< 1 இராஜாக்கள் 22 >
1 மூன்று வருடங்களாக சீரியாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையில் யுத்தம் இருக்கவில்லை.
௧சீரியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மூன்று வருடங்கள் யுத்தமில்லாமல் இருந்தது.
2 ஆனால் மூன்றாம் வருடத்தில் யூதாவின் அரசன் யோசபாத் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைக் காண்பதற்காகப் போனான்.
௨மூன்றாம் வருடத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவிடம் போயிருக்கும்போது,
3 இஸ்ரயேலின் அரசன் தன் அதிகாரிகளைப் பார்த்து, “கீலேயாத்திலுள்ள ராமோத் எங்களுக்குரியது என்றும், அதைச் சீரியரிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் இன்னும் ஒன்றுமே செய்யாதிருக்கிறோம் என்றும் உங்களுக்குத் தெரியாதா?” என்றான்.
௩இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,
4 எனவே அவன் யோசபாத்திடம், “நீ கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு என்னுடன் வருவாயா?” என்று கேட்டான். அதற்கு யோசபாத் இஸ்ரயேலின் அரசனிடம், “உம்மைப் போலவே நானும் ஆயத்தமாயிருக்கிறேன். என்னுடைய மக்கள் உம்முடைய மக்களைப் போலவும், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகளைப் போலவும் இருக்கின்றனர்” என்றான்.
௪யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்ய என்னோடு கூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
5 ஆனால், மேலும் யோசபாத் இஸ்ரயேல் அரசனிடம்: “முதலில் யெகோவாவின் ஆலோசனையைத் தேடுங்கள்” என்று சொன்னான்.
௫பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
6 எனவே இஸ்ரயேலின் அரசன் இறைவாக்கினர்களான நானூறு மனிதரை ஒன்றுதிரட்டி அவர்களிடம், “நாம் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்குப் போகலாமா? அல்லது வேண்டாமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நீர் போகலாம். யெகோவா அதை அரசனாகிய உமது கையில் கொடுப்பார்” என பதிலளித்தார்கள்.
௬அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப்போகலாமா, போக வேண்டாமா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
7 ஆனால் யோசபாத், “நாம் விசாரிப்பதற்கு யெகோவாவின் இறைவாக்கினன் யாராவது இங்கே இல்லையா?” என்று கேட்டான்.
௭பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிவதற்கு இவர்களைத் தவிர யெகோவாவுடைய தீர்க்கதரிசி வேறே யாராவது இங்கே இல்லையா என்று கேட்டான்.
8 அதற்கு இஸ்ரயேலின் அரசன் ஆகாப் யோசபாத்திடம், “யெகோவாவிடம் விசாரிக்கும்படி இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில் அவன் எப்போதும் என்னைப்பற்றி நன்மையாக அல்ல தீமையாகவே இறைவாக்கு சொல்லுவான். இம்லாவின் மகன் மிகாயாவே அவன்” என்றான். அப்பொழுது யோசபாத், “அரசனாகிய நீர் அவ்விதமாகக் கூறக்கூடாது” என்றான்.
௮அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: யெகோவாவிடம் விசாரித்து அறிவதற்கு இம்லாவின் மகனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.
9 எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் தனது அதிகாரிகளில் ஒருவனை அழைத்து, “இம்லாவின் மகன் மிகாயாவை உடனடியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான்.
௯அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா அதிகாரிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் மகனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.
10 இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச அங்கி அணிந்தவர்களாய் சமாரியாவின் வாசலில், சூடடிக்கும் களத்திலிருந்த அரியணையில் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள்முன் எல்லா இறைவாக்கினரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்தனர்.
௧0இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் வாசலுக்கு முன்பாக இருக்கும் திறந்த வெளியிலே ராஜஉடை அணிந்துகொண்டவர்களாக, அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; எல்லாத் தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
11 அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா இரும்பினால் கொம்புகளைச் செய்து அவர்களைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: இந்த இரும்புக் கொம்புகளால் சீரியர் முழுவதுமாக அழியும்வரைக்கும் அவர்களைக் குத்திக் கொல்வீர்கள்” என்றான்.
