< 1 நாளாகமம் 26 >
1 ஆலய வாசல் காவலர்களின் பிரிவுகள்: கோராகியரிலிருந்து ஆசாப்பின் மகன்களில் ஒருவனான கோரேயின் மகன் மெஷெலேமியா.
௧ஆலயத்தின் வாசல்காக்கிறவர்களின் பிரிவுகளாவன: கோராகியர்கள் சந்ததியான ஆசாபின் சந்ததியிலே கோரேயின் மகன் மெஷெலேமியா என்பவன்,
2 மெஷெலேமியாவிற்கு மகன்கள் இருந்தார்கள்: மூத்தவன் சகரியா, இரண்டாவது எதியாயேல், மூன்றாவது செபதியா, நான்காவது யதனியேல்.
௨மெஷெலேமியாவின் மகன்கள் மூத்தவனாகிய சகரியாவும்,
3 ஐந்தாவது ஏலாம், ஆறாவது யோகனான், ஏழாவது எலியோனாய் என்பவர்கள்.
௩யெதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் மகன்களும்,
4 ஓபேத் ஏதோமுக்கும் மகன்கள் இருந்தார்கள்: மூத்தவன் செமாயா, இரண்டாவது யெகோசபாத், மூன்றாவது யோவாக், நான்காவது சாக்கார், ஐந்தாவது நெதனெயேல்,
௪ஓபேத்ஏதோமின் மகன்கள் மூத்தவனாகிய செமாயாவும்,
5 ஆறாவது அம்மியேல், ஏழாவது இசக்கார், எட்டாவது பெயுள்தாயி என்பவர்கள். ஏனெனில் இறைவன் ஓபேத் ஏதோமை ஆசீர்வதித்திருந்தார்.
௫யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் மகன்களுமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
6 ஓபேத் ஏதோமின் மகன் செமாயாவுக்கும்கூட மகன்கள் இருந்தார்கள். அவர்கள் ஆற்றல்மிக்கவர்களாய் இருந்தபடியால், தங்கள் தகப்பன் குடும்பத்தில் தலைவர்களாயிருந்தனர்.
௬அவனுடைய மகனாகிய செமாயாவுக்கும் மகன்கள் பிறந்து, அவர்கள் பெலசாலிகளாக இருந்து, தங்களுடைய தகப்பன் குடும்பத்தார்களை ஆண்டார்கள்.
7 செமாயாவின் மகன்கள்: ஒத்னி, ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்பவர்கள். அவர்களுடைய உறவினர்களான எலிகூ, செமகியா என்பவர்களும் ஆற்றல்மிக்கவர்களாய் இருந்தார்கள்.
௭செமாயாவுக்கு இருந்த மகன்கள் ஒத்னியும், பெலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சபாத் என்னும் அவனுடைய சகோதரர்களும், எலிகூவும் செமகியாவுமே.
8 இவர்கள் எல்லோரும் ஓபேத் ஏதோமின் வம்சங்களாயிருந்தார்கள்; இவர்களும் இவர்களது மகன்களும், உறவினர்களும் வேலைசெய்வதற்கு பலமும் ஆற்றலும் உடையவர்களாயிருந்தனர். ஓபேத் ஏதோமின் சந்ததிகள் எல்லாம் அறுபத்திரண்டுபேர்.
௮ஓபேத்ஏதோமின் சந்ததிகளும் அவர்களுடைய மகன்களும், சகோதரர்களுமாகிய ஊழியத்திற்குப் பலத்த பெலசாலிகளான அவர்களெல்லோரும் அறுபத்திரண்டுபேர்.
9 மெஷெலேமியாவுக்கு மகன்களும் உறவினர்களும் எல்லாமாக பதினெட்டுப்பேர் இருந்தார்கள். அவர்களும் ஆற்றல்மிக்க மனிதராயிருந்தார்கள்.
