< ஆதியாகமம் 29 >

1 யாக்கோபு பயணம்செய்து, கிழக்கு தேசத்தாரிடத்தில் போய்ச் சேர்ந்தான்.
பின்பு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்குத் திசையாரின் நாட்டிற்குப் போனான்.
2 அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே சேர்க்கப்பட்டிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணறு ஒரு பெரிய கல்லினால் மூடப்பட்டிருந்தது.
அங்குள்ள வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே மூன்று ஆட்டுமந்தைகள் படுத்திருப்பதையும் அவன் கண்டான்; அக்கிணற்றில் இருந்தே அவற்றுக்குத் தண்ணீர் கொடுக்கப்படும். கிணற்றின் வாயை மூடியிருந்த கல் பெரிதாயிருந்தது.
3 அந்த இடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கும் கல்லை மேய்ப்பர்கள் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்பிருந்ததுபோல கிணற்றை மூடிவைப்பார்கள்.
எல்லா மந்தைகளும் சேர்ந்தவுடன் மேய்ப்பர்கள் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லைப் புரட்டி, செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் கொடுப்பார்கள். அதன்பின் திரும்பவும் அக்கல்லைக் கிணற்றின் வாயின்மேல் முன்பிருந்த இடத்தில் புரட்டி வைப்பார்கள்.
4 யாக்கோபு அவர்களைப் பார்த்து: “சகோதரர்களே, நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்” என்றான்; அவர்கள், “நாங்கள் ஆரான் ஊரைச் சேர்ந்தவர்கள்” என்றார்கள்.
யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “என் சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆரான் ஊரிலிருந்து வருகிறோம்” என்றார்கள்.
5 அப்பொழுது அவன்: “நாகோரின் மகனாகிய லாபானை அறிவீர்களா” என்று கேட்டான்; “அறிவோம்” என்றார்கள்.
யாக்கோபு அவர்களிடம், “உங்களுக்கு நாகோரின் பேரன் லாபானைத் தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “ஆம்; எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
6 “அவன் சுகமாயிருக்கிறானா” என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: “சுகமாயிருக்கிறான்; அவனுடைய மகளாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்” என்று சொன்னார்கள்.
“அவர் சுகமாயிருக்கிறாரா?” என்று யாக்கோபு விசாரித்தான். “சுகமாயிருக்கிறார்; இதோ அவருடைய மகள் ராகேல் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்” என்றார்கள்.
7 அப்பொழுது அவன்: “இன்னும் அதிக நேரமிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற நேரமல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம்” என்றான்.
அதற்கு யாக்கோபு அவர்களிடம், “இன்னும் சூரியன் மறையவில்லையே; இது மந்தைகளைச் சேர்க்கிற நேரமும் இல்லை. ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுத்து மறுபடியும் மேயவிடலாம்” என்றான்.
8 அதற்கு அவர்கள்: “எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கிற கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்றார்கள்.
அதற்கு அவர்கள், “எல்லா மந்தைகளும் சேரும்வரை அப்படிச் செய்யமுடியாது. சேர்ந்ததும் கிணற்றின் வாயிலிருக்கும் கல் புரட்டப்படும். அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்றார்கள்.
9 அவர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில், ராகேல் மந்தை மேய்ப்பவளாய் இருந்தபடியால், தன் தகப்பனின் ஆடுகளுடன் அங்கே வந்தாள்.
10 ௧0 யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய மகளாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
யாக்கோபு தன் தாயின் சகோதரன் லாபானின் மகள் ராகேலையும், லாபானின் செம்மறியாடுகளையும் கண்டவுடனே, அவன் கிணற்றண்டை போய் அதன் வாயிலிருந்த கல்லை உருட்டி, தன் மாமனின் செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
11 ௧௧ பின்பு யாக்கோபு ராகேலை முத்தம்செய்து, சத்தமிட்டு அழுது,
பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து சத்தமிட்டு அழத்தொடங்கினான்.
12 ௧௨ தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் மகனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.
அவன் ராகேலிடம், “நான் உன் தகப்பனின் உறவினன்; ரெபெக்காளின் மகன்” என்று சொன்னான். உடனே அவள் ஓடிப்போய் அதைத் தன் தகப்பனுக்குச் சொன்னாள்.
