< 1 இராஜாக்கள் 2 >
1 அரசன் தாவீதுக்கு மரண நாட்கள் நெருங்கியபோது, தன் மகனான சாலொமோனுக்குப் பொறுப்பை ஒப்படைத்தான்.
௧தாவீது மரணமடையும் காலம் நெருங்கியபோது, அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
2 அவன் சாலொமோனிடம், “பூமியில் உள்ள எல்லோரும் போகிற வழியில் நானும் போகப்போகிறேன். நீ தைரியத்துடன் வீரமுள்ளவனாய் இரு.
௨நான் பூமியில் உள்ள யாவரும் மரிப்பதுப் போல மரிக்கப் போகிறேன்; நீ திடன்கொண்டு தைரியமானவனாக இரு.
3 உனது இறைவனாகிய யெகோவா உனக்குச் செய்யும்படி கட்டளையிட்ட யாவற்றையும் கைக்கொள்; அவருடைய வழிகளிலேயே நட. மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறபடி அவருடைய விதிமுறைகளையும், சட்டங்களையும், ஒழுங்குவிதிகளையும் கைக்கொள். அப்பொழுது நீ செய்வதெல்லாவற்றிலும் வளம் பெறுவாய். நீ போகுமிடமெல்லாம் வெற்றிபெறுவாய்.
௩நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திசாலியாக இருப்பதற்கும், யெகோவா என்னைக் குறித்து: உன்னுடைய பிள்ளைகள் தங்களுடைய முழு இதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாக நடக்கும்படித் தங்கள் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கத்தக்க ஆண் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதற்கும்,
4 மேலும் யெகோவா எனக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார்: ‘உன் சந்ததிகள் தாங்கள் வாழும் விதத்தில் கவனமாயிருந்து தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்குமுன் உண்மையாக நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கு ஒரு மனிதன் உனக்கு இல்லாமல் போகமாட்டான் என்று எனக்கு வாக்களித்தாரே.’
௪மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படி அவருடைய கட்டளைகளைக் காப்பாயாக.
5 “இப்பொழுது செருயாவின் மகன் யோவாப் எனக்குச் செய்தது என்ன என்று உனக்குத் தெரியும். அவன் இஸ்ரயேலின் இரு இராணுவத் தளபதிகளான நேரின் மகன் அப்னேருக்கும், ஏத்தேரின் மகன் அமாசாவுக்கும் செய்தது உனக்குத் தெரியும். அவன் அவர்களை ஒரு போர்க்களத்தில் செய்வதுபோல் சமாதான காலத்திலேயே இரத்தத்தைச் சிந்தி கொன்றான். அந்த இரத்தத்தினால் தன் இடுப்பைச் சுற்றியிருந்த பட்டியையும், காலில் இருந்த பாதரட்சைகளையும் கறைப்படுத்தினான்.
௫செருயாவின் மகனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு தளபதிகளாகிய நேரின் மகன் அப்னேருக்கும், ஏத்தேரின் மகன் அமாசாவுக்கும் செய்த காரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன்னுடைய இடுப்பிலுள்ள வாரிலும் தன்னுடைய கால்களில் இருந்த காலணிகளிலும் சிந்தவிட்டானே.
6 உனது ஞானத்தின்படியே அவனுக்குச் செய், அவனை நரைத்த முதுமையான காலத்தில் சமாதானத்துடன் பாதாளத்திற்குப்போக இடங்கொடுக்காதே. (Sheol )
௬ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol )
7 “கீலேயாத்தியனான பர்சிலாயின் மகன்களுக்கு இரக்கம் காட்டி, உன் மேஜையிலிருந்து சாப்பிடுபவர்களுடன் அவர்களையும் சேர்த்துக்கொள். ஏனென்றால் உன் சகோதரன் அப்சலோமுக்குத் தப்பி நான் ஓடிப்போனபோது என்னை அவர்கள் ஆதரித்தார்கள்.
௭கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகன்களுக்குத் தயவுசெய்வாயாக; அவர்கள் உன்னுடைய பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன்னுடைய சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகும்போது, அவர்கள் என்னை ஆதரித்தார்கள்.