௯மெஷெலேமியாவின் மகன்களும், சகோதரர்களுமான பெலசாலிகள் பதினெட்டுபேர்.
10 மெராரியனான ஓசாவுக்கும் மகன்கள் இருந்தார்கள்: மூத்த மகன் சிம்ரி. இவன் முதல் பிறந்தவனல்லாதபோதிலும் அவன் தகப்பன் ஓசா இவனை மூத்தவனாக நியமித்திருந்தான்.
௧0மெராரியின் மகன்களில் ஓசா என்பவனுடைய மகன்கள்: சிம்ரி என்னும் தலைவன்; இவன் மூத்தவனாக இல்லாவிட்டாலும் இவனுடைய தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
11 இரண்டாம் மகன் இல்க்கியா, மூன்றாம் மகன் தெபலியா, நான்காம் மகன் சகரியா. ஓசாவின் மகன்களும், அவனுடைய உறவினர்களும் மொத்தம் பதிமூன்றுபேர்.
௧௧இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் மகன்களானவர்கள்; ஓசாவின் மகன்களும் சகோதரர்களும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
12 இந்த வாசல் காவலர்களின் பிரிவினரும், அவர்களுடைய உறவினர்களுக்கிருந்தது போலவே யெகோவாவின் ஆலயத்தில் பணியாற்றும் கடமைகளைத் தலைவர்களுக்கு வழியாகப் பெற்றிருந்தார்கள்.
௧௨காவல்காரர்களான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரர்களுக்கு ஒத்த முறையாகக் யெகோவாவுடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாக பணிவிடை செய்ய இவர்கள் பிரிக்கப்பட்டு,
13 அவர்களுடைய குடும்பங்களுக்கேற்றவாறு இளைஞர், முதியவர் என்ற வேறுபாடின்றி, ஒவ்வொரு வாசலுக்குமென சீட்டுபோடப்பட்டது.
௧௩தங்கள் பிதாக்களின் குடும்பத்தார்களாகிய சிறியவர்களும், பெரியவர்களுமாக இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
14 கிழக்கு வாசலுக்குரிய சீட்டு செலேமியாவிற்கு விழுந்தது. வடக்கு வாசலுக்குரிய சீட்டு அவனுடைய மகனான சகரியாவிற்கு விழுந்தது. அவன் ஞானமுள்ள ஆலோசனை கூறுபவன்.
௧௪கீழ்ப்புறத்திற்கு செலேமியாவுக்கு சீட்டு விழுந்தது; விவேகமுள்ள ஆலோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவனுடைய மகனுக்கு சீட்டு போட்டபோது, அவனுடைய சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
15 தெற்கு வாசலுக்குரிய சீட்டு ஓபேத் ஏதோமிற்கும், பண்டகசாலைக்குரிய சீட்டு அவனுடைய மகன்களுக்கும் விழுந்தன.
௧௫ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவனுடைய மகன்களுக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,
16 மேற்கு வாசலுக்குரிய சீட்டும், மேல்தெருவிலுள்ள சலேகேத் வாசலுக்குரிய சீட்டும் சுப்பீமுக்கும், ஓசாவுக்கும் விழுந்தன. வாசல் காவலர்களுக்குரிய இடங்கள் முறைப்படி அடுத்தடுத்து அமைந்திருந்தன.
௧௬சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
17 நாள்தோறும் கிழக்கில் ஆறு லேவியர்களும், வடக்கில் நான்கு லேவியர்களும், தெற்கில் நான்கு லேவியர்களும் இருந்தனர். களஞ்சியத்திற்கு ஒரே தடவையில் இரண்டு லேவியர்கள் இருந்தார்கள்.
௧௭கிழக்கே லேவியர்களான ஆறுபேரும், வடக்கே பகலிலே நான்குபேர்களும், தெற்கே பகலிலே நான்குபேர்களும், அசுப்பீம் வீட்டின் அருகில் இரண்டிரண்டுபேர்களும்,
18 மேற்கில் இருந்த முற்றத்தின் வீதியில் நான்கு லேவியர்களும், முற்றத்திற்கு இரண்டு லேவியர்களும் நிறுத்தப்பட்டனர்.