௧௧கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களைத் தள்ளி அழித்துப்போடுவீர் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
12 மற்ற எல்லா இறைவாக்கினர்களும் அதையே வாக்காக உரைத்து, “கீலேயாத்திலுள்ள ராமோத்தை தாக்கி வெற்றிகொள்ளுங்கள். ஏனெனில் யெகோவா அதை அரசராகிய உமது கையில் தருவார்” என்றார்கள்.
௧௨எல்லாத் தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் நீர் போம், உமக்கு வாய்க்கும்; யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
13 மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம், “எல்லா இறைவாக்கினர்களும் ஒரேவிதமாகவே வாக்கு உரைத்து அரசனுக்கு வெற்றியையே அறிவிக்கிறார்கள். நீயும் அப்படியே பேசி அரசனுக்குச் சாதகமானதையே சொல்” என்றான்.
௧௩மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் எல்லாம் ராஜாவிற்கு நன்மையாக இருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்.
14 ஆனால் மிகாயா அவனிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் எனது இறைவன் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன் என்பதும் நிச்சயம்” என்றான்.
௧௪அதற்கு மிகாயா: யெகோவா என்னிடம் சொல்வதையே சொல்லுவேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
15 அவன் வந்து சேர்ந்தபோது ஆகாப் அரசன் அவனிடம், “மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்கு போகலாமா அல்லது வேண்டாமா?” என்று கேட்டான். மிகாயா அதற்குப் பதிலாக, “போய்த் தாக்கி வெற்றிபெறுங்கள்; யெகோவா அரசனாகிய உம்முடைய கையில் அதைக் கொடுப்பார்” என்றான்.
௧௫அவன் ராஜாவிடம் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப் போகலாமா, போகவேண்டாமா என்று கேட்டான். அதற்கு அவன்: நீர் போம், உமக்கு வாய்க்கும்; யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்; என்றான்.
16 அரசன் அவனிடம், “யெகோவாவின் பெயரில் உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்ல வேண்டாமென எத்தனை தடவை உன்னை நான் ஆணையிட வைக்கவேண்டும்?” எனக் கேட்டான்.
௧௬ராஜா அவனைப் பார்த்து: நீ யெகோவாவுடைய நாமத்தில் உண்மையைத்தவிர வேறொன்றையும் என்னிடம் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைமுறை உன்னை ஆணையிடச் செய்யவேண்டும் என்று சொன்னான்.
17 அப்பொழுது மிகாயா, “இஸ்ரயேலர் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். ‘இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு சமாதானத்துடன் போகட்டும்’ என்று யெகோவா சொன்னார்” என்றான்.
௧௭அப்பொழுது மிகாயா: இஸ்ரவேலர்கள் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது யெகோவா: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
18 அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யோசபாத் அரசனிடம், “அவன் எப்போதும் எனக்கு நன்மையானதையல்ல தீமையானதையே இறைவாக்காகச் சொல்வான் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்றான்.
௧௮அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான்.
19 தொடர்ந்து மிகாயா, “ஆகவே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். யெகோவா தமது அரியணையில் அமர்ந்திருப்பதையும், வலதுபக்கத்திலும் இடது பக்கத்திலும் வானத்தின் எல்லா சேனைகளும் அவரைச் சுற்றி நிற்பதையும் நான் கண்டேன்.
௧௯அப்பொழுது மிகாயா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும்; யெகோவா தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவரின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
20 அப்பொழுது யெகோவா: அந்த சேனையிடம், ‘கீலேயாத்திலுள்ள ராமோத்தைத் தாக்குவதற்கும், அங்கே ஆகாப் சாகும்படி போவதற்கும் அவனைத் தூண்டிவிடுகிறவன் யார்?’ எனக் கேட்டார். “அதற்கு ஒரு ஆவி ஒருவிதமாகவும், இன்னொரு ஆவி இன்னொரு விதமாகவும் வித்தியாசமான யோசனை கூறின.
