பத்சேபாள் மறுபடியும் தரைமட்டும் குனிந்து அரசனை வணங்கிய பின், அரசனுக்கு முன் முழங்காற்படியிட்டு, “என் தலைவனாகிய அரசன் தாவீது நீடூழி வாழ்வாராக” என்றாள்.
௩௧அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என்னுடைய எஜமானாகிய தாவீது ராஜா என்றைக்கும் வாழ்க என்றாள்.
32 அப்பொழுது தாவீது, “ஆசாரியனான சாதோக்கையும், இறைவாக்கினனான நாத்தானையும், யோய்தாவின் மகன் பெனாயாவையும் அழையுங்கள்” என்றான். அவர்கள் உள்ளே வந்தபோது அவர்களிடம்,
௩௨பின்பு தாவீது ராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் மகன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்.
33 “என் மகன் சாலொமோனை என் சொந்தக் கோவேறு கழுதையில் ஏற்றி, என் ஊழியக்காரருடன் அவனை கீகோனுக்கு அழைத்துப் போங்கள்.
௩௩அவர்கள் ராஜாவிற்கு முன்பாக வந்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, என்னுடைய மகனாகிய சாலொமோனை என்னுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுபோங்கள்.
34 அங்கே ஆசாரியனான சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாக அபிஷேகம் பண்ணட்டும். அதன்பின்பு எக்காளங்களை ஊதி, ‘சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க’ என்று ஆர்ப்பரியுங்கள்.
௩௪அங்கே ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்யவேண்டும்; பின்பு எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.
35 பின்பு அவனோடு நீங்கள் வந்து அவனை அரசனாக எனது அரியணையில் அமர்த்துங்கள். அவன் எனது இடத்தில் அரசனாக வேண்டும். இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் நான் அவனை ஆளுநனாக நியமித்திருக்கிறேன்” என்றான்.
௩௫அதின் பின்பு அவன் நகர்வலம் வந்து, என்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என்னுடைய இடத்தில் ராஜாவாக இருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யெகோவா யூதாவின்மேலும் தலைவனாக இருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான்.
36 யோய்தாவின் மகனான பெனாயா அரசனிடம், “ஆமென், என் தலைவனாகிய அரசனின் இறைவனாகிய யெகோவாவும் அவ்வாறே அறிவிப்பாராக.
௩௬அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயா ராஜாவிற்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய தேவனாகிய யெகோவாவும் இப்படியே சொல்வாராக.
37 யெகோவா என் தலைவனாகிய அரசனோடு இருந்ததுபோல, சாலொமோனோடுங்கூட இருந்து, அவனுடைய அரியணையை என் தலைவனாகிய தாவீது அரசனின் அரியணையைப் பார்க்கிலும் இன்னும் பெரிதாக்குவாராக” என்றான்.
௩௭ராஜாவாகிய என்னுடைய எஜமானோடு எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீது ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய சிங்காசனத்தைவிட அவருடைய சிங்காசனத்தைப் பெரிதாக்குவாராக என்றான்.
38 அப்படியே ஆசாரியன் சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும், யோய்தாவின் மகனான பெனாயாவும், கிரேத்தியரும், பிலேத்தியரும் போய், சாலொமோனை அரசன் தாவீதின் கோவேறு கழுதையில் ஏற்றி கீகோனுக்கு அழைத்துப் போனார்கள்.
௩௮அப்படியே ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், யோய்தாவின் மகன் பெனாயாவும், கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும் போய், சாலொமோனைத் தாவீது ராஜாவினுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு நடத்திக்கொண்டு போனார்கள்.
39 ஆசாரியன் சாதோக் பரிசுத்த கூடாரத்திலிருந்த தைலக் கொம்பை எடுத்து சாலொமோனை அபிஷேகம் பண்ணினான். பின்பு அவர்கள் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா மக்களும், “சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க” என்று ஆர்ப்பரித்தார்கள்.
௩௯ஆசாரியனாகிய சாதோக்கு தைலக் கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்செய்தான்; அப்பொழுது எக்காளம் ஊதி, மக்களெல்லோரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.
40 அதன்பின் சாலொமோனுடன் எல்லா மக்களும் புல்லாங்குழலை ஊதிக்கொண்டு நிலம் அதிரத்தக்க பெரும் குதூகலத்துடன் அவனுக்குப்பின் சென்றார்கள்.
௪0பின்பு மக்களெல்லோரும் அவன் பின்னே போனார்கள்; மக்கள் நாதசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரும்படி மிகவும் பூரிப்பாகச் சந்தோஷித்தார்கள்.
41 அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகள் யாவரும் தங்கள் விருந்தை முடிக்கும் வேளையில் இதைக் கேட்டார்கள். எக்காள சத்தத்தைக் கேட்டதும் யோவாப், “பட்டணத்தில் கேட்கும் இந்தச் சத்தம் என்ன?” என்று கேட்டான்.
௪௧அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் சாப்பிட்டு முடித்தபோது, அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காள சத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான்.