8 “நான் மக்னாயீமுக்குப் போன அந்த நாளில் என்னைக் கசப்பான சாபங்களால் சபித்த, பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனியனான கேராவின் மகன் சீமேயி உன்னுடன் இருக்கிறான் என்பதை நினைவில் வைத்துக்கொள். அவன் யோர்தான் நதி அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, ‘நான் உன்னை வாளினால் அழிப்பதில்லை’ என்று யெகோவாவைக்கொண்டு ஆணையிட்டுக் கூறினேன்.
௮மேலும் பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடம் இருக்கிறான்; நான் மகனாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னை மிகவும் மோசமாக சபித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிரே வந்ததால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று யெகோவாமேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.
9 ஆனால் அவனைக் கபடற்றவன் என்று நினையாதே, நீ ஞானமுள்ளவன். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ அறிந்துகொள்வாய். அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகப்பண்ணு” என்றான். (Sheol )
௯ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol )
10 இதன்பின் தாவீது தனது முற்பிதாக்களைப்போல இறந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
௧0பின்பு தாவீது தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
11 தாவீது நாற்பது வருடங்கள் இஸ்ரயேலின் அரசனாயிருந்தான். எப்ரோனில் ஏழு வருடமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருடமும் அரசனாயிருந்தான்.
௧௧தாவீது இஸ்ரவேலை அரசாட்சி செய்த நாட்கள் 40 வருடங்கள்; அவன் எப்ரோனில் 7 வருடங்களும், எருசலேமில் 33 வருடங்களும் ஆட்சிசெய்தான்.
12 இதன்பின் சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் அரியணையில் அரசாண்டான். அவனுடைய அரசு வளம்பெற்று உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.
௧௨சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவனுடைய அரசாட்சி மிகவும் உறுதிப்பட்டது.
13 அப்பொழுது ஒரு நாள் ஆகீத்தின் மகனான அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை காண்பதற்காகப் போனான். பத்சேபாள் அவனைப் பார்த்து, “சமாதானத்துடன் வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள். அவன், “ஆம்; சமாதானத்துடனேயே வந்திருக்கிறேன்” என்றான்.
௧௩ஆகீத்தின் மகனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் வந்தான். நீ சமாதானமாக வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாகத்தான் வருகிறேன் என்றான்.
14 மேலும் அவன், “நான் உம்மிடத்தில் ஒரு காரியம் சொல்லவேண்டும்” என்றான். பத்சேபாள், “அதை நீ கூறலாம்” என்றாள்.
௧௪பின்பு அவன்: உம்மோடு நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
15 அதற்கு அவன், “உமக்குத் தெரிந்தபடி அரசாட்சி என்னுடையதாகவே இருந்தது. இஸ்ரயேலர் எல்லோரும் நான் தங்களுடைய அரசனாக வருவேன் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், எல்லாம் மாறி அரசாட்சி என் சகோதரனுக்குப் போய்விட்டது. யெகோவாவிடமிருந்தே அது அவனுக்குக் கிடைத்திருக்கிறது.
௧௫அப்பொழுது அவன்: ராஜ்ஜியம் என்னுடையதாக இருந்தது என்றும், நான் அரசாளுவதற்கு இஸ்ரவேலர்கள் எல்லோரும் என்னை எதிர்பார்த்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் அரசாட்சி என்னைவிட்டுத் தாண்டி, என்னுடைய சகோதரனுடையதானது; யெகோவாவால் அது அவருக்குக் கிடைத்தது.
16 ஆனால் இப்போது உம்மிடம் ஒரு வேண்டுகோளை நான் கேட்கிறேன். அதை எனக்கு மறுக்கவேண்டாம்” என்றான். அப்போது பத்சேபாள், “அது என்னவென்று எனக்குக் கூறு” என்றாள்.
௧௬இப்பொழுது நான் உம்மிடம் ஒரு விண்ணப்பத்தைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
17 அவன் தொடர்ந்து, “சாலொமோன் உமக்கு எதையும் மறுக்கமாட்டான். ஆகவே அரசனுடன் எனது சார்பில் பேசி சூனேமியாளான அபிஷாகுவை எனக்கு மனைவியாக தரும்படி கேளும்” என்றான்.