௨0அப்பொழுது யெகோவா: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படி, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
21 கடைசியாக ஒரு ஆவி முன்னேவந்து யெகோவாவுக்கு முன்பாக நின்று, ‘நான் அவனைத் தூண்டுவேன்’ என்றது.
௨௧அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.
22 “‘எதினால் நீ அதைச் செய்வாய்’ என்று யெகோவா அதைப் பார்த்துக் கேட்டார். “‘நான் போய் அவனுடைய எல்லா இறைவாக்கினர்களின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன்’ என்றது. “‘போய் அவ்வாறே செய், நீ அவனைத் தூண்டி வெற்றிபெறுவாய்’ என யெகோவா கூறினார்.
௨௨எதினால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச்செய்வாய்; போய் அப்படிச் செய் என்றார்.
23 “அவ்வாறே இப்பொழுதும் யெகோவா உனது இறைவாக்கினர் எல்லாருடைய வாயிலும் பொய்யின் ஆவியை வைத்திருக்கிறார். யெகோவா உனக்குப் பேரழிவையே நியமித்திருக்கிறார்” என்றான்.
௨௩ஆதலால் யெகோவா பொய்யின் ஆவியை உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லோருடைய வாயிலும் கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
24 அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா முன்பாகப் போய் மிகாயாவின் முகத்தில் அறைந்தான். பின் அவனிடம், “யெகோவாவின் ஆவியானவர் என்னைவிட்டு உன்னுடன் பேச வரும்போது, எந்த வழியாக வந்தார்” என்றும் மிகாயாவைக் கேட்டான்.
௨௪அப்பொழுது கேனானாவின் மகனாகிய சிதேக்கியா அருகில் வந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, யெகோவாவுடைய ஆவி எந்த வழியாக என்னைவிட்டு உன்னோடு பேசும்படி வந்தது என்றான்.
25 அதற்கு மிகாயா, “நீ ஒளிப்பதற்கு ஒரு உள் அறையினுள் போகும்நாளில் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றான்.
௨௫அதற்கு மிகாயா: நீ ஒளிந்துகொள்ள உள் அறையிலே பதுங்கும் அந்த நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
26 அப்பொழுது இஸ்ரயேலின் அரசனான ஆகாப், “மிகாயாவைப் பிடித்து நகர ஆளுநனான ஆமோனிடமும், அரசனின் மகனான யோவாஸினிடமும் கொண்டுபோய்,
௨௬அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்தின் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் மகனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய்,
27 அவர்களிடம், ‘அரசன் கூறுவது இதுவே: நான் பாதுகாப்பாக திரும்பி வரும்வரையும் இவனைச் சிறையில் போடுங்கள். அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறொன்றையும் கொடுக்கக்கூடாது’” என்று கூறினான்.
௨௭இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு வரும்வரை, இவனுக்கு கொஞ்சம் அப்பத்தையும் கொஞ்சம் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
28 அதற்கு மிகாயா, “நீ பாதுகாப்பாகத் திரும்பி வந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை” என்று சொல்லி, “மக்களே, நீங்கள் எல்லோரும் எனது வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்!” என்றும் சொன்னான்.
௨௮அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பி வருகிறது உண்டானால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள் என்றான்.
29 எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு போனார்கள்.
௨௯பின்பு இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
30 இஸ்ரயேலின் அரசன் யோசபாத்திடம், “நான் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்கு வருகிறேன். நீர் உமது அரச அங்கியை உடுத்திக்கொள்ளும்” என்றான். அப்படியே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்குப் போனான்.
௩0இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் நுழைவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் நுழைந்தான்.
31 இப்பொழுது சீரிய அரசனோ தனது முப்பத்தி இரண்டு தேர்ப்படைத் தளபதிகளிடம், “நீங்கள் இஸ்ரயேலின் அரசனைத் தவிர சிறியவனோ, பெரியவனோ வேறு யாருடனும் சண்டையிட வேண்டாம்” எனக் கட்டளையிட்டிருந்தான்.
