< 1 இராஜாக்கள் 3 >
1 சாலொமோன் எகிப்தின் அரசனான பார்வோனுடன் நட்புக்கொண்டு அவனுடைய மகளைத் திருமணம் செய்தான். அவன் தன் அரண்மனையையும் யெகோவாவின் ஆலயத்தையும், எருசலேம் பட்டணத்தைச்சுற்றி மதிலையும் கட்டிமுடிக்கும்வரை, அவளைத் தாவீதின் பட்டணத்திலேயே வைத்திருந்தான்.
௧சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடு சம்பந்தங்கலந்து, பார்வோனின் மகளைத் திருமணம் செய்து, தன்னுடைய அரண்மனையையும் யெகோவாவுடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டி முடியும்வரை அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.
2 ஆயினும், யெகோவாவின் பெயரில் இன்னும் ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்தபடியால், மக்கள் உயர்ந்த இடங்களிலேயே பலிசெலுத்தி வந்தார்கள்.
௨அந்த நாட்கள்வரை யெகோவாவுடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாமல் இருந்ததால், மக்கள் மேடைகளில் பலியிட்டு வந்தார்கள்.
3 சாலொமோன் தாவீதின் எல்லா நியமங்களின்படியேயும் நடந்து, தான் யெகோவாவிடம் அதிகம் அன்பு கொண்டிருந்ததைக் காண்பித்தான். ஆயினும் அவன் தொடர்ந்து இன்னமும் உயர்ந்த இடங்களில் பலியிட்டு, தூபங்காட்டி வந்தான்.
௩சாலொமோன் யெகோவாவை நேசித்து, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபம்காட்டி வந்தான்.
4 கிபியோன் மேடையே மிக முக்கியமானதாக விளங்கியதால் அரசன் அங்கேயே தனது பலிகளைச் செலுத்தப் போவான். அந்தப் பலிபீடத்தில் சாலொமோன் ஆயிரம் தகன காணிக்கைகளைச் செலுத்தினான்.
௪அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாக இருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
5 கிபியோனில் இரவு நேரத்தில் யெகோவா சாலொமோனுக்குக் கனவில் தோன்றி, இறைவன் அவனிடம், “உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள்” என்றார்.
௫கிபியோனிலே யெகோவா சாலொமோனுக்கு இரவில் கனவில் தரிசனமாகி: நீ விரும்புவதை என்னிடம் கேள் என்று தேவன் சொன்னார்.
6 அதற்குச் சாலொமோன் பதிலாக, “உமது அடியவனாகிய எனது தகப்பன் தாவீது உமக்கு இருதயத்தில் உண்மையும், நியாயமும், நேர்மையும் உள்ளவராக இருந்தபடியால், நீர் என் தகப்பனுக்கு மிகுந்த தயவு காண்பித்திருந்தீர். தொடர்ந்து அவருக்கு மிகுந்த தயவை காண்பித்து, இந்த நாளில் அவரின் அரியணையிலிருப்பதற்கு ஒரு மகனையும் கொடுத்திருக்கிறீர்.
௬அதற்கு சாலொமோன்: என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் செம்மையான இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்த நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ஒரு மகனை அவருக்குத் தந்தீர்.
7 “இப்பொழுதும் என் இறைவனாகிய யெகோவாவே, என் தகப்பனாகிய தாவீதின் இடத்தில் அடியவனாகிய என்னை அரசனாக்கினீர். நானோ என் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கு அறியாத ஒரு சிறுபிள்ளையாய் இருக்கிறேன்.
௭இப்போதும் என்னுடைய தேவனாகிய யெகோவாவே, தேவரீர் உமது அடியேனை என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்குவரத்து அறியாத சிறுபிள்ளையாக இருக்கிறேன்.
8 உமது அடியவனான நான் உம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட எண்ணுக்கடங்காத உமது மேன்மையான மக்களின் நடுவில் இருக்கிறேன்.
௮நீர் தெரிந்துகொண்டதும் மிகுதியான எண்ணிக்கைக்கு அடங்காததும் கணக்கில் சேராததுமான திரளான மக்களாகிய உமது மக்களின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.
9 ஆகவே இந்த உமது மக்களை ஆளவும், சரி எது, பிழை எது என்று வேறுபடுத்தி அறியவும், நிதானிக்கும் இருதயத்தை உமது அடியானுக்குத் தாரும். ஏனெனில் இந்த பெருந்திரளான உமது மக்களை ஆட்சிசெய்ய யாரால் முடியும்?” என்றான்.
௯ஆகையால் உமது மக்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; மிகுதியாக இருக்கிற உமது மக்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
10 சாலொமோன் இதையே கேட்டபடியால், அவனுடைய பதிலில் யெகோவா சந்தோஷப்பட்டார்.