௧௭அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை எனக்கு அவர் திருமணம் செய்துகொடுக்க, அவரோடு பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.
18 அதற்கு பத்சேபாள், “நல்லது. நான் உனக்காக அரசனுடன் பேசுவேன்” என்றாள்.
௧௮அதற்கு பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடம் பேசுவேன் என்றாள்.
19 அதோனியாவுக்காக சாலொமோன் அரசனுடன் பேசும்படி பத்சேபாள் அவனிடம் போனாள். அப்போது அரசன் அரியணையிலிருந்து எழுந்து அவளுக்கு முன்னாகப்போய் தலைவணங்கினான். பின் தன் அரியணையில் அமர்ந்துகொண்டான். அரசனின் தாய்க்காக ஒரு அரியணையை வைத்தான். அவள் அவனுடைய வலப்பக்கத்தில் அமர்ந்துகொண்டாள்.
௧௯பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடம் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்து, அவளுக்கு எதிரேவந்து அவளை வணங்கி, தன்னுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன்னுடைய வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஒரு இருக்கையை வைத்தான்.
20 “நான் உன்னிடம் கேட்பதற்கு ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. அதை எனக்கு மறுக்காதே” என்றாள். அப்பொழுது அரசன் அவளைப் பார்த்து, “என் தாயே, அதை என்னிடம் கேளும். நான் மறுக்கமாட்டேன்” என்றான்.
௨0அப்பொழுது அவள்: நான் உம்மிடம் ஒரு சிறிய விண்ணப்பத்தைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என்னுடைய தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.
21 அதற்கு அவள், “உனது சகோதரன் அதோனியாவுக்கு, சூனேமியாளான அபிஷாகுவை மனைவியாகக் கொடு” என்றாள்.
௨௧அப்பொழுது அவள்: சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்குத் திருமணம் செய்துகொடுக்கவேண்டும் என்றாள்.
22 அப்போது சாலொமோன் தன் தாயிடம், “ஏன் அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்கிறீர்? அப்படியானால் எனது அரசாட்சியையும் அவனுக்குக் கேட்கலாமே. ஏனெனில் அவன் எனது மூத்த சகோதரன் அல்லவா. அவனும் ஆசாரியன் அபியத்தாரும், செருயாவின் மகனான யோவாபுமே ஆட்சியைப் பொறுப்பெடுத்துக் கொள்ளட்டும்” என்றான்.
௨௨ராஜாவாகிய சாலொமோன் தன்னுடைய தாயாருக்கு மறுமொழியாக: நீர் சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை அதோனியாவுக்கு ஏன் கேட்கிறாய்? அப்படியானால் ராஜ்ஜியபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் மகன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.
23 மேலும் சாலொமோன் யெகோவாவின் பெயரில் சத்தியம்பண்ணி, “இந்த வேண்டுகோளுக்காக அதோனியா தன் உயிரையே கொடுக்கவேண்டும். கொடுக்காவிட்டால் இறைவன் என்னை எவ்வளவு கடுமையாகவும் தண்டிக்கட்டும்.
௨௩பின்பு சாலொமோன் ராஜா: அதோனியா இந்த வார்த்தையைத் தன்னுடைய உயிருக்குச் சேதம் உண்டாக்கும்படிச் சொல்லாமலிருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யட்டும் என்று யெகோவா மேல் ஆணையிட்டு,
24 என் தகப்பனாகிய தாவீதின் அரியணையில் என்னை உறுதியாக நிலைநிறுத்தி, தாம் வாக்குப்பண்ணியபடி எனக்கு ஒரு சந்ததியையும் தந்த யெகோவா இருப்பது நிச்சயமெனில், இன்று அதோனியா கொல்லப்படவேண்டும் என்பதும் நிச்சயம்” என்றான்.
௨௪இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலை செய்யப்படுவான் என்று என்னை உறுதிப்படுத்தினவரும், என்னை என்னுடைய தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கச்செய்து, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டினவருமாகிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
25 அரசனாகிய சாலொமோன் தான் சொன்னவாறே அதோனியாவைக் கொல்லும்படி யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான். அதன்படி பெனாயா அதோனியாவை வெட்டிக்கொன்றான்.