௧௮வெளிப்புறமான வாசல் அருகில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நான்குபேர்களும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேர்களும் வைக்கப்பட்டார்கள்.
19 கோராகு, மெராரி ஆகியோரின் வழித்தோன்றல்களிலிருந்து வாசல் காவலர்களின் பிரிவுகள் இவையே.
௧௯கோராகின் சந்ததிகளுக்குள்ளும், மெராரியின் சந்ததிகளுக்குள்ளும், வாசல் காக்கிறவர்களின் பிரிவுகள் இவைகளே.
20 அவர்களுடைய உடனொத்த லேவியர்கள் இறைவனின் ஆலயத்திலிருந்த திரவியக் களஞ்சியங்களுக்கும், அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் களஞ்சியங்களுக்கும் பொறுப்பாயிருந்தனர்.
௨0மற்ற லேவியர்களில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் கவனிக்கிறவனுமாக.
21 லாதான் கெர்சோனியரின் சந்ததிகளில் ஒருவன். கெர்சோனியனான லாதானைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள் யெகியேலியும்,
௨௧லாதானின் மகன்கள் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய மகன்களில் தலைமையான குடும்பத்தலைவர்களாக இருந்த யெகியேலியும்,
22 யெகியேலியின் மகன்களான சேத்தாமும், அவன் சகோதரன் யோயேலுமே. அவர்கள் யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்துக்குப் பொறுப்பாயிருந்தார்கள்.
௨௨யெகியேலியின் மகன்களாகிய சேத்தாமும், அவனுடைய சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை கவனிக்கிறவர்களாக இருந்தார்கள்.
23 மேலும் அம்ராமியர், இத்சாரியர், எப்ரோனியர், ஊசியேலியரிலிருந்து பொறுப்பு கொடுக்கப்பட்டவர்கள்:
௨௩அம்ராமியர்களிலும், இத்சாரியர்களிலும், எப்ரோனியர்களிலும், ஊசியேரியர்களிலும், சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாக இருந்தார்கள்.
24 மோசேயின் மகன் கெர்சோமின் வழித்தோன்றலில் வந்த செபுயேல் என்பவன் திரவிய களஞ்சியங்களுக்குப் பொறுப்பதிகாரியாயிருந்தான்.
௨௪மோசேயின் மகனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷக் கண்காணியாக இருந்தான்.
25 எலியேசர் மூலமாய் அவனுக்கிருந்த உறவினர்கள்: எலியேசரின் மகன் ரெகேபியா, அவனுடைய மகன் எஷாயா, அவனுடைய மகன் யோராம், அவனுடைய மகன் சிக்ரி, அவனுடைய மகன் செலோமித் என்பவர்கள்.
௨௫எலியேசர் மூலமாக அவனுக்கு இருந்த சகோதரர்களானவர்கள், இவனுடைய மகன் ரெகபியாவும், இவனுடைய மகன் எஷாயாவும், இவனுடைய மகன் யோராமும், இவனுடைய மகன் சிக்ரியும், இவனுடைய மகன் செலோமித்துமே.
26 செலோமித்தும், அவனுடைய உறவினர்களும் தாவீது அரசனால் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் களஞ்சியங்களுக்குப் பொறுப்பாயிருந்தனர். இவை குடும்பங்களின் தலைவர்களாயிருந்த ஆயிரம்பேரின் தளபதிகளினாலும், நூறுபேரின் தளபதிகளினாலும், மற்ற தளபதிகளினாலும் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் இருந்தன.
௨௬ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான குடும்பத்தலைவர்களும், தளபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
27 இவர்கள் போர்க்களத்திலிருந்து கொண்டுவந்த கொள்ளைப்பொருட்களில் சிலவற்றை யெகோவாவின் ஆலயத்தைத் திருத்துவதற்காக அர்ப்பணித்தார்கள்.