௧0சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்குப் பிரியமான விண்ணப்பமாக இருந்தது.
11 ஆகவே இறைவன் அவனிடம், “நீ உனக்கு நீண்ட ஆயுளையோ, செல்வத்தையோ, என் பகைவர் சாகவேண்டும் என்றோ கேளாமல், நீதியாய் நிர்வாகம் செய்வதற்காக நிதானிக்கும் அறிவைக் கேட்டாய்.
௧௧ஆகையால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேட்காமலும், ஐசுவரியத்தைக் கேட்காமலும், உன்னுடைய எதிரிகளின் உயிரைக் கேட்காமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிப்பதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு கேட்டுக்கொண்டதால்,
12 அதனால் நீ கேட்டதை நான் உனக்குச் செய்வேன். நான் உனக்கு ஞானமும், நிதானிக்கும் அறிவுமுள்ள இருதயத்தைத் தருவேன்; இதனால் உன்னைப்போன்ற ஒருவன் உனக்கு முன்னும் இருந்ததில்லை. உனக்குப் பின்னும் இருக்கமாட்டான்.
௧௨உன்னுடைய வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்கு இணையானவன் உனக்குமுன்பு இருந்ததுமில்லை, உனக்கு இணையானவன் உனக்குப்பின்பு எழும்புவதுமில்லை.
13 இதைவிட இதற்கு மேலாக நீ கேட்காத செல்வத்தையும், கனத்தையும் தருவேன். இதனால் உனது வாழ்நாளில் அரசர்கள் மத்தியில் உனக்கு நிகராக யாருமே இருக்கமாட்டார்கள்.
௧௩இதுவுமில்லாமல், நீ கேட்காத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன்னுடைய நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்கு இணையானவன் இருப்பதில்லை.
14 உனது தகப்பனாகிய தாவீது செய்ததுபோல, என்னுடைய வழிகளில் நடந்து, என் விதிமுறைகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தால், உனக்கு நீண்ட ஆயுளைத் தருவேன்” என்றார்.
௧௪உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியமங்களையும் கைக்கொண்டு, என்னுடைய வழிகளில் நடந்தால், உன்னுடைய நாட்களையும் நீடித்திருக்கச்செய்வேன் என்றார்.
15 சாலொமோன் விழித்தெழுந்து தான் கண்டது ஒரு கனவு என்று உணர்ந்தான். அவன் எருசலேமுக்குத் திரும்பிவந்து, அங்கே யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னின்று தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிட்டான். அதன்பின் தன் அரண்மனை அலுவலர்களுக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தான்.
௧௫சாலொமோனுக்கு தூக்கம் தெளிந்தபோது, அது கனவு என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளை செலுத்தி, சமாதானபலிகளைச் செலுத்தி, தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோருக்கும் விருந்தளித்தான்.
16 சில நாட்களின்பின் இரண்டு வேசிகள் அரசனுக்கு முன்வந்து நின்றார்கள்.
௧௬அப்பொழுது வேசிகளான இரண்டு பெண்கள் ராஜாவிடம் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
17 அவர்களில் ஒருத்தி, “என் ஆண்டவனே, இந்தப் பெண்ணும், நானும் ஒரே வீட்டில் வசிக்கிறோம். அவள் என்னோடு இருக்கையில் எனக்கு ஒரு பிள்ளை பிறந்தது.
௧௭அவர்களில் ஒருத்தி: என்னுடைய எஜமானனே, நானும் இந்த பெண்ணும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடு வீட்டிலிருக்கும்போது ஆண்பிள்ளை பெற்றேன்.
18 எனது பிள்ளை பிறந்து மூன்றாம் நாளில் இந்தப் பெண்ணுக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. நாங்கள் தனிமையாகவே இருந்தோம். எங்கள் இருவரையும் தவிர வீட்டில் எவருமே இருக்கவில்லை.
௧௮நான் பிள்ளை பெற்ற மூன்றாம் நாளிலே, இந்த பெண்ணும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒன்றாக இருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை.
19 “இரவு நேரத்தில், இவள் தன் பிள்ளையின்மேல் புரண்டு படுத்ததினால் இவளின் மகன் இறந்துபோனான்.
௧௯இரவு தூக்கத்திலே இந்த பெண் தன்னுடைய பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததால் அது செத்துப்போனது.
20 எனவே இவள் நள்ளிரவில் எழுந்து உமது அடியாளாகிய நான் நித்திரையிலிருந்தபோது, என் பக்கத்தில் இருந்த என் மகனை எடுத்துக்கொண்டாள். அவள் அவனைத் தன் மார்பில் போட்டுக்கொண்டு, தன்னுடைய இறந்த மகனை என் மார்பில் போட்டுவிட்டாள்.