42 இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆசாரியனான அபியத்தாரின் மகன் யோனத்தான் விரைவாக உள்ளே வந்துசேர்ந்தான். அதோனியா அவனிடம், “உள்ளே வா, உத்தமனான நீ ஒரு நல்ல செய்தியைத்தான் கொண்டுவருவாய்” என்றான்.
௪௨அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியனாகிய அபியத்தாரின் மகன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
43 அதற்கு யோனத்தான், “அப்படியல்ல” என்றான். “எங்கள் தலைவனான அரசன் தாவீது சாலொமோனை அரசனாக்கியிருக்கிறார்.
௪௩யோனத்தான் அதோனியாவுக்கு மறுமொழியாக: ஏது, தாவீது ராஜாவாகிய நம்முடைய எஜமான் சாலொமோனை ராஜாவாக்கினாரே.
44 அரசன் அவனை ஆசாரியனான சாதோக், இறைவாக்கினனான நாத்தான், யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பிலேத்தியர் ஆகியோருடன் அரசனின் கோவேறு கழுதையில் ஏற்றி அனுப்பியிருக்கிறார்.
௪௪ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் மகன் பெனாயாவையும், கிரேத்தியர்களையும் பிலேத்தியர்களையும் அவனோடு அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறு கழுதையின்மேல் ஏற்றினார்கள்.
45 ஆசாரியன் சாதோக்கும் இறைவாக்கினனான நாத்தானும் அவனை கீகோனில் அரசனாக அபிஷேகம் செய்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் போகிறார்கள். பட்டணத்தில் அச்சத்தம் கேட்கிறது. அந்த ஆர்ப்பரிப்புதான் நீர் கேட்கும் சத்தம் என்றான்.
௪௫ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்; நகரமெல்லாம் அதிரத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடு புறப்பட்டுப்போனார்கள்; நீங்கள் கேட்ட சத்தம் அதுதான்.
46 மேலும், சாலொமோன் அரியணையில் அமர்ந்திருக்கிறான்.
௪௬அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்திற்குரிய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறான்.
47 அத்துடன் அரசனின் அதிகாரிகள் அரசன் தாவீதிடம், ‘உமது இறைவன் சாலொமோனின் பெயரை உமது பெயரிலும் புகழுடையதாகவும், அவனுடைய அரியணையை உமது அரியணையிலும் பார்க்க பெரிதாகவும் மேன்மைப்படுத்துவாராக’ என்று சொல்லி தாவீது அரசனை வாழ்த்துகிறார்கள். அப்பொழுது அரசன் தன் படுக்கையிலிருந்து தலைகுனிந்து வழிபட்டார்.
௪௭ராஜாவின் ஊழியக்காரர்களும் தாவீது ராஜாவாகிய நம்முடைய எஜமானனை வாழ்த்த வந்து: தேவன் சாலொமோனின் பெயரை உம்முடைய பெயரைவிட பிரபலப்படுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைவிட பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார்.
48 மேலும் அரசன், ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. எனக்குப்பின் ஒருவனை எனது அரியணையில் அமர்த்தி, இன்று என் கண்கள் காணும்படியாகச் செய்தாரே’ என்று கூறினார்” என்றான்.
௪௮பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என்னுடைய சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.
49 இதைக் கேட்டதும் அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகளும் திடுக்கிட்டு எழுந்து சிதறி ஓடினார்கள்.
௪௯அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லோரும் அதிர்ந்து எழுந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள்.
50 அதோனியா சாலொமோனுக்கு பயந்து ஓடி பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நின்றான்.
௫0அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.
51 பின்பு அதோனியா, அரசன் சாலொமோனுக்குப் பயந்து பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான் என்றும், சாலொமோன் அரசன் வாளினால் தன்னைக் கொல்வதில்லை என இன்றைக்குத் தனக்குச் சத்தியம் பண்ணிக் கூறவேண்டும் என்றும் அதோனியா கேட்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.
௫௧இதோ, அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்குப் பயப்படுகிறான் என்றும், இதோ, அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.
52 அதற்கு சாலொமோன் மறுமொழியாக, “அவன் உத்தமனாக நடந்துகொண்டால், அவனுடைய தலைமயிரில் ஒன்றுகூட நிலத்தில் விழமாட்டாது. ஆனால் அவனிடம் தீமை காணப்பட்டால் அவன் சாவான்” என்று கூறினான்.
௫௨அப்பொழுது சாலொமோன்: அவன் தன்னை யோக்கியன் என்று காண்பித்தால் அவன் தலைமுடியில் ஒன்றும் தரையிலே விழாது; அவனிடம் தீமை காணப்பட்டால், அவன் சாகவேண்டும் என்றான்.
53 மேலும் அரசனாகிய சாலொமோன் அவனை பலிபீடத்திலிருந்து கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான். அதன்படி அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தனர். அவன் சாலொமோனின் முன்வந்து தலைகுனிந்து வணங்கினான். அப்பொழுது சாலொமோன் அவனைப் பார்த்து, “நீ உன் வீட்டிற்குப் போ” என்றான்.
௫௩அவனை பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன்னுடைய வீட்டிற்குப் போ என்றான்.