௨௭யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்த செலோமித்தும் அவனுடைய சகோதரர்களும் கவனித்தார்கள்.
28 இவ்வாறு தரிசனக்காரனான சாமுயேல், கீஷின் மகன் சவுல், நேரின் மகன் அப்னேர், செருயாவின் மகன் யோவாப் ஆகியோரால் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் மற்ற அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் செலோமித்தின் பராமரிப்பிலும் அவனுடைய உறவினர்களுடைய பராமரிப்பிலும் இருந்தன.
௨௮தீர்க்கதரிசியாகிய சாமுவேலும், கீசின் மகனாகிய சவுலும், நேரின் மகனாகிய அப்னேரும், செருயாவின் மகனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவனுடைய சகோதரர்கள் கையின்கீழும் இருந்தது.
29 இத்சாரியரைச் சேர்ந்தவர்கள்: கெனனியாவும், அவனுடைய மகன்களும் ஆலயத்தின் வெளியே வேலைகளைக் கவனிப்பதற்கும், இஸ்ரயேலருக்கு மேலாக நீதிபதிகளாகவும், அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டார்கள்.
௨௯இத்சாரியர்களில் கெனானியாவும் அவனுடைய மகன்களும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரர்களும் அலுவலர்களுமாகவும் இருந்தார்கள்.
30 எப்ரோனியரைச் சேர்ந்தவர்கள்: அஷபியாவும், அவனுடைய உறவினருமாக 1,700 ஆற்றல்மிக்க மனிதர்கள் இருந்தனர். இவர்கள் யோர்தானின் மேற்கேயிருந்த இஸ்ரயேலரில் எல்லா வேலைகளுக்கும், யெகோவாவின் பணிக்கும், அரசனின் பணிக்கும் பொறுப்பாயிருந்தனர்.
௩0எப்ரோனியர்களில் அஷபியாவும் அவனுடைய சகோதரர்களுமாகிய ஆயிரத்து எழுநூறு பெலசாலிகள் யோர்தானுக்கு இந்தப்பக்கம் மேற்கே இருக்கிற இஸ்ரவேலின்மேல் யெகோவாவுடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.
31 எப்ரோனியருக்கு அவர்களுடைய குடும்ப வம்சவரலாற்று பதிவேட்டின்படி யெரியா தலைவனாயிருந்தான். தாவீதின் அரசாட்சியின் நாற்பதாவது வருடத்தில் பதிவேடுகள் ஆராயப்பட்டன. அப்போது எப்ரோனியர் மத்தியில் கீலேயாத்திலுள்ள யாசேர் என்னும் இடத்தில் ஆற்றல்மிக்க மனிதர்கள் இருப்பதைக் கண்டனர்.
௩௧எப்ரோனியர்களில் எரியாவும் இருந்தான்; அவனுடைய குடும்பத்தார்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைவனாக இருந்தவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருடத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து யாசேரிலே மிகுந்த பலமுள்ள வீரர்கள் காணப்பட்டார்கள்.
32 எரியாவுக்கு ஆற்றல்மிக்க குடும்பத் தலைவர்களான உறவினர் 2,700 பேர் இருந்தனர். இவர்களைத் தாவீது அரசன் ரூபனியர், காத்தியர், மனாசேயின் பாதிக்கோத்திரத்தினர் ஆகியோருக்கும், இறைவனோடு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கும், அரசனுடைய விவகாரங்களுக்கும் பொறுப்பாக வைத்தான்.
௩௨பெலசாலிகளாகிய அவனுடைய சகோதரர்கள் இரண்டாயிரத்து எழுநூறு முதன்மை தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுடைய எல்லாக் காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்திற்காகவும், ரூபனியர்கள்மேலும், காத்தியர்கள்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.