௨0அப்பொழுது, உமது அடியாள் தூங்கும்போது, இவள் நடுஇரவில் எழுந்து, என்னுடைய பக்கத்திலே கிடக்கிற என்னுடைய பிள்ளையை எடுத்து, தன்னுடைய மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன்னுடைய பிள்ளையை எடுத்து, என்னுடைய மார்பிலே கிடத்திவிட்டாள்.
21 அதிகாலையில் என் மகனுக்குப் பால் கொடுக்க நான் எழுந்தபோது, அவன் இறந்து கிடந்தான். காலை வெளிச்சத்தில் அவனை நான் கூர்ந்து பார்த்தபோது, அது நான் பெற்ற என் மகனல்ல என்று கண்டேன்” என்று கூறினாள்.
௨௧என்னுடைய பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலையில் நான் எழுந்தபோது, அது இறந்து கிடந்தது; பொழுது விடிந்தபின்பு நான் அதை உற்றுப்பார்க்கும்போது, அது நான் பெற்ற பிள்ளை இல்லை என்று கண்டேன் என்றாள்.
22 அப்பொழுது மற்றப் பெண் அவளைப் பார்த்து, “இல்லை; உயிரோடிருப்பவன் என்னுடையவன். இறந்தவன் உன்னுடையவன்” என்றாள். ஆனால் முதற்பெண்ணோ வற்புறுத்தி, “இல்லை இறந்தவனே உன்னுடைய மகன்; உயிரோடிருப்பவன் என் மகன்” என அரசனின் முன்பாக வாக்குவாதம் செய்தாள்.
௨௨அதற்கு மற்ற பெண்: அப்படியல்ல, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை, செத்தது உன்னுடைய பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன்னுடைய பிள்ளை, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவிற்கு முன்பாக வாதாடினார்கள்.
23 அப்பொழுது அரசன், “இவள், ‘என் மகனே உயிரோடிருக்கிறான்; உன் மகன் இறந்துவிட்டான்’ என்கிறாள். மற்றவளோ, ‘இல்லை, உன் மகன் இறந்துவிட்டான்; என் மகனே உயிரோடிருக்கிறான்’ என்கிறாள்.”
௨௩அப்பொழுது ராஜா: உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை, செத்தது உன்னுடைய பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன்னுடைய பிள்ளை, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,
24 ஆகவே, “ஒரு வாளை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். எனவே அவர்கள் அரசனுக்கு ஒரு வாளைக் கொண்டுவந்தார்கள்.
௨௪ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவிடம் கொண்டுவந்தார்கள்.
25 அப்பொழுது அரசன், “உயிரோடிருக்கும் பிள்ளையை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை ஒருத்திக்கும், மறு பாதியை மற்றவளுக்கும் கொடுங்கள்” எனக் கட்டளையிட்டான்.
௨௫ராஜா உயிரோடு இருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான்.
26 அப்பொழுது உயிரோடிருக்கும் பிள்ளையின் சொந்தத் தாய் தன் பிள்ளைக்காக மிகவும் இரக்கப்பட்டு, அரசனை நோக்கி, “ஆண்டவனே! தயவுசெய்து உயிரோடிருக்கும் பிள்ளையை அவளுக்கே கொடுங்கள். அவனைக் கொல்லவேண்டாம்” என்றாள். ஆனால் மற்றவளோவென்றால், “அந்தப் பிள்ளை எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம். அவனை இரண்டாக வெட்டும்” என்றாள்.
௨௬அப்பொழுது உயிரோடு இருக்கிற பிள்ளையின் தாய், தன்னுடைய பிள்ளைக்காக அவள் இருதயம் துடித்ததால், ராஜாவை நோக்கி: ஐயோ, என்னுடைய எஜமானனே, உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.
27 அப்பொழுது அரசன் இந்தத் தீர்ப்பை வழங்கினான்: “உயிரோடிருக்கும் பிள்ளையை முதலாவது வந்த பெண்ணுக்கே கொடுங்கள். அவனைக் கொல்லவேண்டாம். அவளே அவனின் சொந்தத் தாய்” என்றான்.
௨௭அப்பொழுது ராஜா உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான்.
28 அரசன் கொடுத்த தீர்ப்பை இஸ்ரயேலர் அனைவரும் கேட்டபோது, அவனை உயர்வாய் மதித்தார்கள். நீதியாய் நிர்வாகம் செய்ய இறைவனிடமிருந்து வந்த அவனுடைய ஞானத்தைக் கண்டார்கள்.
௨௮ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிப்பதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவிற்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.