௨௫ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்; பெனாயா அதோனியாவைக் கண்டுபிடித்து அவனைக் கொன்றுபோட்டான்.
26 அதன்பின் அரசன் ஆசாரியனான அபியத்தாரைப் பார்த்து, “ஆனதோத்திலிருக்கும் உன் வயலுக்குத் திரும்பிப்போ. நீ சாகவே தகுதியுள்ளவன். ஆனால் இப்போது நான் உன்னைக் கொல்வதில்லை. ஏனென்றால் என் தகப்பனாகிய தாவீது ஆட்சிசெய்தபோது, ஆண்டவராகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை நீ சுமந்து சென்றாய். அத்துடன் என் தகப்பனின் எல்லாக் கஷ்டங்களிலும் நீயும் உடன்பங்காளியாயிருந்து, கஷ்டங்களை அனுபவித்தாய்” என்று சொன்னான்.
௨௬ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன்னுடைய நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குரியவனாக இருந்தும், நீ என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் யெகோவாவாகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்ததாலும், என்னுடைய தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீ கூட அநுபவித்ததாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலை செய்யமாட்டேன் என்றான்.
27 ஆனால் சாலொமோன் அபியத்தாரை யெகோவாவின் ஆசாரியனாயிராதபடிக்கு விலக்கிப்போட்டான். இதனால் சீலோவில் ஏலியின் சந்ததிகளைப் பற்றி யெகோவா கூறிய வார்த்தை நிறைவேறியது.
௨௭அப்படியே யெகோவா சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் யெகோவாவுடைய ஆசாரியனாக இல்லாதபடித் தள்ளிப்போட்டான்.
28 யோவாப் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் யெகோவாவின் கூடாரத்துக்குள் ஓடி, பரிசுத்த பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நின்றான். இவன் அப்சலோமின் கலகத்தில் ஈடுபடாதபோதும் அதோனியாவின் கலகத்தில் ஈடுபட்டிருந்தான்.
௨௮நடந்த இந்தச் செய்தி யோவாபுக்கு வந்தபோது, அவன் யெகோவாவுடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்; யோவாப் அப்சலோமின் பக்கம் சாயாதவனாக இருந்தும், அதோனியாவின் பக்கம் சாய்ந்திருந்தான்.
29 யோவாப் யெகோவாவின் கூடாரத்திற்குள் ஓடி பலிபீடத்தின் அருகில் நிற்கிறான் என்று அரசனாகிய சாலொமோனுக்குச் சொல்லப்பட்டது. எனவே அவனைக் கொன்றுபோடும்படி சாலொமோன் யோய்தாவின் மகனான பெனாயாவுக்குக் கட்டளையிட்டான்.
௨௯யோவாப் யெகோவாவின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலிபீடத்தின் அருகில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் மகனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவனைக் கொலைசெய் என்றான்.
30 அப்போது பெனாயா யெகோவாவின் கூடாரத்துக்குப் போய் யோவாபிடம், “அரசன் உன்னை வெளியே வரும்படி கூறுகிறார்” என்றான். அதற்கு அவன், “இல்லை. நான் இங்கேயே சாவேன்” என்றான். எனவே பெனாயா அரசனிடம் போய், “யோவாப் இவ்வாறே பதிலளித்திருக்கிறான்” என்றான்.
௩0பெனாயா யெகோவாவின் கூடாரத்திற்குப் போய், அவனைப் பார்த்து: வெளியே வா என்று ராஜா சொல்லுகிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரமாட்டேன்; இங்கேயே சாவேன் என்றான்; ஆகையால் பெனாயா ராஜாவிடம் போய், யோவாப் இன்னபடி சொல்லி, இன்னபடி எனக்கு பதில் கொடுத்தான் என்று மறுசெய்தி சொன்னான்.
31 அதைக்கேட்ட அரசன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “அவன் சொன்னபடியே செய். அவனைக் கொன்று அடக்கம்பண்ணு. குற்றமில்லாத இரத்தத்தை யோவாப் சிந்திய குற்றத்திலிருந்து என்னையும், என் தகப்பன் குடும்பத்தையும் விடுதலை பெறச் செய்;
௩௧அப்பொழுது ராஜா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து, அவனைக் கொன்று, அடக்கம்செய்து, இவ்விதமாக யோவாப் காரணமில்லாமல் சிந்தின இரத்தத்தை என்னைவிட்டும் என்னுடைய தகப்பன் வீட்டைவிட்டும் விலக்கிப்போடு.
