< சங்கீதம் 15 >

1 தாவீதின் பாடல். யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்?
தாவீதின் சங்கீதம். யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்? உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்?
2 உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள், நீதியானதைச் செய்கிறவர்கள், உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்;
3 அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும், தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும், தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள், தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள், மற்றவர்களை நிந்திக்காதவர்கள்;
4 ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான்.
இழிவானவனை அவமதிப்பவர்கள், யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்; ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும் மனதை மாற்றாதவர்கள்;
5 தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள், குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள். இவ்வாறு வாழ்கிறவர்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

< சங்கீதம் 15 >