< 1 நாளாகமம் 21 >
1 சாத்தான் இஸ்ரயேலருக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடும்படி தாவீதைத் தூண்டினான்.
௧சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி, இஸ்ரவேலைக் கணக்கெடுக்க தாவீதைத் தூண்டிவிட்டது.
2 எனவே தாவீது யோவாபிடமும், படைத் தலைவர்களிடமும், “நீங்கள் போய் பெயெர்செபா தொடங்கி தாண்வரை இருக்கும் இஸ்ரயேலரைக் கணக்கிடுங்கள். எத்தனைபேர் அங்கேயிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்துகொள்வதற்காக எனக்கு அதை அறிவியுங்கள்” என்றான்.
௨அப்படியே தாவீது யோவாபையும், படைத்தளபதிகளையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதுவங்கி தாண்வரை இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்.
3 ஆனால் யோவாப் அவனிடம், “யெகோவா தனது இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. என் தலைவனாகிய அரசனே, அவர்கள் எல்லோரும் எனது தலைவரின் குடிமக்கள் அல்லவா? எனது தலைவர் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்? இஸ்ரயேலின்மேல் இந்தக் குற்றப்பழியை ஏன் கொண்டுவருகிறீர்?” என்று பதிலளித்தான்.
௩அப்பொழுது யோவாப்: யெகோவாவுடைய மக்கள் இப்போது இருக்கிறதைவிட நூறு மடங்காக அவர் பெருகச்செய்வாராக; ஆனாலும் ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, அவர்கள் எல்லோரும் என்னுடைய ஆண்டவனுக்கு பணிவிடை செய்வதில்லையா? என்னுடைய ஆண்டவன் இதை ஏன் விசாரிக்கவேண்டும்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது எதற்காக நடக்கவேண்டும் என்றான்.
4 ஆனால் அரசனின் வார்த்தையோ யோவாப்பை மேற்கொண்டது. எனவே யோவாப் அவ்விடத்தை விட்டுப்போய் இஸ்ரயேல் முழுவதும் சுற்றித்திரிந்து எருசலேமுக்குத் திரும்பிவந்தான்.
௪யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலோங்கியதால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமிற்கு வந்து,
5 யோவாப் தாவீதிடம் போர்செய்யும் வீரர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்தான். இஸ்ரயேலில் வாளேந்தும் வீரர்கள் பதினொரு இலட்சம்பேரும், யூதாவில் நாலு இலட்சத்து எழுபதாயிரம்பேரும் இருந்தனர்.
௫போர் வீரர்களைக் கணக்கெடுத்து, எண்ணிக்கையை தாவீதிடம் கொடுத்தான்; இஸ்ரவேலெங்கும் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேர்களும், யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் நான்குலட்சத்து எழுபதாயிரம்பேர்களும் இருந்தார்கள்.
6 அரசனின் கட்டளை யோவாபுக்கு வெறுப்பூட்டியதனால், அவன் லேவியரையும், பென்யமீனியரையும் கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை.
௬ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாக இருந்ததால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய கணக்கெடுப்பிற்குள் வராதபடி எண்ணாமற்போனான்.
7 இக்கட்டளை இறைவனுக்கு ஏற்காததாய் இருந்தபடியால் அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார்.
௭இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியால் அவர் இஸ்ரவேலைத் தண்டித்தார்.
8 அப்பொழுது தாவீது இறைவனிடம், “நான் இதைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். இப்பொழுதும் உமது அடியவனின் இந்தக் குற்றத்தை நீக்கிவிடும். நான் மகா புத்தியீனமான செயலைச் செய்தேன்” என மன்றாடினான்.
௮தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; பெரிய முட்டாள்தனமாக செய்தேன் என்றான்.
9 யெகோவா தாவீதின் தரிசனக்காரனான காத்திடம்,
௯அப்பொழுது யெகோவா, தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்துடனே பேசி,
10 “நீ போய் தாவீதிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: நான் உனக்கு மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன். நான் உனக்கு எதிராகச் செயல்படுத்தும்படி அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்’ என்று சொல்” என்றார்.
௧0நீ தாவீதிடம் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.
11 எனவே காத் தாவீதிடம்போய், “யெகோவா சொல்வது இதுவே: யெகோவா உனக்குமுன் வைக்கும் இந்த மூன்றிலிருந்து ஏதாவது ஒன்றைத் தெரிந்துகொள்.
