< 1 கொரிந்தியர் 5 >
1 உங்களிடையே முறைகேடான பாலுறவு இருக்கிறதென்று உண்மையாய் சொல்லப்படுகிறது. அது இறைவனை அறியாதவர் மத்தியிலும் நடவாத ஒன்றாய்க் காணப்படுகிறதே: ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்திருக்கிறான்.
2 அப்படியிருந்தும், நீங்களோ பெருமை கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் துக்கப்பட்டு, இதைச் செய்தவனை உங்கள் ஐக்கியத்தில் இருந்து விலக்கி இருக்கக்கூடாதா?
3 சரீரத்திலே நான் உங்களுடன் இல்லாதிருந்தாலும், ஆவியில் நான் உங்களோடிருக்கிறேன். மேலும், நான் அங்கு இருப்பதுபோல் நினைத்து, நமது கர்த்தராகிய இயேசுவின் பெயரினால் இதைச் செய்தவனுக்குத் தீர்ப்பு வழங்கிவிட்டேன்.
4 நீங்கள் கூடிவரும்பொழுது, ஆவியில் நானும் உங்களோடு இருக்கிறேன். நமது கர்த்தராகிய இயேசுவின் வல்லமையும் உங்களோடு இருக்கிறது.
5 அத்தகைய, இந்த மனிதனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது அவனுடைய மாம்சம் அழிந்துபோனாலும். கர்த்தரின் நாளிலே அவனது ஆவியோ இரட்சிக்கப்படும்.
6 அப்படியிருக்க, நீங்கள் உங்கள் ஆவிக்குரிய நிலையைக்குறித்து பெருமைகொள்வது நல்லதல்ல. சிறிதளவு புளித்தமாவு, பிசைந்தமாவு முழுவதையும் புளிப்புள்ளதாக்கிவிடும் என்பது உங்களுக்குத் தெரியாதோ?
7 பழைய புளிப்பூட்டும் மாவை அகற்றிவிட்டு, புளிப்பில்லாத புதிதாய்ப் பிசைந்தமாவாக இருங்கள். உண்மையிலேயே நீங்கள் அப்படிப்பட்டவர்களே. ஏனெனில், நமது பஸ்கா ஆட்டுக்குட்டியாக கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
8 ஆகையால் நாம் பழைய புளிப்பூட்டும் மாவாகிய, தீமையோடும் கொடுமையோடும் அல்லாமல், புளிப்பில்லாத அப்பமாகிய மனத்தூய்மையோடும் உண்மையோடும் பஸ்கா என்ற பண்டிகையைக் கொண்டாடுவோம்.
9 முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோருடன் கூடிப்பழக வேண்டாம் என்று என் கடிதத்தில் உங்களுக்கு எழுதியிருந்தேன்.
10 இவ்வுலகத்து மக்களை நான் குறிப்பிடவில்லை. விபசாரக்காரர், பேராசையுடையோர், ஏமாற்றுக்காரர், விக்கிரக வழிபாட்டுக்காரர் ஆகியோரை விட்டு விலகுவதென்றால், இவ்வுலகத்தையேவிட்டு போகவேண்டியிருக்குமே.
11 ஆனால் இப்பொழுது நான் உங்களுக்கு எழுதுகிறதாவது, தன்னை ஒரு சகோதரன் என்று கூறிக்கொண்டு, முறைகேடான பாலுறவில் ஈடுபடுகிறவனாகவோ, பேராசைக்காரனாகவோ, விக்கிரக வழிபாடு செய்கிறவனாகவோ, பழிசொல்லித் தூற்றுகிறவனாகவோ, குடிவெறியனாகவோ, அல்லது ஏமாற்றுகிறவனாகவோ இருந்தால், அப்படிப்பட்டவனோடு நீங்கள் கூடிப்பழகக் கூடாது. அப்படிப்பட்டவனுடனே சாப்பிடவும் கூடாது.
12 திருச்சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச் செய்வது என் வேலையா? திருச்சபைக்கு உள்ளே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச் செய்யவேண்டியது நீங்கள் அல்லவா?
13 வெளியே இருக்கிறவர்களைக்குறித்து இறைவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் “அந்தக் கொடிய மனிதனை உங்கள் நடுவிலிருந்து துரத்திவிடுங்கள்.”