௩௧சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவர்களையும் நோக்கி: நீங்கள் சிறியவர்களோடும் பெரியவர்களோடும் யுத்தம்செய்யாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமாத்திரம் யுத்தம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
32 தேர்ப்படை தளபதிகள் யோசபாத்தைக் கண்டபோது, “நிச்சயமாக இவன்தான் இஸ்ரயேலின் அரசன்” என்று நினைத்து அவனைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் கூக்குரலிட்டபோது,
௩௨எனவே, இரதங்களின் தலைவர்கள் யோசபாத்தைக் காணும்போது, இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்செய்ய அவனுக்கு நேராக வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்.
33 தேர்ப்படைத் தளபதிகள் அவன் இஸ்ரயேலின் அரசன் ஆகாப் அல்ல என்பதைக் கண்டபோது, அவனைப் பின்தொடர்வதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.
௩௩இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர்கள் கண்டு அவனைவிட்டு விலகிப்போனார்கள்.
34 ஆனால் ஒருவன் தனது வில்லை உருவி குறிபார்க்காமல் எய்தபோது, இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் கவசத்தின் இடைவெளி வழியாகப் பாய்ந்து அவனைத் தாக்கியது. அப்பொழுது அரசன் தன் தேரோட்டியிடம், “தேரைத் திருப்பிக்கொண்டு என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ. நான் காயப்பட்டு விட்டேன்” என்றான்.
௩௪ஒருவன் தெரியாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன்னுடைய ரத ஓட்டியைப் பார்த்து; நீ திருப்பி என்னை இராணுவத்திற்கு மறுபுறம் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான்.
35 அந்த நாள்முழுவதும் கடும் போர் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. சீரியருக்கு எதிர் புறமாக அரசனுடைய தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் அரசனைச் சாய்த்து வைத்திருந்தார்கள். அவனுடைய காயங்களிலிருந்து இரத்தம் ஓடி தேரின் அடித்தளங்களெல்லாம் வழிந்தது. அந்த நாளின் சாயங்காலமே அவன் இறந்தான்.
௩௫அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.
36 சூரியன் அஸ்தமிக்கும்பொழுது, “ஒவ்வொருவனும் தன்தன் பட்டணத்துக்கும் ஒவ்வொருவனும் தன்தன் நாட்டுக்கும் திரும்பிப்போங்கள்” என்றொரு சத்தம் படைகளிடையே எங்கும் பரவியது.
௩௬பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் அறிவிக்கப்பட்டது.
37 அப்படியே அரசன் இறந்து சமாரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டான். அவர்கள் அவனை அங்கே அடக்கம்பண்ணினார்கள்.
௩௭அப்படியே ராஜா இறந்தபின்பு சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவை சமாரியாவில் அடக்கம்செய்தார்கள்.
38 அவர்கள் அந்தத் தேரை சமாரியாவிலுள்ள குளத்தில் கழுவினார்கள். வேசிகள் அதில் குளிப்பார்கள். யெகோவாவின் வார்த்தை அறிவித்திருந்தபடி நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கின.
௩௮அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது யெகோவா சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கினது.
39 ஆகாபின் ஆட்சிக் காலத்திலுள்ள மற்ற நிகழ்வுகளும், செயல்களும், அவன் தந்தத்தைப் பதித்துக் கட்டிய மாளிகையைப் பற்றியும், அவன் திரும்பக்கட்டிய பட்டணங்களைப் பற்றியும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
௩௯ஆகாபின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின அரண்மனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
40 ஆகாப் தன் முற்பிதாக்களோடு இளைப்பாறினான். அவன் மகன் அகசியா அவன் இடத்தில் அவனுக்குபின் அரசனானான்.
௪0ஆகாப் மரணமடைந்து முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டபின்பு, அவனுடைய மகனாகிய அகசியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
41 இஸ்ரயேல் அரசனாக ஆகாப் பதவி ஏற்ற நான்காம் வருடத்தில் யூதாவில் ஆசாவின் மகன் யோசபாத் அரசனானான்.