௧௧அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி:
12 அதாவது, மூன்று வருடங்கள் பஞ்சம் வரும்; அல்லது மூன்று மாதங்கள் எதிரிகளினால் துரத்தப்பட்டு, அவர்களுடைய வாள் உங்களை மேற்கொள்ளும்; அல்லது மூன்று நாட்கள் யெகோவாவின் வாள், கொள்ளைநோயான இது இஸ்ரயேலின் ஒவ்வொரு பகுதியிலும் யெகோவாவின் வாளேந்தும் தூதனால் அழிவாக வரும். எனவே இப்பொழுது என்னை அனுப்பினவருக்கு நான் பதில்சொல்வதற்கு நீ தீர்மானித்துச் சொல்” என்றான்.
௧௨மூன்று வருடத்துப் பஞ்சமோ? அல்லது உன்னுடைய எதிரியின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன்னுடைய எதிரிகளுக்கு முன்பாக ஓடிப்போகச் செய்யும் மூன்றுமாதத் துரத்துதலோ? அல்லது மூன்றுநாட்கள் யெகோவாவுடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் அழிவு உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் யெகோவாவுடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று யெகோவா சொல்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.
13 தாவீது காத்திடம், “நான் இப்பொழுது பெரிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன்; யெகோவா மிகவும் இரக்கமுடையவராகையால் நான் அவர் கையில் சரணடைவதையே விரும்புகிறேன். நான் மனிதர் கையில் விழாமல் இருக்கவேண்டும்” என்றான்.
௧௩அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் யெகோவாவுடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான்.
14 எனவே யெகோவா இஸ்ரயேலில் கொள்ளைநோயை வரப்பண்ணினார். அதனால் எழுபதாயிரம் இஸ்ரயேல் மக்கள் இறந்தனர்.
௧௪ஆகையால் யெகோவா இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரச்செய்தார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள்.
15 அதோடு எருசலேமையும் அழிப்பதற்கு இறைவன் ஒரு தூதனை அனுப்பினார். ஆனாலும் தூதன் அழிக்கத் தொடங்கினவுடனேயே அவர்களுக்கேற்பட்ட அந்த பேரழிவைக்கண்டு யெகோவா மனதுருகினார். எனவே யெகோவா அழிக்கும் தூதனிடம், “போதும்! உன் கையை எடு” என்று சொன்னார். அப்பொழுது யெகோவாவினுடைய தூதன் எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் நின்றான்.
௧௫எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கும்போது யெகோவா பார்த்து, அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, அழிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; யெகோவாவுடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திற்கு அருகில் நின்றான்.
16 தாவீது மேலே பார்த்தபோது, யெகோவாவின் தூதன் தனது உருவிய வாளை எருசலேமுக்கு மேலாக நீட்டியபடி, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நிற்கக் கண்டான். அப்பொழுது தாவீதும், முதியவர்களும் துக்கவுடை உடுத்தி, யெகோவாவுக்குமுன் தரையில் முகங்குப்புற விழுந்தனர்.
௧௬தாவீது தன்னுடைய கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற யெகோவாவுடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன்னுடைய கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் சாக்கைப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
17 தாவீது இறைவனிடம், “இராணுவவீரரைக் கணக்கிடும்படி கட்டளையிட்டவன் நான் அல்லவா? செய்யத்தகாததைச் செய்து பாவம் செய்தவன் நான்தானே! இந்த ஆடுகள் செய்தது என்ன? என் இறைவனாகிய யெகோவாவே, உம்முடைய கை எனக்கும் என் குடும்பத்திற்கும் விரோதமாய் இருக்கட்டும். இந்தக் கொள்ளைநோய் உமது மக்கள்மேல் இராதபடி செய்யும்” என மன்றாடினான்.
௧௭தாவீது தேவனை நோக்கி: மக்களை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவம் செய்தேன்; தீங்கு நடக்கச்செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என்னுடைய தேவனாகிய யெகோவாவே, தண்டிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய மக்களுக்கு விரோதமாக இராமல், எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டிற்கும் விரோதமாக இருப்பதாக என்றான்.
18 அப்பொழுது யெகோவாவின் தூதன், எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி தாவீதுக்கு சொல் என காத்திற்குக் கட்டளையிட்டார்.
௧௮அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று யெகோவாவுடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.
19 எனவே யெகோவாவின் பெயரால் காத் கூறியவற்றிக்குத் தாவீது கீழ்ப்படிந்தான்.