13 ௧௩ லாபான் தன் சகோதரியின் மகனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைத் தழுவி முத்தம்செய்து, தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாக லாபானுக்குச் சொன்னான்.
தன் சகோதரியின் மகன் யாக்கோபைப் பற்றிய செய்தியைக் கேட்ட லாபான் அவனைச் சந்திப்பதற்காக விரைவாய் வந்தான். அவன் அவனைக் கட்டி அணைத்து, முத்தமிட்டு, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். நடந்த எல்லாவற்றையும் யாக்கோபு தன் மாமன் லாபானுக்கு சொன்னான்.
14 ௧௪ அப்பொழுது லாபான்: “நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன்” என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.
அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “நீ என் சொந்த இரத்த சம்மந்தமான உறவினன்” என்றான். யாக்கோபு லாபானுடன் ஒரு மாதம் தங்கியிருந்தான்.
15 ௧௫ பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: “நீ என் மருமகனாயிருப்பதால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்”, சொல் என்றான்.
அதன்பின்பு லாபான் யாக்கோபிடம், “நீ எனக்கு உறவினன் என்பதால், கூலியில்லாமல் எனக்கு வேலைசெய்ய வேண்டுமோ? நீ விரும்பும் கூலியைக் கேள்” என்றான்.
16 ௧௬ லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள்; மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.
லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.
17 ௧௭ லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்ப்பதற்கு அழகுள்ளவளாக இருந்தாள்.
லேயாள் பார்வை குறைந்த கண்களை உடையவள். ராகேலோ நல்ல உடலமைப்பும் அழகும் உடையவள்.
18 ௧௮ யாக்கோபு ராகேல் மீது பிரியப்பட்டு: “உம்முடைய இளைய மகளாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருடங்கள் வேலை செய்கிறேன்” என்றான்.
யாக்கோபு ராகேலை நேசித்தான். எனவே அவன் லாபானிடம், “உமது இளையமகள் ராகேலுக்காக நான் உம்மிடம் ஏழு வருடங்கள் வேலை செய்வேன்” என்றான்.
19 ௧௯ அதற்கு லாபான்: “நான் அவளை வேறொருவனுக்குக் கொடுக்கிறதைவிட, அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தங்கியிரு” என்றான்.
அதற்கு லாபான், “நான் அவளை வேறொருவனுக்குக் கொடுப்பதைப் பார்க்கிலும் உனக்குக் கொடுப்பது நல்லது; நீ என்னுடன் இங்கேயே தங்கியிரு” என்றான்.
20 ௨0 அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான்; அவள் மேலிருந்த பிரியத்தினாலே அந்த வருடங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.
அப்படியே யாக்கோபு ராகேலை அடைவதற்காக லாபானிடம் ஏழு வருடங்கள் வேலைசெய்தான். அவன் ராகேலின்மேல் வைத்திருந்த நேசத்தினால், அந்த ஏழு வருடங்களும் அவனுக்கு சிலநாட்கள் போலவே இருந்தன.
21 ௨௧ பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: “என் நாட்கள் நிறைவேறிவிட்டதால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும்” என்றான்.
பின்பு யாக்கோபு லாபானிடம், “நான் உம்மிடம் உடன்பட்ட காலம் நிறைவாகிவிட்டது; நான் ராகேலை திருமணம் செய்துகொள்ளும்படி அவளை எனக்குக் கொடும்” என்றான்.
22 ௨௨ அப்பொழுது லாபான் அந்த இடத்து மனிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து விருந்துசெய்தான்.
அப்பொழுது லாபான், அந்த இடத்தின் மக்களையெல்லாம் ஒன்றாய்க் கூட்டி, ஒரு விருந்து கொடுத்தான்.
23 ௨௩ அன்று இரவிலே அவன் தன் மகளாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.
ஆனால் அன்று இரவு லாபான், தன் மகள் லேயாளை அழைத்துக் கொண்டுபோய், யாக்கோபிடம் கொடுத்தான். யாக்கோபு அவளுடன் உறவுகொண்டான்.
24 ௨௪ லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் மகளாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
லாபான் தன் வீட்டுப் பணிப்பெண் சில்பாளை தன் மகள் லேயாளுக்குப் பணிப்பெண்ணாக அனுப்பினான்.