௪௧ஆசாவின் மகனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அரசாட்சி செய்த நான்காம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
42 யோசபாத் அரசனானபோது அவனுக்கு முப்பத்தைந்து வயதாயிருந்தது. அவன் எருசலேமில் இருபத்தைந்து வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சில்கியின் மகள் அசுபாள் என்பவள்.
௪௨யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாக இருந்து, இருபத்தைந்து வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; சில்கியின் மகளாகிய அவனுடைய தாயின்பெயர் அசுபாள்.
43 அவன் தனது தகப்பன் ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான். அவற்றைவிட்டு அவன் விலகவில்லை. அவன் யெகோவாவின் பார்வையில் சரியானவற்றைச் செய்தான். ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர்.
௪௩அவன் தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதைவிட்டு விலகாமல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் மேடைகள் இடிக்கப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.
44 அதோடு யோசபாத் இஸ்ரயேல் அரசனுடன் சமாதானமாயுமிருந்தான்.
௪௪யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடு சமாதானமாக இருந்தான்.
45 யோசபாத்தின் ஆட்சியைப்பற்றிய மற்ற நிகழ்வுகளும், அவனுடைய சாதனைகளும், போர்த்திறமைகளும் யூதாவின் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
௪௫யோசபாத்தின் மற்ற செயல்பாடுகளும், அவன் காட்டிய வல்லமையும், அவன் செய்த யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
46 தன் தகப்பன் ஆசாவின் ஆட்சிக் காலத்துக்குப் பின் இன்னமும் மீதியாயிருந்த கோவில்களில், வேசித்தனத்திற்கு தங்களைக் கொடுத்த ஆண் விபசாரக்காரரை நாட்டிலிருந்து அகற்றிவிட்டான்.
௪௬தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாக விட்டிருந்த ஆண் விபசாரக்காரர்களையும் அவனுடைய தேசத்திலிருந்து அற்றுப்போகச்செய்தான்.
47 அந்தக் காலத்தில் ஏதோமில் ஒரு அரசனும் இருக்கவில்லை. ஒரு பிரதிநிதியே அரசாண்டு வந்தான்.
௪௭அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.
48 யோசபாத் தங்கம் கொண்டுவருவதற்கு ஓப்பீருக்குச் செல்ல தர்ஷீசின் கப்பல்களைக் கட்டுவித்தான். ஆயினும் அக்கப்பல்கள் ஒருபோதும் பயணம் செய்யவில்லை. எசியோன் கேபேரில் அவை சேதமடைந்து விட்டன.
௪௮பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன் கேபேரிலே உடைந்துபோனது.
49 அந்த வேளையில் ஆகாபின் மகன் அகசியா யோசபாத்திடம், “என் வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும்” என்றான். ஆனால் யோசபாத் அதை மறுத்துவிட்டான்.
௪௯அப்பொழுது ஆகாபின் மகனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.
50 அதன்பின் யோசபாத் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, அவர்களுடன் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யெகோராம் அவனுடைய இடத்தில் அரசனானான்.
௫0யோசபாத் மரணமடைந்து, தாவீதின் நகரத்தில் தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
51 யூதாவில் யோசபாத் அரசாண்ட பதினேழாம் வருடத்திலேயே ஆகாபுடைய மகன் அகசியா சமாரியாவில் இஸ்ரயேலருக்கு அரசனானான். அவன் இஸ்ரயேலரை இரண்டு வருடங்கள் அரசாண்டான்.
௫௧ஆகாபின் மகனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருடத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்து,
52 அவன் தன் தகப்பனின் வழிகளிலும், தாயின் வழிகளிலும் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழிகளிலும் நடந்தபடியினால் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.
௫௨யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பன் வழியிலும், தன்னுடைய தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து,
53 அவன் தன் தகப்பன் செய்ததுபோல பாகாலை வழிபட்டு, பணிசெய்து இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குக் கோபமூட்டினான்.
௫௩பாகாலை வணங்கி, அதைப் பணிந்துகொண்டு, தன்னுடைய தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபமூட்டினான்.