௧௯அப்படியே தாவீது யெகோவாவின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படி போனான்.
20 அந்நேரத்தில் ஒர்னான் கோதுமையை சூடடித்துக் கொண்டிருந்தான். ஒர்னான் திரும்பிப் பார்த்தபோது தூதனைக் கண்டான்; அவனோடிருந்த அவனுடைய நான்கு மகன்களும் ஒளிந்துகொண்டனர்.
௨0ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நான்கு மகன்களும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளிந்துகொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான்.
21 தாவீது தன்னிடம் வருவதை ஒர்னான் கண்டபோது, உடனே அவன் சூடடிக்கும் களத்தை விட்டுப்போய் தாவீதுக்கு முன்னால் முகங்குப்புற விழுந்து வணங்கினான்.
௨௧தாவீது ஒர்னானிடம் வந்தபோது, ஒர்னான் கவனித்து தாவீதைப் பார்த்து, அவனுடைய களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைவரை குனிந்து தாவீதை வணங்கினான்.
22 தாவீது ஒர்னானிடம், “கொள்ளைநோய் மக்களைவிட்டு நீங்கும்படியாக, நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டுவதற்கு உன்னுடைய சூடடிக்கும் களத்தை கொடு. அதன் முழு விலையையும் நான் உனக்குத் தருகிறேன்” என்றான்.
௨௨அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி அதை எனக்குக் கொடு; வாதை மக்களைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதை உரிய விலைக்குக் கொடு என்றான்.
23 அதற்கு ஒர்னான் தாவீதிடம், “எனது தலைவனாகிய அரசர் அதை எடுத்து அவரது விருப்பப்படியெல்லாம் செய்வாராக. நான் தகனபலிக்குக் காளையையும், விறகிற்கு மரத்தாலான சூடடிக்கும் உருளைகளையும், தானிய காணிக்கைக்காக கோதுமையையும் தருவேன். இவை எல்லாவற்றையும் நான் தருவேன்” என்றான்.
௨௩ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் அதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்க தகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், உணவுபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான்.
24 ஆனால் தாவீது அரசன் ஒர்னானிடம், “அப்படியல்ல, நான் முழு விலையையும் தருவேன். நான் யெகோவாவுக்கு உன்னிடத்திலிருந்து உன்னுடைய எதையும் எடுக்கவோ, நான் செலவு செய்யாமல் ஒரு காணிக்கையைப் பலியிடவோ மாட்டேன்” என்றான்.
௨௪அதற்கு தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாக வாங்கி, யெகோவாவுக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை உரிய விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,
25 எனவே, தாவீது அந்த இடத்தின் மதிப்புக்குரிய அறுநூறு சேக்கல் நிறையுள்ள தங்கத்தை ஒர்னானுக்குக் கொடுத்தான்.
௨௫தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் எடையுள்ள பொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
26 அங்கே தாவீது அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதில் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினான். அவன் யெகோவாவைக் கூப்பிட்டான். அப்போது யெகோவா வானத்திலிருந்து நெருப்பை தகனபலிபீடத்தில் இறங்கப்பண்ணி அவனுக்குப் பதிலளித்தார்.
௨௬அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்திரவு கொடுத்ததுமல்லாமல்,
27 அப்போது யெகோவா தூதனிடம் பேசினார். அவன் தனது வாளை உறையில் போட்டான்.
௨௭தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்.
28 அந்த நேரத்தில் எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் தனக்கு யெகோவா பதிலளித்ததால், தாவீது அங்கேயே பலிகளைச் செலுத்தினான்.
௨௮எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே யெகோவா தனக்கு பதில் சொன்னதை தாவீது அந்த காலத்திலே கண்டு அங்கேயே பலியிட்டான்.
29 மோசே பாலைவனத்தில் கட்டிய யெகோவாவின் கூடாரமும், தகன பலிசெலுத்தும் பலிபீடமும் அந்நாட்களில் கிபியோனின் மேட்டில் இருந்தது.
௨௯மோசே வனாந்திரத்தில் உண்டாக்கின யெகோவா தங்குமிடமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
30 யெகோவாவின் தூதனின் வாளுக்குத் தாவீது பயந்ததினால், இறைவனிடம் விசாரிக்கும்படி அந்த பலிபீடத்திற்குமுன் போகமுடியவில்லை.
௩0தாவீது யெகோவாவுடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கமுடியாமலிருந்தது.