25 ௨௫ காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: “ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்பு ஏன் என்னை ஏமாற்றினீர்” என்றான்.
பொழுது விடிந்ததும், யாக்கோபு தன்னுடன் இருந்தவள் லேயாள் என்பதைக் கண்டான். அப்பொழுது யாக்கோபு லாபானிடம், “எனக்கு நீர் செய்திருப்பது என்ன? நான் ராகேலுக்காக அல்லவோ உம்மிடம் வேலைசெய்தேன்; நீர் ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்று கேட்டான்.
26 ௨௬ அதற்கு லாபான்: “மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இந்த இடத்தின் வழக்கம் இல்லை.
அதற்கு லாபான், “மூத்தவள் இருக்க இளைய மகளைத் திருமணம் செய்து கொடுப்பது இங்கு எங்கள் வழக்கமல்ல.
27 ௨௭ இவளுடைய ஏழு நாட்களை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருடங்கள் என்னிடத்திலே வேலைசெய்” என்றான்.
மணமகளுக்குரிய ஏழு நாட்களை நீ நிறைவேற்று. பின்பு உனக்கு இளைய மகளையும் கொடுப்போம், அவளுக்காகவும் இன்னும் ஏழு வருடங்கள் நீ என்னிடத்தில் வேலைசெய்” என்றான்.
28 ௨௮ அப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாட்களை நிறைவேற்றினான். அப்பொழுது தன் மகளாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
யாக்கோபு அப்படியே செய்தான். லேயாளுக்குரிய ஏழு நாட்களையும் அவன் நிறைவேற்றியதும் லாபான் தன் மகள் ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
29 ௨௯ மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் மகளாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
லாபான் தன் வீட்டுப் பணிப்பெண் பில்காளை தன் மகள் ராகேலுக்குப் பணிப்பெண்ணாகக் கொடுத்தான்.
30 ௩0 யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைவிட ராகேலை அவன் அதிகமாக நேசித்து, பின்னும் ஏழு வருடங்கள் அவனிடத்தில் வேலை செய்தான்.
யாக்கோபு ராகேலுடன் உறவுகொண்டான், யாக்கோபு லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசித்தான். அவன் ராகேலுக்காக மேலும் ஏழு வருடங்கள் லாபானிடம் வேலைசெய்தான்.
31 ௩௧ லேயாள் அற்பமாக எண்ணப்பட்டாள் என்று யெகோவா கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.
லேயாள் நேசிக்கப்படாமல் இருந்ததை யெகோவா கண்டபோது, அவள் கருத்தரிக்கும்படி செய்தார். ராகேலோ மலடியாய் இருந்தாள்.
32 ௩௨ லேயாள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “யெகோவா என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் கணவன் என்னை நேசிப்பார்” என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.
லேயாள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றாள். “யெகோவா என் துன்பத்தைக் கண்டார்; நிச்சயம் என் கணவர் இப்பொழுது என்னிடம் அன்பாயிருப்பார்” என்று அவள் சொல்லி அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.
33 ௩௩ மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “நான் அற்பமாக எண்ணப்பட்டதைக் யெகோவா கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார்” என்று சொல்லி, அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள்.
மறுபடியும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “நான் நேசிக்கப்படவில்லை என்பதை யெகோவா கண்டு இந்த மகனையும் எனக்குக் கொடுத்தார்” என்று சொல்லி அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள்.
34 ௩௪ பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றதால் அவர் இப்பொழுது என்னோடு சேர்ந்திருப்பார்” என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள்.
திரும்பவும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “நான் என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றபடியால், அவர் இப்பொழுது என்னுடன் ஒன்றிணைந்திருப்பார்” என்று சொன்னாள். அதனால் அவன் லேவி என்று பெயரிடப்பட்டான்.
35 ௩௫ மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “இப்பொழுது யெகோவாவைத் துதிப்பேன்” என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள்; பின்பு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோனது.
மீண்டும் அவள் கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “இப்பொழுது நான் யெகோவாவைத் துதிப்பேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள். அதன்பின்பு அவள் பிள்ளைகள் பெறவில்லை.

< ஆதியாகமம் 29 >