32 அவன் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல், இஸ்ரயேலின் இராணுவத்தளபதி நேரின் மகன் அப்னேரையும், யூதாவின் இராணுவத்தளபதி ஏத்தேரின் மகன் அமாசாவையும் வாளால் வெட்டிக் கொலைசெய்தான். அதற்காக யெகோவாவே அவனைத் தண்டிப்பாராக. அவர்கள் இருவரும் யோவாபைப் பார்க்கிலும் சிறந்தவர்களும், நேர்மையானவர்களுமாய் இருந்தார்கள்.
௩௨அவன் தன்னைவிட நீதியும் நற்குணமும் உள்ள இரண்டு பேர்களாகிய நேரின் மகன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவனையும், ஏத்தேரின் மகன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவனையும் தாக்கி, என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் யெகோவா அவனுடைய தலையின்மேல் திரும்பச்செய்வாராக.
33 அவர்கள் இருவருடைய இரத்தப்பழியும் யோவாபின் தலைமேலும், அவன் சந்ததிகளின் தலைமேலும் என்றைக்கும் இருக்கட்டும். ஆனால் தாவீதின்மேலும், அவர் சந்ததியினர்மேலும், அவர் வீட்டார்மேலும், அவர் அரியணையின்மேலும் யெகோவாவினுடைய சமாதானம் என்றென்றும் இருப்பதாக” என்றான்.
௩௩இப்படியே அவர்களுடைய இரத்தப் பழி என்றும் யோவாபுடைய தலையின்மேலும், அவனுடைய சந்ததியினர்களின் தலையின்மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவருடைய சந்ததியினர்களுக்கும் அவருடைய வீட்டார்களுக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் யெகோவாவாலே சமாதானம் உண்டாயிருக்கவும்கடவது என்றான்.
34 அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயா போய் யோவாப்பை வெட்டிக்கொன்றான். யோவாப் பாலைவனத்திலிருந்த தன் சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
௩௪அப்படியே யோய்தாவின் மகன் பெனாயா போய், அவனைத் தாக்கி அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்திரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம் செய்யப்பட்டான்.
35 மேலும் அரசன் யோவாபுக்குப் பதிலாக யோய்தாவின் மகன் பெனாயாவை இராணுவத் தளபதியாகவும், அபியத்தாருக்குப் பதிலாக சாதோக்கை ஆசாரியனாகவும் நியமித்தான்.
௩௫அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் மகன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் இடத்திலும் வைத்தான்.
36 இதற்குப் பின்பு அரசன் சீமேயியை அழைப்பித்து, “இங்கு எருசலேமில் உனக்கு ஒரு வீட்டைக் கட்டி அங்கே வாழ்ந்திடு. ஆனால் வேறு எங்கேயும் போகாதே.
௩௬பின்பு ராஜா சீமேயியை அழைத்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக்கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேயே குடியிரு.
37 நீ புறப்பட்டு கீதரோன் பள்ளத்தாக்கைக் கடக்கும் நாளில் சாவாய் என்பதை நிச்சயித்துக்கொள். உன் இரத்தப்பழி உன் தலை மேலிருக்கும்” என்றான்.
௩௭நீ வெளியே போய்க் கீதரோன் ஆற்றைக் கடக்கும் நாளில், நீ சாவாய்; அப்பொழுது உன்னுடைய இரத்தப்பழி உன்னுடைய தலையின்மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாக அறிந்துகொள் என்றான்.
38 அதற்கு சீமேயி, “நீர் சொல்வது நல்லது. என் தலைவனான அரசன் சொன்னபடியே உமது அடியானாகிய நான் செய்வேன்” என்று கூறி எருசலேமில் நீண்டநாட்களாய் வாழ்ந்து வந்தான்.
௩௮சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாட்கள் எருசலேமிலே குடியிருந்தான்.
