< 1 நாளாகமம் 10 >
1 பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்கு முன்பாக தப்பியோடினர். அநேகர் கில்போவா மலையில் வெட்டப்பட்டு விழுந்தனர்.
௧பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம் செய்தார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டப்பட்டு விழுந்தார்கள்.
2 பெலிஸ்தியர் சவுலையும், அவனுடைய மகன்களையும் பின்தொடர்ந்து துரத்திச்சென்று அவர்களில் யோனத்தானையும், அபினதாபையும், மல்கிசூவாவையும் கொன்றார்கள்.
௨பெலிஸ்தர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் மகன்களாகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள்.
3 சவுலைச் சுற்றிலும் யுத்தம் தீவிரமடைந்தது. வில்வீரர்கள் நெருங்கிவந்து அவனைக் காயப்படுத்தினர்.
௩சவுலுக்கு விரோதமாக போர் பலத்தது; வில்வீரர்கள் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரர்களுக்கு மிகவும் பயந்து,
4 அப்பொழுது சவுல் தனது யுத்த ஆயுதங்களைச் சுமப்பவனிடம், “அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு உனது வாளினால் என்னை உருவக்குத்து” என்றான். ஆனால் அவனுடைய யுத்த ஆயுதங்களைச் சுமப்பவன் பயத்தினால் அப்படிச் செய்யவில்லை. எனவே சவுல் தன் சொந்த வாளை எடுத்து அதன்மேல் விழுந்தான்.
௪தன்னுடைய ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன்னுடைய பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதால் அப்படி செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை ஊன்றி அதின்மேல் விழுந்தான்.
5 யுத்த ஆயுதம் சுமப்பவன் சவுல் இறந்ததைக் கண்டதும் தானும் தனது வாள்மேல் விழுந்து இறந்தான்.
௫சவுல் செத்துப்போனதை அவனுடைய ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான்.
6 இவ்வாறு சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் இறந்தனர்; அவனுடைய முழுக் குடும்பமும் ஒருமித்து அழிந்துபோயிற்று.
௬அப்படியே சவுலும், அவனுடைய மூன்று மகன்களும், அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இறந்துபோனார்கள்.
7 பள்ளத்தாக்கிலே இருந்த இஸ்ரயேல் மக்கள் போர்வீரர் ஓடிப்போவதையும், சவுலும் அவன் மகன்களும் இறந்துபோனதையும் கண்டபோது, அவர்களும் தாங்கள் இருந்த பட்டணங்களைவிட்டு தப்பியோடினர். உடனே பெலிஸ்தியர் அங்கே வந்து குடியேறினர்.
௭மக்கள் பயந்தோடியதையும், சவுலும் அவனுடைய மகன்களும் இறந்துபோனதையும், பள்ளத்தாக்கிலுள்ள இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது தங்களுடைய பட்டணங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் வந்து, அவைகளில் குடியிருந்தார்கள்.
8 மறுநாள் இறந்தவர்களின் உடைமைகளை எடுத்துக்கொள்ள பெலிஸ்தியர் வந்தபோது, சவுலும் அவனுடைய மகன்களும் கில்போவா மலையில் இறந்துகிடக்கக் கண்டார்கள்.
௮வெட்டப்பட்டவர்களின் ஆடைகளை எடுத்துக்கொள்ளப் பெலிஸ்தர்கள் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக்கண்டு,
9 எனவே அவர்கள் அவனுடைய உடையைக் கழற்றி, தலையை வெட்டி அவனுடைய யுத்த கவசங்களையும் எடுத்துக்கொண்டார்கள். பின்பு அச்செய்தியை தங்கள் தெய்வங்களுக்கும் தங்கள் மக்களுக்கும் அறிவிக்கும்படி, தூதுவர்களை பெலிஸ்திய நாடு எங்கும் அனுப்பினார்கள்.
௯அவனுடைய ஆடைகளையும், அவனுடைய தலையையும், அவனுடைய ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்களுடைய விக்கிரகங்களுக்கும் மக்களுக்கும் அதை அறிவிக்கும்படி பெலிஸ்தர்களுடைய தேசத்தைச்சுற்றிலும் செய்தி அனுப்பி,
10 அவர்கள் அவனுடைய ஆயுதங்களை தங்கள் தெய்வங்களின் கோவிலில் வைத்தனர். அவனுடைய தலையையோ தாகோனின் கோவிலில் கட்டித் தொங்கவிட்டனர்.
௧0அவனுடைய ஆயுதங்களைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே வைத்து, அவனுடைய தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள்.
11 பெலிஸ்தியர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையும் கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டண மக்கள் கேள்விப்பட்டார்கள்.
௧௧பெலிஸ்தர்கள் சவுலுக்கு செய்த எல்லாவற்றையும் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார்கள் எல்லோரும் கேட்டபோது,
12 அப்பொழுது அவர்களின் வலிமைவாய்ந்த மனிதர்கள் சென்று, சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் யாபேசுக்குக் கொண்டுவந்தார்கள். அங்கே யாபேசிலுள்ள ஒரு கர்வாலி மரத்தின் கீழே எலும்புகளை அடக்கம்பண்ணி ஏழு நாட்கள் உபவாசம் இருந்தார்கள்.
௧௨பெலசாலிகள் எல்லோரும் எழுந்துபோய், சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்களுடைய எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்செய்து, ஏழுநாட்கள் உபவாசம் இருந்தார்கள்.
13 சவுல் யெகோவாவுக்கு முன்பாக உண்மையற்றவனாகக் காணப்பட்டதால் இறந்தான்; அதோடு அவன் யெகோவாவினுடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல் குறிபார்ப்பவர்களிடத்திலும் ஆலோசனை பெற்றான்.
௧௩அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான்.
14 அவன் யெகோவாவிடம் விசாரிக்கவில்லை. எனவே யெகோவா அவனைக் கொன்று, அரசாட்சியை ஈசாயின் மகனான தாவீதிற்குக் கொடுத்தார்.
௧௪அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்ஜியபாரத்தை ஈசாயின் மகனாகிய தாவீதிடம் ஒப்படைத்தார்.