39 ஆனால் மூன்று வருடங்களுக்குப் பின்பு சீமேயியின் அடிமைகள் இருவர் மாக்காவின் மகனான காத்தின் அரசன் ஆகீஸிடம் தப்பி ஓடிவிட்டார்கள். “உனது அடிமைகள் காத் பட்டணத்தில் இருக்கிறார்கள்” என்று சீமேயிக்குச் சொல்லப்பட்டது.
௩௯மூன்று வருடங்கள்சென்றபோது, சீமேயியின் வேலைக்காரர்கள் இரண்டுபேர் மாக்காவின் மகனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவிடம் ஓடிப்போனார்கள்; உன்னுடைய வேலைக்காரர்கள் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள்.
40 இதை சீமேயி கேள்விப்பட்டபோது, தன் கழுதையில் சேணம் பூட்டி, அவர்களைத் தேடி காத் ஊரிலுள்ள ஆகீஸிடம் போனான். அங்கே அவர்களைக் கண்டுபிடித்து, காத்திலிருந்து திரும்பவும் கொண்டுவந்தான்.
௪0அப்பொழுது சீமேயி எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணம் வைத்து, தன்னுடைய வேலைக்காரர்களைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடம் புறப்பட்டுப் போனான்; இப்படி சீமேயி போய், தன்னுடைய வேலைக்காரர்களைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்.
41 சீமேயி எருசலேமைவிட்டு காத் ஊருக்குப் போனதையும், திரும்பி வந்ததையும் சாலொமோன் கேள்விப்பட்டான்.
௪௧சீமேயி எருசலேமிலிருந்து காத் ஊருக்குப் போய், திரும்பி வந்தான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது,
42 அப்போது அரசன் சீமேயியை அழைத்து அவனிடம், “‘இவ்விடத்தை விட்டு வேறு எங்கே போனாலும் அன்றே சாவாய் என்று யெகோவாவின் பெயரில் ஆணையிடும்படி உன்னை நான் எச்சரிக்கவில்லையா’? அதற்கு நீயும், ‘நீர் சொல்வது நல்லது. நான் அதற்குக் கீழ்ப்படிவேன்’ என்று கூறினாயே.
௪௨ராஜா சீமேயியை அழைத்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிற நாளிலே சாவாய் என்பதை நீ நிச்சயமாக அறிந்துகொள் என்று நான் உன்னைக் யெகோவாமேல் ஆணையிடச் செய்து, உனக்கு மிகவும் உறுதியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா?
43 இப்போது ஏன் யெகோவாவுக்கு நீ கொடுத்த வாக்கை நிறைவேற்றாமலும், என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலும் விட்டாய்?” என்றான்.
௪௩நீ யெகோவாவின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாமற்போனது என்ன? என்று சொல்லி,
44 மேலும் அரசன் சீமேயியிடம், “என் தகப்பன் தாவீதுக்கு நீ செய்த எல்லாப் பிழைகளையும் உன் மனதில் நீ அறிவாய். இப்போது உனது பிழையான செயல்களுக்கு யெகோவா பதில் செய்வார்.
௪௪பின்னும் ராஜா சீமேயியைப் பார்த்து: நீ என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்குச் செய்ததும் உன் மனதுக்குத் தெரிந்திருக்கிறதுமான எல்லாத் தீங்கையும் அறிந்திருக்கிறாய்; ஆகையால் யெகோவா உன்னுடைய தீங்கை உன்னுடைய தலையின்மேல் திரும்பச்செய்வார்.
45 ஆனால் சாலொமோன் அரசனோ ஆசீர்வதிக்கப்படுவான். அத்துடன் தாவீதின் அரியணை யெகோவாவுக்குமுன் என்றென்றும் உறுதியாக இருக்கும்” என்றான்.
௪௫ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் யெகோவாவுக்கு முன்பாக உறுதியாக இருக்கும் என்று சொல்லி,
46 அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயாவுக்கு அரசன் கட்டளையிட்டபடி, அவன் போய் சீமேயியை வெட்டிக் கொலைசெய்தான். இதனால் அரசு சாலொமோனின் கைகளில், மேலும் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.
௪௬ராஜா யோய்தாவின் மகனாகிய பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான்; அவன் வெளியே போய், அவனைக் கொன்றுபோட்டான். அரசாட்சி சாலொமோனின் கையிலே உறுதிப்பட்டது.